7 September 2013

வருத்தப்படாத வாலிபர் சங்கம் - திரை விமர்சனம்

வருத்தப்படாத வாலிபர் சங்கம் - திரை விமர்சனம் ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ ஜாலியான, பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த குடும்பத்துடன் சேர்ந்து முகம் சுழிக்காமல் பார்க்கக்கூடிய, காமெடியான படம் என்று சொன்னால் அது மிகையாகாது.திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்த அழகான ஊர்தான் சிலுக்குவார்பட்டி. அங்கே வருத்தப்படாத வாலிபர் சங்கத்திற்கு தலைவராக சிவகார்த்திகேயனும், செயலாளராக சூரியும் இருக்கின்றனர். இதே ஊரின் தலைவராக சத்யராஜ் வருகிறார். இவருக்கு 3 பெண்கள் உள்ளனர். ஊரில் ஏற்படும் வாய்தகராறில் சத்யராஜ், தன்னுடைய பெண்கள் யாரையும் காதலித்து ஓடிப்போய் திருமணம் செய்துகொண்டால் காதை அறுத்துக் கொள்வேன் என சபதம் கொள்கிறார். இதனால் தன்னுடைய இரண்டு மகள்களுக்கும் அவசர அவசரமாக அவர்கள் படிக்கும் வயதிலேயே திருமணம் செய்து வைத்துவிடுகிறார்.

3-வது பெண்ணான நாயகி ஸ்ரீதிவ்யாவுக்கு திருமணம் செய்து முடித்துவைக்க முடிவு செய்யும் வேலையில், சிவகார்த்திகேயன் நுழைந்து இந்த திருமணத்தை நிறுத்தி விடுகிறார். இதனால், சிவகார்த்திகேயனுக்கும்  சத்யராஜுக்கும் மோதல் ஏற்படுகிறது. மறுபுறம், சிவகார்த்திகேயனை ஸ்ரீதிவ்யா ஒருதலையாக காதலிக்க ஆரம்பித்து விடுகிறார். 

ஆனால், சிவகார்த்திகேயனோ, அதே ஊரில் டீச்சராக வேலை பார்க்கும் பிந்துமாதவியை ஒருதலையாக காதலிக்கிறார். பிந்துமாதவியோ இவரது காதலை ஏற்காமல் வேறு ஒருவரை திருமணம் செய்துகொண்டு போய்விடுகிறார்.

காதல் தோல்வியில் மனம் நொந்து வாடும் சிவகார்த்திகேயன், கோவில் திருவிழாவின்போது ஸ்ரீதிவ்யாவை சேலையில் பார்த்ததும் சொக்கிப் போகிறார். இதனால், அவள்மீது காதலிலும் விழுகிறார். இருவரும் தங்கள் காதலை பரிமாறிக்கொண்டு வானம்பாடி பறவைகளாய் சுற்றித் திரிகின்றனர். இருவரும் காதலிப்பது ஒருநாள் சத்யராஜ் காதுகளுக்கு போகிறது. இவர்களுடைய காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்.

பின்னர், சிவகார்த்திகேயன்-ஸ்ரீதிவ்யா காதல் என்னவாயிற்று? சத்யராஜ் இவர்களை ஒன்று சேர்த்து வைத்தாரா? என்பதே மீதிக்கதை.சிவகார்த்திகேயன் தன்னுடைய வழக்கமான பாணியில் நக்கல், நையாண்டி, டைமிங் காமெடி என படம் முழுக்க ஸ்கோர் செய்கிறார். படத்தில் இரண்டு ஹீரோக்கள் என்றுதான் சொல்லவேண்டும். சிவகார்த்திகேயனுக்கு படத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் சமஅளவு பங்கு ‘பரோட்டா’ சூரிக்கும் கொடுக்கப்பட்டுள்ளது. இருவரும் சேர்ந்து செய்யும் ரகளை வயிறு குலுங்க சிரிக்க வைக்கிறது. சத்யராஜ் ‘சிவானாண்டி’யாகவே வாழ்ந்திருக்கிறார் என்றுதான் சொல்லவேண்டும். படம் முழுவதும் கெத்தாக வலம் வருகிறார்.


ஸ்ரீதிவ்யா அழகான கிராமத்து பெண்ணாக படம் முழுக்க வலம் வருகிறார். படத்தில் இவரது நடிப்பை வெளிக்காட்ட வாய்ப்பு இல்லாவிட்டாலும் கொடுத்த வாய்ப்பை திறம்பட செய்திருக்கிறார். காதல் காட்சிகளில் இவருடைய கண்கள் அலைபாயும் அழகை ரசிக்கும்படியாக இருக்கிறது. பிந்துமாதவி டீச்சராக வருகிறார். சில சீன்களை வந்துவிட்டு மறைந்து போகிறார்.

தொடர்ந்து காமெடி படங்களை கொடுத்து ஹிட் அடித்த ராஜேஷின் உதவியாளர் பொன்ராம் இயக்குகிறார் என்றதும் படத்தின் மீது ரொம்பவும் எதிர்பார்ப்பு இருந்தது. அந்த எதிர்பார்ப்பை பொன்ராம் முழுமைப்படுத்தியிருக்கிறார். பழகிப்போன கதையை சாயம் பூசி சரிசெய்திருந்தாலும், ரசிக்கும்படியாக வைத்ததில் கைதட்டல் பெறுகிறார். படத்தோட கதையை யோசிக்கவிடாமல் அடுத்தடுத்து பரோட்டா சூரியின் நகைச்சுவையுடன் படத்தை நகர்த்தியதற்காக இவரை பாராட்டியே ஆகவேண்டும்.


டி.இமான் இசையில் பாடல்கள் அனைத்தும் ஏற்கெனவே ஹிட் அடித்திருந்தாலும், அவற்றை காட்சியப்படுத்திய விதம் ரொம்பவே ரசிக்க வைக்கிறது. சிவகார்த்திகேயன் பாடிய பாடல் ஆட்டம் போட வைக்கிறது. இனி பாடகராகவும் ஒரு ரவுண்டு வரலாம். பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவில் காட்சிகள் ஒவ்வொன்றும் பார்ப்பதற்கு வண்ணமயமாக இருக்கிறது. ஊரின் அழகை இவரது கேமரா கண்கள் அழகாக படம்பிடித்திருக்கிறது.

மொத்தத்தில் ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ யாரையும் வருத்தப்பட வைக்காமல் கலகலப்பாக்கியிருக்கிறது.

Share this post
  • Share to Facebook
  • Share to Twitter
  • Share to Google+
  • Share to Stumble Upon
  • Share to Evernote
  • Share to Blogger
  • Share to Email
  • Share to Yahoo Messenger
  • More...

0 comments

:) :-) :)) =)) :( :-( :(( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ :-$ (b) (f) x-) (k) (h) (c) cheer

 
© 2011 Ramanathapuram 2Day
Designed by FTech Cooperated with S.S.Karthik
Posts RSSComments RSS
Back to top