6 September 2013

மதுரவாயலில் பரபரப்பு ஓட்டல் அதிபர் மனைவி, மகள் படுகொலை

மதுரவாயலில் பரபரப்பு ஓட்டல் அதிபர் மனைவி, மகள் படுகொலை


 
சென்னை :  
 
                  மதுரவாயலில் ஓட்டல் அதிபரின் மனைவி, மகளை கழுத்தறுத்து கொன்று வீட்டில் இருந்த 49 சவரன் நகை, பணம் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது.

சிவகங்கை அடுத்துள்ள அடவிடங்களூரை சேர்ந்தவர் சாமிகண்ணு (51). மதுராவாயல் கார்த்திகேயன் நகர் நாகேந்திரன் தெருவில் வசிக்கிறார். மதுரவாயல் அருகே எம்எம்டிஏ காலனியில் ஓட்டல் நடத்துகிறார். இவரது மனைவி கமலாதேவி (43). இவர்களுக்கு சுகுமார் (23) என்ற மகனும், பவித்ரா (21) என்ற மகளும் உள்ளனர். பவித்ரா கீழ்ப்பாக்கம் கார்டனில் உள்ள கால் சென்டரிலும், சுகுமார் ஷெனாய் நகரில் உள்ள கால் சென்டரிலும் வேலை பார்க்கின்றனர்.

நேற்று காலை சுமார் 5.30 மணிக்கு ஓட்டலை திறக்க சாமிக்கண்ணு சென்றார். அமாவாசை என்பதால் பூசணிக்காய் சுற்றிப்போட கமலாதேவியை ஓட்டலுக்கு வரும்படி கூறிச்சென்றார். சுகுமார் காலை 9.30க்கு வேலைக்கு புறப்பட்டு சென்றார். இரவுப்பணி முடித்துவிட்டு காலையில் வந்த பவித்ராவும், கமலாதேவியும் வீட்டில் இருந்தனர்.

பூசணிக்காய் சுற்றிப்போட கமலாதேவி ஓட்டலுக்கு வராததால் வீட்டுக்கு சாமிக்கண்ணு போன் செய்தார்.

யாரும் போன் எடுக்கவில்லை. சந்தேகமடைந்த சாமிகண்ணு வீட்டுக்கு சென்றார். கதவு திறந்து கிடந்தது. ஹாலுக்கும், சமையலறைக்கும் இடையில் கமலாதேவியும், படுக்கையறை கட்டில் மீது பவித்ராவும் கழுத்து அறுக்கப்பட்டு சடலமாக கிடந்தனர். இதை பார்த்த சாமிகண்ணு அலறினார். அலறல் கேட்டு அக்கம்பக்கத்தினர் திரண்டனர்.

தகவலறிந்ததும் இணை கமிஷனர் சண்முகவேலு, அண்ணாநகர் துணை கமிஷனர் சேவியர் தன்ராஜ், உதவி கமிஷனர்கள் செந்தில்குமரன், கலிதீர்த்தான் மற்றும் மதுரவாயல் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர். சடலத்தை கைப்பற்றி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மோப்ப நாய் ராணி கொலை நடந்த வீட்டில் இருந்து சுமார் 2 கி.மீ. தூரம் மேட்டு குப்பம் சாலை வழியாக சென்று சீமாத்தம்மன் சாலையில் நின்றது. கைரேகை நிபுணர்கள் தடயங்களை சேகரித்துள்ளனர்.

சாமிகண்ணு கூறுகையில், நான் வழக்கமாக காலை 5 மணிக்கு கடைக்கு செல்வேன். மதியம் சாப்பாட்டுக்கு வருவேன். நேற்று கடைக்கு பூசணிக்காய் சுற்றிப்போட மனைவியை அழைத்து இருந்தேன். ஆனால், அவர் வரவில்லை. அவருக்கும், மகளுக்கும் போன் செய்தேன். மணி அடித்தது. அவர்கள் போனை எடுக்கவில்லை. இதனால், சந்தேகமடைந்து வீட்டுக்கு வந்தேன். அங்கு இருவரும் கழுத்து அறுக்கப்பட்டு சடலமாக கிடந்தனர்.

வீட்டின் பீரோவில் இருந்த 40 சவரன் நகை, 20 ஆயிரம், கமலாதேவி கழுத்தில் இருந்த 6 சவரன், பவித்ரா அணிந்திருந்த 3 சவரன் நகை அனைத்தையும் கொள்ளையர்கள் எடுத்து சென்றனர். 
 
எப்போதும் வீட்டின் கேட் மூடியே இருக்கும். கொலையாளிகள் எப்படி வந்தார்கள் என்று தெரியவில்லை. நாங்கள் கடந்த ஒன்றரை ஆண்டுக்கு முன்பு இந்த வீட்டை கட்டி குடியேறினோம். அதற்கு முன்பு இதே பகுதியில் வாடகை வீட்டில் வசித்தோம். பவித்ராவுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது என்றார்.

உரிமையாளர்கள் பேராசை கிரிமினல்களுக்கு சாதகம்

மெட்ரோ ரயில் அமைக்கும் பணியில் சுமார் 1000க்கு மேற்பட்ட வடமாநில ஆசாமிகள் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் திருவேற்காடு பகுதியில் உள்ள யார்டில் தங்கியுள்ளனர். அவர்களிடம் உரிய ஆவணங்களோ, சான்றிதழ்களோ இல்லை. 
 
மேலும் மதுரவாயல் பகுதியிலும் பெரும்பாலான வீடுகளில் ஒரு அறையில் 10க்கு மேற்பட்டோர் தங்கியுள்ளனர். வீட்டின் உரிமையாளர்கள் பணத்துக்கு ஆசைப்பட்டு எந்த ஆவணமும் இல்லாதவர்களுக்கு வீட்டை வாடகைக்கு விட்டுள்ளனர். இதுபோன்ற செயல்பாடு கிரிமினல்களுக்கு சாதமாகி விடுகிறது.

சில ஆண்டுகளுக்கு முன்பு பள்ளிக்கரணையில் வங்கி கொள்ளையர்கள் சுட்டு கொல்லப்பட்டபோது அந்தந்த காவல் நிலையத்தின் எல்லைக்குள் வாடகைக்கு குடியிருப்போர் குறித்த தகவல்களை வீட்டு உரிமையாளர்கள் காவல் நிலையங்களில் தெரியப்படுத்த வேண்டும் என கமிஷனர் உத்தரவிட்டு இருந்தார். இதனை மீண்டும் போலீசார் தொடரவேண்டும் எனவும், குடியிருப்போரின் விவரங்களை சேகரிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கொலையாளிகளின் உருவம் கண்காணிப்பு கேமராவில் பதிவு துணை கமிஷனர் சேவியர் தன்ராஜ் கூறியதாவது: இந்த கொலை சம்பவம் காலை 10 மணி முதல் 11 மணிக்குள் நடந்துள்ளது. கொலையாளிகள் திசை திருப்ப நகை கொள்ளையடித்துள்ளனர் என நினைக்கிறோம். இதில் ஒருவர் சம்பந்தப்பட்டிருக்க முடியாது. கொலையாளிகள் குறித்த தகுந்த ஆதாரம் கிடைத்துள்ளது. கொலை நடந்த தெருவுக்கு அருகில் இருந்த கண்காணிப்பு கேமராவில் கொலையாளிகளின் உருவம் பதிவாகி உள்ளது. அதை ஆய்வு செய்து விரைவில் கொலையாளிகளை கைது செய்வோம் என்றார்.

பவித்ரா தினமும் வேலைக்கு கம்பெனி காரில் சென்று வருவார். அதனால், அவரது கம்பெனி கார் டிரைவர்களிடமும், சுகுமாரின் நண்பர்கள், உறவினர்கள், வீட்டுக்கு அடிக்கடி வந்து செல்பவர்களிடம் விசாரிக்க உள்ளனர். மேலும், வீட்டின் அருகில் உள்ள சிமென்ட் சாலை சமீபத்தில் அமைக்கப்பட்டது. அதில் ஈடுபட்ட ஊழியர்கள் யாராவது, சாமிகண்ணு வீட்டை நோட்டமிட்டு கொள்ளையடிக்க வந்து, தாயையும், மகளையும் கொன்றார்களா? என சந்தேகப்படும்படியான சுமார் 80 பேரிடம் விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.

இதை தொடர்ந்து கோயம்பேடு உதவி கமிஷனர் செந்தில்குமரன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் ஆனந்த்பாபு, சம்பத், சுப்பிரமணி உள்ளிட்டோர் அடங்கிய 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு கொலையாளிகளை தேடிவருகின்றனர். 
 
பட்டப்பகலில் நடந்த இரட்டை கொலை சம்பவம் மதுரவாயல் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Share this post
  • Share to Facebook
  • Share to Twitter
  • Share to Google+
  • Share to Stumble Upon
  • Share to Evernote
  • Share to Blogger
  • Share to Email
  • Share to Yahoo Messenger
  • More...

0 comments

:) :-) :)) =)) :( :-( :(( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ :-$ (b) (f) x-) (k) (h) (c) cheer

 
© 2011 Ramanathapuram 2Day
Designed by FTech Cooperated with S.S.Karthik
Posts RSSComments RSS
Back to top