30 August 2013

இந்தியன் முஜாகிதீன் அமைப்பின் தலைவன் நேபாள எல்லையில் பிடிபட்டான்

இந்தியன் முஜாகிதீன் அமைப்பின் தலைவன் நேபாள எல்லையில் பிடிபட்டான்

 
புதுடெல்லி : பெங்களூர், புனே உட்பட 40 குண்டுவெடிப்பு வழக்குகளில் தேடப்பட்டு வந்த இந்தியன் முஜாகிதீன் அமைப்பின் தலைவன்  யாசின் பட்கல்  இந்திய , நேபாள எல்லையில் கைது செய்யப்பட்டான். இந்தியன் முஜாகிதீன் தீவிரவாத அமைப்பின் நிறுவனர் யாசின் பட்கல் (30) இந்திய , நேபாள எல்லையில் வடக்கு பீகார் மாநிலத்தில் கடந்த 5 ஆண்டுகளாக பதுங்கியிருப்பதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில் உளவுப்படை மற்றும் பீகார் போலீசார் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில் யாசின் பட்கல் கைது செய்யப்பட்டான். அவனுடன் இந்தியன் முஜாகிதீன் அமைப்பின் தலைவர் பீகார் மாநிலம் சமஸ்திபூரை சேர்ந்த தகசீன் அக்தர் வாசிம் அக்தர் ஷேக்(23), உத்தரப்பிரதேச மாநிலம் அஜம்காரை சேர்ந்த அசதுல்லா அக்தர் ஜாவீத் அக்தர் (26), வாகஸ் என்கிற அகமது (26) ஆகிய 3 முக்கிய தீவிரவாதிகளும் கைது செய்யப்பட்டனர்.

பட்கலிடம் தற்போது பீகார் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நீதிமன்றம் மூலம் பட்கலை காவலில் எடுத்து தேசிய புலனாய்வு அமைப்பினர் விசாரிக்க உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனர். ஐதராபாத், மும்பை குண்டு வெடிப்புகள் உட்பட 40 குண்டு வெடிப்பு வழக்குகளில் யாசின் பட்கலுக்கு தொடர்பு உண்டு.

இந்தியாவில் நடந்த பல்வேறு குண்டுவெடிப்புகளுக்கு இந்தியன் முஜாகிதீன் பொறுப்பு ஏற்றிருந்தது. புனேவில் உள்ள ஜெர்மன் பேக்கரியில் 2010ம் ஆண்டு நடந்த குண்டுவெடிப்பில் 17 பேர் கொல்லப்பட்டனர். இங்குள்ள கண்காணிப்பு கேமராவில் யாசின் பட்கல் படம் பதிவாகியிருந்தது. பெங்களூர் சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்த குண்டுவெடிப்பிலும் யாசின் பட்கலுக்கு தொடர்பு உள்ளது.

மும்பையில் கடந்த 2011 ஜூலை 13ம் தேதி நடந்த பயங்கர குண்டுவெடிப்பில் 27 பேர் கொல்லப்பட்டனர். 130க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவத்திலும் பட்கல் உட்பட 4 பேரும் மூளையாக செயல்பட்டது தெரியவந்தது. கடந்த 2008 முதல் யாசின் பட்கலை பாதுகாப்பு படையினர் தேடி வந்தனர். இவரது தலைக்கு ரூ.15 லட்சம் பரிசு வழங்கப்படும் என டெல்லி அரசும், ரூ.10 லட்சம் வழங்கப்படும் என மகாராஷ்டிர அரசும் அறிவித்திருந்தன.

லஸ்கர் இ தொய்பா தீவிரவாதி அப்துல் கரீம் துண்டாவை கடந்த 16ம் தேதி கைது செய்த நிலையில், தற்போது பட்கல், அக்தர் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டது பாதுகாப்பு படையின் பெரும் சாதனையாக கருதப்படுகிறது. பட்கலிடம் நடக்கும் விசாரணையில் தீவிரவாத சம்பவங்கள் தொடர்பாக  திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என்று கருதப்படுகிறது.

யார் இந்த பட்கல் ?


  1983ம் ஆண்டு கர்நாடக மாநிலம், வடகனரா மாவட்டம் மங்களூர் அருகே உள்ள சிறிய கடற்கரை நகரமான பட்கலில் பிறந்தவன் யாசின் பட்கல். இவனது இயற்பெயர் முகமது அகமது சரார் சித்திபாபா. இவரது தந்தை தொழிலதிபர் என்பதால் அடிக்கடி வெளியூர் மற்றும் வெளிநாடு சென்றுவிடுவார். இதனால் தனது தாயுடன் வசித்த இவன் பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை பட்கல் நகரத்திலேயே முடித்தான். பொறியியல் படிப்பை முடித்த இவன் தொழிலில் தந்தைக்கு உதவுவதற்காக சவுதி அரேபியாவிற்கு சென்றான்.

அங்கு தந்தைக்கு சரிவர உதவாமல் மீண்டும் இந்தியாவிற்கு திரும்பி வந்தான். இதன் பின்னர் பட்கல் பகுதியில் பல்வேறு சமூக விரோத செயல்களில் ஈடுபட்டதாக கூறி போலீசார் அவனை கைது செய்து சிறையில் அடைத்தனர். ஆனால் அங்கிருந்து தப்பிய அவன் புனே பகுதியில் உள்ள அவனது பால்ய நண்பன் இக்பால் இஸ்மாயில் ஷாபந்த்ரி என்பவனுடன் சேர்ந்து யுனானி மருத்துவ பயிற்சி பெற்று வந்தான்.

இதனிடையே இக்பால் மதபோதகராக மாறினான். சிறிது காலத்திற்கு பிறகு இக்பாலும் அவரது சகோதரரான ரியாஸ் இஸ்மாயில் என்பவரும் சேர்ந்து ஒரு நடமாடும் முஸ்லிம் இயக்கம் என்ற அமைப்பை உருவாக்கினர். நாளடைவில் இந்த அமைப்பை லஷ்கர்,இ,தொய்பாவுடன் இணைத்து தீவிரவாத செயல்களில் ஈடுபட தொடங்கினார்கள். இந்த அமைப்பில் சேர்ந்த யாசின் பட்கல் பல்வேறு சமூக விரோத செயல்களில் ஈடுபட தொடங்கினான். இதன் பின்னர் தான் இந்திய முஜாகிதீன் என்ற தீவிரவாத அமைப்பை தொடங்கி கடந்த 2008 முதல் பல்வேறு மாநிலங்களில் வெடிகுண்டுகள் வைத்து சமூக விரோத செயல்களில் ஈடுபட்டான்.

தனது பொறியியல் நுண்ணறிவால் இவனே வெடிகுண்டுகளை தயாரித்து பல்வேறு மாநிலங்களில் வெடிக்கவும் வைத்தான் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக தான் பிறந்த மாநிலமான கர்நாடகாவின் சட்டம் , ஒழுங்கை சீர்குலைக்க 2008 மற்றும் 2010ம் ஆண்டுகளில் மாநிலத்தின் தலைநகரான பெங்களூரில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்புகளில் மூளையாக செயல்பட்டுள்ளான். மேலும் 2012ம் ஆண்டு புனேயில் உள்ள ஜெர்மன் பேக்கரி வெடிகுண்டு சம்பவத்திலும் தொடர்பு கொண்டிருந்தான்.

இந்தியன் முஜாகிதீன் துவக்கம்: பாகிஸ்தானை சேர்ந்த தீவிரவாத அமைப்பான லஷ்கர் இ தொய்பா இயக்கத்தின் நிதி உதவியுடன் கடந்த 2008ம் ஆண்டு தொடங்கப்பட்டது இந்தியன் முஜாகிதீன் தீவிரவாத அமைப்பு. இஸ்லாமிய மாணவர் அமைப்பான சிமிக்கு தடை விதிக்கப்பட்டதை தொடர்ந்து இந்த புதிய அமைப்பு தொடங்கப்பட்டது.
கர்நாடக மாநிலத்தை சேர்ந்த யாசின் பட்கல், தனது சகோதரர்களான ரியாஸ் மற்றும் அப்துல் சுபான் குரேஷி ஆகியோருடன் சேர்ந்து இந்த இயக்கத்தை தொடங்கினான்.

டிஎன்ஏ சோதனை

யாசின் பட்கலின் அடையாளத்தை உறுதி செய்ய உடனடியாக ஒரு சிறப்பு குழுவை அனுப்பிவைக்கும்படி கர்நாடக போலீசாரை பீகார் போலீசார் கேட்டுக் கொண்டனர். மேலும் யாசின் பட்கலுக்கு டிஎன்ஏ சோதனை செய்யவும் அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். இதற்கும் கர்நாடக போலீசாரிடம் உதவி கோரியுள்ளனர்.

Share this post
  • Share to Facebook
  • Share to Twitter
  • Share to Google+
  • Share to Stumble Upon
  • Share to Evernote
  • Share to Blogger
  • Share to Email
  • Share to Yahoo Messenger
  • More...

0 comments

:) :-) :)) =)) :( :-( :(( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ :-$ (b) (f) x-) (k) (h) (c) cheer

 
© 2011 Ramanathapuram 2Day
Designed by FTech Cooperated with S.S.Karthik
Posts RSSComments RSS
Back to top