11 July 2013

சா‘தீ’யில் கருகி... கண்ணீரில் கரைந்த காதல்! - ஒரு சிறப்பு கண்ணோட்டம்

சா‘தீ’யில் கருகி... கண்ணீரில் கரைந்த காதல்! 
 ஒரு சிறப்பு கண்ணோட்டம்


காதல் திருமணங்கள் அதிகமானால் சாதித் தீயை அணைத்துவிடலாம் என்பது நம் முன்னோர்களின் கனவு. ஆனால் ஒரு காதல் திருமணத்தை எதிர்த்து சா‘தி’த்துவிட்டதாக கருதிய சிலரால் தருமபுரி கிராமங்கள் பற்றி எரிந்தது இன்றைய நிகழ்வு.

கொழுந்துவிட்டு எரிந்த இந்த சாதித் ‘தீ’க்கு இரையானது நூற்றுக்கணக்கான குடிசைகள் மட்டுமல்ல; காதலை நேசிக்கும் லட்சக்கணக்கான உள்ளங்களும்தான். தமிழகத்தை மட்டுமல்ல உலகத்தையே திரும்பிப் பார்க்க வைத்த காதல் தம்பதியர் இளவரசன்-திவ்யா. இவர்கள் கடந்து வந்த சோகப் பாதை இதுவரை வெளியான எந்த காதல் கதையிலும் இடம்பெறாதது. இப்படியும் நடக்க வேண்டுமா? என்று சிந்திக்க வைப்பது.

தர்மபுரி மாவட்டம் கிருஷ்ணாபுரம் நத்தம் காலனியை சேர்ந்த இளவரசனுக்கும், அருகில் உள்ள செல்லங்கொட்டாய் கிராமத்தை சேர்ந்த திவ்யாவுக்கும் இடையே சாதியைக் கடந்த காதல். காதலில் இணைந்த இவர்கள் திருமணம் என்ற பந்தத்தில் இணைந்து ஒன்றாக வாழ திட்டமிட்டனர். இதனால் கடந்த அக்டோபர் மாதம் வீட்டை விட்டு வெளியேறி இருவரும் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். இதையடுத்து, காதலை ஏற்றுக்கொள்ளாத திவ்யாவின் தந்தை நாகராஜ் தற்கொலை செய்து கொண்டார்.

இதை ஒரு காரணமாக்கி வன்முறையை கையில் எடுத்தது சாதிய ஆதரவு அமைப்புகள். இதனால் இரண்டு கிராமங்களிலும் பதட்டம் பற்றிக் கொண்டது. வலிமையானவர்கள் என்று கருதிக் கொண்டவர்களால், அப்பாவி மக்களின் வீடுகள் சூறையாடப்பட்டன. கூரையுடன் பணமும், பண்டபாத்திரங்களும் பற்றி எரிந்த ‘தீ’க்கு இரையாகின. 268 பேர் வீடுகளை இழந்து நடுத்தெருவுக்கு வந்தனர். இந்த காதலால் ஏற்பட்ட வன்முறைக்கு புது அர்த்தம் கற்பிக்கப்பட்டது. பல்வேறு விளக்கங்களும் கூறப்பட்டன. அரசியலும் இவர்கள் காதலுக்குள் புகுந்து கொண்டதால் காதல் ஜோடிக்கு மட்டுமல்ல, காதலர் குடும்பத்துக்கும் நெருக்கடி முற்றியது.

இன்ப வானில் பறக்க வேண்டிய காதல் ஜோடி சிறகொடிந்து சோகத்தில் மூழ்கின. நிலைமை இப்படி ஆகிவிட்டதே என்று எண்ணி... எண்ணி... துடித்தார் திவ்யா. ஆனால் காதல் கணவனான இளவரசனை விட்டுவிட்டு அவ்வளவு எளிதாக அவரால் மீண்டு வரமுடியவில்லை. என்றாலும், தாய் வீட்டுக்கு சென்று அவரை சமாதானப்படுத்தப் போவதாக கூறிச்சென்ற திவ்யா அதன்பின் இளவரசனிடம் திரும்பி வரவே இல்லை.

தனது காதல் மனைவியை காணவில்லை என்று இளவரசன் போலீசில் புகார் செய்தார். இதன் பின்னர் கடந்த மார்ச் மாதம் ஐகோர்ட்டில் ஆஜரானார் திவ்யா. விரும்பித்தான் இளவரசனுடன் நான் சென்றேன். ஆனால் இப்போதுள்ள சூழ்நிலையில் தாயுடன் வாழ விரும்புகிறேன் என்று கூறினார்.

இந்த நேரங்களில் எல்லாம் கோர்ட்டில் ஆஜரான இளவரசன், எப்படியும் திவ்யா தன்னுடன் வாழ திரும்பி வருவாள் என்ற நம்பிக்கையுடனேயே இருந்தார். ஆனால், இளவரசனுடன் இனி நான் வாழ விரும்பவில்லை என்று பின்னர் வெளிப்படையாக திவ்யா அறிவித்தார்.

திவ்யாவின் இந்த முடிவு இளவரசனின் மனதை சுக்கு நூறாக நொறுக்கிவிட்டது. உயிருக்குயிராக காதலித்த பெண் சரியாக 10 மாதம் ஆவதற்குள்ளாகவே தன்னை விட்டு பிரிந்து சென்றுவிட்டாளே என்ற சோகத்தில் இருந்த அவர் எல்லோரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கும் வகையில் கடந்த 5ந் தேதி ரெயில் முன் பாய்ந்து தனது உயிரை மாய்த்துக் கொண்டார்.

இளவரசன் திவ்யா தம்பதிகளின் காதல்... கல்யாணம்... இதன் தொடர்ச்சியாக நடைபெற்ற கலவரம்... தீவைப்பு... துர்மரணம்... சோகம்... ஆகியவை சினிமா காட்சிகளை மிஞ்சும் வகையில் அமைந்து விட்டது. தமிழக வரலாற்றில் எத்தனையோ காதல் கலப்பு திருமணங்கள் நடைபெற்றிருக்கும். ஆனால் எந்த திருமணத்துக்கு பின்னரும், இதுபோன்ற வன்முறை வெறியாட்டங்கள் நடந்ததாக வரலாறு இல்லை.

திவ்யா-இளவரசன் காதலுக்கு மட்டும் ஏன் இத்தனை எதிர்ப்புகள்? இதன் பின்னணியில் நடந்தது என்ன? என்பது போன்ற ஏராளமான கேள்விகள் எழுவதை தவிர்க்க முடியவில்லை. அதே நேரத்தில் இந்த அப்பாவி காதலர்களை வைத்து சிலர் அரசியல் ஆதாயம் தேட முயன்றதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.

சாதி, சமயம் அற்ற சமுதாயத்தை படைப்போம் என்று குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்கும் பாலபாடம் நனவாக வேண்டும். சாதி மோதல்களை நாம் ஆழமாக சிந்திக்க வேண்டிய கட்டாயத்துக்கு இப்போது வந்திருக்கிறோம்.

காதல் என்ற போர்வையில் சிலர் பணம் பறிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாகவும் குற்றச்சாட்டு உள்ளது. இது உண்மையா? என்பதை ஆராய வேண்டும். அதில் உண்மை இருந்தால் தடுக்கப்பட வேண்டும். எது எப்படியோ சா‘தீ’யில் ஒரு காதல் கருகிப்போனது மட்டும் மறுக்க முடியாத உண்மை.

அன்பு மனைவியை நெருங்க முடியாமல் தடுத்ததால் இளவரசன் உயிர் பறிபோனதும்; மனம் விரும்பிய கணவனுடன் வாழமுடியாமல் திவ்யா வாழ்க்கையையே இழந்து தவிப்பதும் நம்மை கண்ணீரில் ஆழ்த்துகிறது.



முன்னேற்றம் அடையாத சமுதாயத்துக்கு கைகொடுப்பதற்காக கல்வி, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இதற்காக குழந்தையை பள்ளியில் சேர்க்கும்போதே சாதியை பதிவு செய்யும் கட்டாயம் ஏற்படுகிறது. இதுவே சாதி வேற்றுமைக்கு அடித்தளமாகி விடுகிறது என்ற கருத்து பரவலாக உள்ளது.

கலப்பு திருமணத்தை அரசு ஆதரிக்கிறது. ஆனால் கீழ்-மேல் என்ற எண்ண ஓட்டத்தை மாற்ற வேறு வழி இருக்கிறதா? என்பதை சிந்தித்து முடிவு செய்யும் நேரம் தற்போது வந்திருக்கிறது.

உயிர்களின் உச்சமான காதல் உணர்வை மனிதர்கள் மதிக்க வேண்டும் என்பது பாரம்பரியம். இதை பண்டைத் தமிழ் இலக்கியங்கள் பக்கம் பக்கமாக விளக்குகின்றன. ‘எல்லோரும் ஓர் குலம். எல்லோரும் ஓர் இனம்’. ‘யாதும் ஊரே, யாவரும் கேளிர்...’ என்று இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சொன்னது எங்கள் தமிழ் என்று மார்தட்டி முழங்குகிறோம். ஆனால் 21ம் நூற்றாண்டிலும் இதை ஏற்காமல் இரண்டாகவே நிற்கிறோம்.

ஐந்தறிவு உயிர்களிடம்கூட இல்லாத சாதி வெறி, ஆறறிவு என்று சொல்லிக் கொள்ளும் மனிதர்களிடையே இருப்பது ஏன்? இதுபோன்ற எத்தனையோ காதல் ஜோடிகள் எதிர்ப்பையும் மீறி வாழ்க்கையில் சாதனை படைத்துள்ளன.

இலங்கையில் இனவெறியால் தமிழர்களின் உயிர்களை பறித்த ராஜபக்சேவை குறை சொல்பவர்கள் சாதி வெறியால் தமிழகத்தில் ஏற்படும் உயிர் பலிகளை பற்றி வாய் திறப்பதில்லை என்ற குற்றச்சாட்டு ஒலிப்பதையும் ஒதுக்கிவிட முடியாது.


இரண்டு உயிர்களை பறித்துக் கொண்டு அனைவரையும் திரும்பி பார்க்க வைத்திருக்கின்ற இந்த காதல்... சா‘தீ’யில் கருகி கண்ணீரில் கரைந்துவிட்டது... தாங்கமுடியாத இந்த சோகத்திற்கு பிறகாவது தமிழகத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்கக்கூடாது என்பதுதான் உயிர்களை நேசிப்பவர்களின் உண்மையான ஆசை.

சிந்திப்பார்களா..?
Share this post
  • Share to Facebook
  • Share to Twitter
  • Share to Google+
  • Share to Stumble Upon
  • Share to Evernote
  • Share to Blogger
  • Share to Email
  • Share to Yahoo Messenger
  • More...

0 comments

:) :-) :)) =)) :( :-( :(( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ :-$ (b) (f) x-) (k) (h) (c) cheer

 
© 2011 Ramanathapuram 2Day
Designed by FTech Cooperated with S.S.Karthik
Posts RSSComments RSS
Back to top