சென்னை டி.பி.சத்திரத்தில்
தி.மு.க. கட்சியின் தீவிர தொண்டரான பிரபல ரவுடி வெட்டிக்கொலை
சென்னை, ஜூலை 4:
சென்னை டி.பி.சத்திரம் ஜோதியம்மாள் நகர், 7-வது தெருவைச் சேர்ந்தவர் ஜெயராஜ் (வயது 29). இவரது மனைவி பெயர் சுகந்தி(28). குழந்தைகள் இல்லை. ஜெயராஜ் குடிநீர் பாட்டில்களை வேனில் வீடுகளுக்கு சப்ளை செய்யும் தொழில் செய்து வந்தார். அந்த பகுதியில் பிரபலமானவர். தி.மு.க. கட்சியிலும் தீவிர தொண்டர்.
ஆரம்பத்தில் அந்த பகுதியில் பிரபலமான தாதா ஒருவரிடம் அடியாளாக இருந்தார். 2 கொலை வழக்கு உள்பட பல்வேறு வழக்குகள் அவர் மீது நிலுவையில் உள்ளது. டி.பி.சத்திரம் போலீஸ் நிலையத்தில் ரவுடி லிஸ்டில் அவரது பெயர் உள்ளது.
இந்த நிலையில், ஜெயராஜ் தனது ரவுடி வாழ்க்கையை தூக்கி போட்டுவிட்டு, நல்ல வாழ்க்கைக்கு திரும்பினார். ஆனால் விதி அவரை விடவில்லை. அவரது பழைய தாதா முதலாளியும் ஜெயராஜ் திருந்தி வாழ்வதை விரும்பவில்லை. இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு, மோதல் உருவானது. இருவரும் ஒருவரை ஒருவர் தீர்த்துக் கட்ட தயாரானார்கள்.
நேற்று பிற்பகல் 2 மணி அளவில் ஜெயராஜ், மதிய சாப்பாடு சாப்பிட்டுவிட்டு, வீட்டு அருகில் நின்று கொண்டிருந்தார். அவரது மனைவி வெளியில் சென்றிருந்தார்.
அப்போது நாலைந்து பேர் கொண்ட கும்பல் கைகளில் வீச்சரிவாளுடன் வந்தனர். ஜெயராஜை சுற்றி வளைத்து அரிவாளால் வெட்டினார்கள். அவர் ரத்தவெள்ளத்தில் கீழே சாய்ந்தார். காரியத்தை முடித்துக் கொண்டு, கொலைவெறி கும்பலைச் சேர்ந்தவர்கள் தப்பி ஓடிவிட்டனர்.
உயிருக்கு போராடிய நிலையில் கிடந்த ஜெயராஜை, அக்கம்பக்கத்தினர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவர் பரிதாபமாக இறந்து போனார்.
ஜெயராஜ் கொலை செய்யப்பட்டவுடன் டி.பி.சத்திரம் பகுதி பரபரப்பானது. இதுபற்றி தகவல் கிடைத்தவுடன் துணை கமிஷனர் பவானீஸ்வரி தலைமையில் அங்கு போலீஸ் படையினர் குவிக்கப்பட்டனர். ஜெயராஜை வெட்டி வீழ்த்தியது அவரது பழைய நண்பர்கள்தான் என்றும், அதே பகுதியில் வாழ்பவர்கள் என்றும், தீச்சட்டி முருகன், சுகுமார் உள்பட சிலரை தேடுவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
ஜெயராஜ் கொலை செய்யப்பட்ட தகவல் அவரது மனைவிக்கு முதலில் தெரியாது. வெளியில் சென்றிருந்த அவர், வீடு திரும்பியவுடன் கதறி அழுதார். அந்த பகுதியைச் சேர்ந்த ஜெயராஜின் உறவினர்களும், ஆதரவாளர்களும் ஆவேசமாக காணப்பட்டனர்.
பழிக்குப்பழி, ரத்தத்துக்கு, ரத்தம், விரைவில் இங்கு இன்னொரு கொலை விழும் என்று ஆக்ரோஷமாக தெரிவித்தனர். டி.பி.சத்திரம் போலீஸ் நிலையம் அருகாமையில்தான் இந்த படுகொலை சம்பவம் நிகழ்ந்துள்ளது. போலீசார் விழிப்போடு இருந்து, இன்னொரு படுகொலை சம்பவம் இந்த பகுதியில் நடக்காமல் தடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கருத்து தெரிவித்தனர்.













0 comments