25 June 2013

ராஜ்யசபா தேர்தலில் ஆறாவது சீட்டிற்கான காங்கிரஸ் கட்சியின் ஆதரவு ?

ராஜ்யசபா தேர்தலில் ஆறாவது சீட்டிற்கான 

காங்கிரஸ் கட்சியின் ஆதரவு ?

ராஜ்யசபா தேர்தலில், ஆறாவது சீட்டிற்கான காங்கிரஸ் கட்சியின் ஆதரவு யாருக்கு என்ற, "சஸ்பென்ஸ்' நீடிக்கிறது. தி.மு.க., - தே.மு.தி.க., ஆகிய இரு கட்சிகளும் காங்கிரஸ் கட்சியின் ஆதரவை எதிர்நோக்கியுள்ள நிலையில், யாருக்கு ஆதரவு என்ற முக்கிய முடிவை, டில்லி மேலிடம் இன்று எடுக்க உள்ளது. நேற்று வரை எந்த பதிலையும், காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்காமல் இருப்பதால், மத்திய அரசுக்கு எதிராக, எந்த கருத்தும் தெரிவிக்காமல், தி.மு.க., தலைவர் கருணாநிதி மவுனம் காத்து வருகிறார் என, கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நீண்ட காலத்திற்கு பின், தமிழகத்தில், ராஜ்யசபா தேர்தல், களை கட்டியுள்ள நிலையில், ஆறாவது எம்.பி., சீட்டிற்கு, தி.மு.க.,வும், தே.மு.தி.க.,வும் நேரடியாக மோதும் நிலை, உருவாகியுள்ளது. ஓட்டெடுப்பு நடப்பதற்கு, இன்னும், 48 மணி நேரமே உள்ள நிலையில், தேர்தல் தொடர்பாக, காங்கிரஸ் தலைமை, பெரும் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளது.

ஆதரவு கேட்டு...:

தி.மு.க., - தே.மு.தி.க., ஆகிய இரு கட்சிகளும், காங்கிரசிடம் ஆதரவு கேட்டு நிற்கின்றன. யாரை ஆதரிப்பது என்பது தொடர்பான ஆலோசனையில், காங்கிரஸ் மூத்த தலைவர்கள் அகமது படேல், குலாம் நபி ஆசாத், முகுல் வாஸ்னிக் ஆகியோர் ஈடுபட்டுள்ளனர். உள்ளாட்சித் தேர்தலில், காங்கிரஸ் ஓட்டு வங்கி, தமிழகத்தில், வெறும், 5 சதவீதம் என்பது நிரூபணம் ஆகிவிட்டதால், லோக்சபா தேர்தலில், மெகா கூட்டணி அமைந்தால் மட்டுமே சரிபட்டு வரும் என, காங்கிரஸ் கருதுகிறது. அதன்படி, காங்கிரஸ் - தி.மு.க., - தே.மு.தி.க., ஆகிய மூன்று கட்சிகளையும் ஒரே அணியில் இடம்பெற வைக்க முடியுமா; அது போன்ற கூட்டணி அமைவதற்கு, ராஜ்யசபா தேர்தலை பயன்படுத்தினால் என்ன, என்ற ரீதியில் காங்கிரஸ், காய் நகர்த்தியது.

இம்மாதம், 12ம் தேதி, தே.மு.தி.க., இளைஞரணி மாநில செயலர் சுதீஷ், டில்லியில், குலாம் நபி ஆசாத்தை சந்தித்து, ஆதரவு கேட்டார். காங்கிரஸ் தலைவர் சோனியாவை சந்தித்த குலாம் நபி ஆசாத், உடனடியாக, தமிழக காங்கிரஸ் தலைவர்கள் சிதம்பரம், வாசன், ஜெயந்தி நடராஜன், தங்கபாலு, ஞானதேசிகன் ஆகியோரிடம் ஆலோசனை நடத்தினார். பின், தே.மு.தி.க., தலைமையிடம், காங்கிரஸ் ஆதரவு அளிப்பதாக வாக்குறுதியும் அளிக்கப்பட்டு விட்டது.

களத்தில் தி.மு.க.,:

அதேசமயத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டின் ஆதரவு கிடைக்காததால், காங்கிரஸ் ஆதரவை பெறும் வேலையை தி.மு.க., துவக்கியது. இம்மாதம், 15ம் தேதி, அகமது படேலுடன் டி.ஆர்.பாலு பேசினார். பின், 17ம் தேதி, சோனியாவை சந்தித்து, ஆதரவு கேட்டார்.

ஏற்கனவே, தங்களிடம் வந்து, ஆதரவு கேட்ட, தே.மு.தி.க.,விடம்,வாக்குறுதி அளித்துவிட்ட நிலையில், தி.மு.க., திடீரென வந்து நிற்பது, காங்கிரஸ் தலைமைக்கு, தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. இதில் இருந்து, எப்படி மீள்வது என்பது குறித்தும், தீவிரமாக ஆலோசித்து வருகிறது.ராஜ்யசபா தேர்தல் தொடர்பாக நடக்கும் காய் நகர்த்தலை வைத்து பார்க்கும் போது, தாங்கள் நினைத்தபடி, மெகா கூட்டணி உருவாகுமா என்பதெல்லாம், சந்தேகமே என்ற நிலைக்கு, காங்கிரஸ் வந்துள்ளது.

 காரணம், தி.மு.க.,வுடன் எந்த வகையிலும் கூட்டணி வைக்க, விஜயகாந்த் விரும்பவில்லை என்பதை காங்கிரஸ் நன்றாகவே உணர ஆரம்பித்துள்ளது.தமிழக காங்கிரஸ் தலைவர்கள் பலரும், தி.மு.க.,வை தவிர்த்துவிட்டு, தே.மு.தி.க.,வுடன் கூட்டணி வைக்கலாம் என, விரும்புகின்றனர். ஆனால், டில்லி தலைமை, தி.மு.க.,வைத்தான் முதல் தேர்வாகக் கருதுகிறது.

3 விஷயங்கள்:

தங்களிடம் ஆதரவு கேட்கும் இருவரில், தி.மு.க., தான் பெரிய கட்சி. ராஜ்யசபா தேர்தல் களத்தில், வேறு யார் நின்றாலும் கூட பரவாயில்லை. கருணாநிதியின் மகளும், அக்கட்சியில் முக்கியமானவராகத் திகழும், கனிமொழிக்கு ஆதரவு கேட்கப்படுகிறது. தி.மு.க.,விடம், 18 எம்.பி.,க்கள் உள்ளனர். பார்லிமென்ட் கூட்டத் தொடர்களில், பல முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றப்பட உள்ள நிலையில், தி.மு.க., - எம்.பி.,க்களின் ஆதரவு, முக்கியம். எனவே, இந்த மூன்று விஷயங்கள் தான், காங்கிரசை பெரிதும் யோசிக்க வைக்கின்றன.எனவே, தே.மு.தி.க.,வுக்கு வாக்குறுதி அளித்து இருந்தாலும், தன் நிலைப்பாட்டை மாற்றி, கனிமொழியை ஆதரிக்கும் முடிவை, அதிரடியாக காங்கிரஸ் இன்று எடுக்க வாய்ப்பு உள்ளது என, தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், நேற்று வரை காங்கிரஸ் தரப்பில் எந்த பதிலும், தி.மு.க.,வுக்கு தெரிவிக்கவில்லை என்பதால், எந்த கருத்தையும் தெரிவிக்காமல் கருணாநிதி மவுனம் காத்து வருகிறார் என, அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தி.மு.க., வலையில் தே.மு.தி.க., - எம்.எல்.ஏ.,க்கள்?

இதற்கிடையில், தே.மு.தி.க.,விடம் தற்போது உள்ள, 22 எம்.எல்.ஏ.,க்களில், ஐந்து பேர் அதிருப்தியில் உள்ளனர் என்றும், அவர்களில் பெண் எம்.எல்.ஏ., ஒருவர் உட்பட, மூன்று பேர், தி.மு.க., வலையில் சிக்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.அடுத்த சட்டசபை தேர்தலில், தி.மு.க.,வின் அனுதாபியாக மாறக்கூடிய, தே.மு.தி.க., அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள் மூவருக்கும், மீண்டும் அதே தொகுதியில், "சீட்'களை ஒதுக்கவும் தி.மு.க., தரப்பில்உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பெயர் வெளியிட விரும்பாத, தே.மு.தி.க., - எம்.எல்.ஏ., ஒருவர் கூறுகையில், "ராஜ்யசபா தேர்தலில், தங்களுக்கு ஆதரவு தரும்படி, தி.மு.க.,வினர் ரகசியமாகக் கேட்கின்றனர். இதற்காக, என்னிடம் மட்டுமின்றி, உறவினர், நண்பர்கள் மூலமாகவும் நெருக்கடி கொடுத்து வருகின்றனர்."கட்சிக்கும், கட்சித் தலைவர் விஜயகாந்திற்கும் நான் விசுவாசமாக இருப்பேன்' என, அவர்களிடம் கூறி விட்டேன். இருப்பினும், ஆசை வார்த்தைகளைக் கூறி, என்னை இழுக்கப் பார்க்கின்றனர்' என்றார்.

முகுல் வாஸ்னிக் வருகை : 

ராஜ்யசபா தேர்தல் தொடர்பாக, தமிழக காங்கிரஸ் எம்.பி.,க்கள், எம்.எல்,ஏ,,க்களிடம் ஆலோசனை நடத்த, இன்று சென்னைக்கு வர திட்டமிருந்த, மேலிட பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக்கின் பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. அவர், இம்மாதம், 30ம் தேதி சென்னை வர திட்டமிட்டுள்ளார்.

அமைச்சர்கள் ஆலோசனை:

தேர்தலில் ஓட்டு போடுவது எப்படி என்பது குறித்து, நிதி அமைச்சர் பன்னீர் செல்வம் தலைமையில், மூத்த அமைச்சர்கள் நால்வர், நேற்று, தேர்தல் நடத்தும் அதிகாரியான, சட்டசபை செயலர், ஜமாலுதீனை சந்தித்து ஆலோசனை நடத்தினர்.அப்போது, தேர்தல் ஏஜென்ட், ஓட்டு போடுவது எப்படி என்பது குறித்தும் தகவல் கேட்டு பெற்றதாகக் கூறப்படுகிறது. இது தவிர, இந்திய கம்யூ., சார்பில், ராஜா மற்றும் பழனிச்சாமி ஆகியோரும், தி.மு.க., சார்பில், கொறடா சக்கரபாணி மற்றும் எம்.எல்.ஏ., வேலு ஆகியோரும், தேர்தல் நடத்தும் அதிகாரியை சந்தித்து, தேர்தல் ஏஜென்ட் தொடர்பாக ஆலோசித்ததாகக் கூறப்படுகிறது.
Share this post
  • Share to Facebook
  • Share to Twitter
  • Share to Google+
  • Share to Stumble Upon
  • Share to Evernote
  • Share to Blogger
  • Share to Email
  • Share to Yahoo Messenger
  • More...

0 comments

:) :-) :)) =)) :( :-( :(( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ :-$ (b) (f) x-) (k) (h) (c) cheer

 
© 2011 Ramanathapuram 2Day
Designed by FTech Cooperated with S.S.Karthik
Posts RSSComments RSS
Back to top