21 June 2013

வடமாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் வரலாறு காணாத பேரழிவு

வடமாநிலத்தில் ஏற்பட்ட  வெள்ளத்தால்  வரலாறு காணாத பேரழிவு
ரிஷிகேஷ்: இந்துக்கள் மேற்கொள்ளும் புனித யாத்திரைகளில் ஒன்று இமயமலை சார்தாம் யாத்திரை.. ஆனால் இந்த சார் தாம் யாத்திரை இனி எத்தனை ஆண்டுகள் கழித்து மேற்கொள்ள முடியுமோ? என்ற பெரும் கேள்வியை உருவாக்கி வைத்திருக்கிறது பெரும் வெள்ளப் பேரழிவு. இந்தப் பேரழிவுக்கு இயற்கை மட்டுமே காரணமல்ல..இயற்கையை சீர்குலைத்த நாமே காரணம் என்கின்றனர் விஞ்ஞானிகள்..

உத்தர்காண்ட் மாநிலத்தில் சார் தாம் யாத்திரைக்குப் போன சுமார் 60 ஆயிரம் பேர் கேதர்நாத்துக்கும் ருத்பிரயாக்குக்கும் நடுவில் சிக்கிக் கொண்டிருப்பதாக செயற்கைக் கோள் புகைப்படங்கள் தெரிவிக்கின்றன. அதே செயற்கைக் கோள் புகைப்படங்கள் சில ஒப்பீடுகளையும் நமக்கு அம்பலப்படுத்துகின்றன. 1980களில் கேதர்நாத் கோயில் அருகே சில கட்டிட்டங்கள் மட்டும்தான் இருந்தன. இப்போது இமயமலையின் உச்சியான கேதர்நாத்தையே ஒரு நகரமாக உருவாக்கிவிட்டிருக்கின்றனர்.

இது தொடர்பாக கருத்து தெரிவித்திருக்கும் இஸ்ரோ அதிகாரிகள், கேதர்நாத் கோயிலை ஒட்டி ஓடுகிற மந்தாகினி ஆற்றின் போக்கை கடந்த பல ஆண்டுகளாக திசை திருப்பிவிட்டதன் விளைவுதான் இந்தப் பேரழிவு என்கின்றனர். இதுமட்டுமே காரணம் இல்லை.. கேதர்நாத் கோயிலின் பின்புறம் இருக்கும் கேதர் டோம் எனப்படும் பனிச்சிகரம் உடைந்து கோயிலில் இருந்து சில கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சர்பால் ஏரியில் அப்படியே விழுந்திருக்கிறது. பனிச்சிகரம் அப்படியே உருகி பனிச்சுனாமியாக உருவெடுத்து சர்பால் ஏரியையும் அதை ஒட்டிய மந்தாகினி ஆற்றிலும் பேரலைகளை உருவாக்கியபடியே அகப்பட்ட அத்தனை கட்டிடங்களையும் மனிதர்களையும் வாரிச் சுருட்டி எடுத்தது. இமயமலையில் ஓடுகிற மந்தாகினி ஆறு, அலக்நந்தா, பகீரதி போன்றவைகள் அனைத்தும் இணைந்துதான் கங்கையாக, யமுனையாக சமவெளிக்கு ஓடி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


கேதர்நாத் கோயில் மட்டும்தான் இப்போது தனித்துவிடப்பட்டிருக்கிறது. கோயிலை சுற்றிக் கட்டப்பட்டிருந்த அத்தனை கடைகளும் வீடுகளும் அப்படியே கபளீகரம் செய்யப்பட்டு கேதர்நாத் நகரே சேற்றால் புதையுண்டு கிடக்கிறது என்றே சொல்லப்படுகிறது. இது குறித்து கருத்து தெரிவித்த உத்தர்காண்ட் முதல்வர் விஜய் பகுகுணா, இன்னும் ஒரு ஆண்டுக்கு கேதர்நாத் யாத்திரை பற்றி சிந்திக்கவே முடியாது என்கிறார். ஆனால் இன்னும் 3 ஆண்டுகளுக்கு கேதர்நாத் யாத்திரையே போக முடியாத அளவுக்கு பேரழிவு ஏற்பட்டிருக்கிறது என்கின்றனர் அங்கிருந்து தகவல் தெரிவிப்போர்..

இப்படி கங்கை, யமுனையை பெருநதிகளாக உருவெடுக்க வைக்கும் இந்த துணையாறுகளின் போக்கை திசைமாற்றி 70 நீர் மின் திட்டங்கள் இமயமலையில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதற்காகவே 20 கிலோ மீட்டர் தொலைவுக்கு இரண்டு சுரங்கங்கள் அமைத்து இந்த ஆறுகள் திசை திருப்பிவிடப்பட்டிருக்கின்றன என்றும் சுட்டிக்காட்டப்படுகிறது. மேலும் முன் எப்போதையும் விட அண்மைக்காலமாக வாகனங்களில் சார்தாம் யாத்திரை செல்வோர் எண்ணிக்கையும் அதிகரிக்க இமயமலையின் ஒட்டுமொத்த சூழலே சீர்குலைந்து போனது என்றும் கூறுகின்றனர்.

கடந்த ஆண்டு இதே இமயமலைப் பகுதியில் உத்தர்காசியில் மழைமேகம் வெடித்து 60க்கும் பேர் பலியாகினர். அப்போதும்கூட விஞ்ஞானிகள் கடும் எச்சரிக்கை கொடுத்திருந்தும் அதை கவனத்தில் கொள்ளாமல் போனது மத்திய, மாநில அரசுகள் என்றும் குற்றம்சாட்டப்படுகிறது.

இதேநிலைமைதான் ஹிமாச்சல்பிரதேசத்திலும்கூட.. அந்த மாநிலத்தில் கின்னாவூர் என்ற மாவட்டத்தில் ஏற்பட்ட பெரும் நிலச்சரிவில் அம்மாநில முதல்வரே 60 மணி நேரத்துக்கும் மேலாக சிக்கித் தவித்தார். இந்தப் பெரும் நிலச்சரிவுக்கு காரணமாக இஸ்ரோ அதிகாரிகள் சொல்வது என்னவெனில் கின்னாவூர் மாவட்டம் உள்ளடங்கிய சங்லா வனப்பகுதியானது முன்பு மிகவும் அடர்ந்த ஒரு வனப்பகுதியாக இருந்தது. ஆனால் தற்போது அந்த வனப்பகுதி அழிகப்பட்டு சட்லெஜ் நதியில் 1000 மெகாவாட் நீர்மின் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்துக்காகவே அடர்வனப்பகுதி அழிந்து போக பெரும்நிலச்சரிவை எதிர்கொள்ள வேண்டியிருந்தது என்கின்றனர் விஞ்ஞானிகள்...

ஆறுகளை திசைதிருப்பி, காடுகளை சூறையாடி, மலைகளை வேட்டையாடி பதம் பார்த்த மனிதர்களை இப்போது இயற்கை பழிவாங்கியிருக்கிறது என்பதே நிதர்சனம்!

Share this post
  • Share to Facebook
  • Share to Twitter
  • Share to Google+
  • Share to Stumble Upon
  • Share to Evernote
  • Share to Blogger
  • Share to Email
  • Share to Yahoo Messenger
  • More...

0 comments

:) :-) :)) =)) :( :-( :(( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ :-$ (b) (f) x-) (k) (h) (c) cheer

 
© 2011 Ramanathapuram 2Day
Designed by FTech Cooperated with S.S.Karthik
Posts RSSComments RSS
Back to top