“நாங்கள் செத்த பிறகாவது மீட்டு விடுவார்களா? ”
7 நாட்களாக தவிக்கும்
யாத்ரீகர்கள் அழுகை
டேராடூன் : சமீபத்திய வட மாநில மழை வெள்ளம் இந்தியாவில் இதுவரை கண்டிராத சேதத்தை கண்டிருக்கிறது. போக்குவரத்து துண்டிக்கப்பட்டதால் ஆங்காங்கே தவிக்கும் பலர் உண்ண உணவு, குடிக்க நல்ல குடிநீர் இல்லாமல் தவிக்கின்றனர். இன்னும் மீட்கப்படாமல் இருக்கும் மீட்பு படையினரின் உதவிக்கரத்தை எதிர்பார்த்து ஏங்கி நிற்கும் சிலர் கூறுகையில்; நாங்கள் செத்த பிறகாவது எங்களை மீட்டு விடுவார்களா என கண்ணீர் மல்க கூறியுள்ளனர்.
வட மாநில பருவ மழையினால் கடும்சேதத்திற்குள்ளாகியிருக்கும் உத்தரகண்ட் மாநிலத்தில் பலர் இடிபாடுகளில் சிக்கியும், பலர் மலை பகுதிகளில் இருந்து எங்கும் செல்ல முடியாமல் நின்ற இடத்திலேயே நின்று இருப்பதாகவும் கூறப்படுகிறது. 500 க்கும் மேற்பட்டோர் இறந்து விட்டனர். 50 ஆயிரம் பேர் இன்னும் மீட்கப்படாமல் தவித்து வருகின்றனர். மத்திய அரசு தரப்பில் மீட்பு பணிகள் துரிதமாக நடத்தப்பட்டு வருகிறது என்றாலும், மீட்பு பணிகள் திட்டமிட்டு வேகமாக செயல்படவில்லை என பாதிக்ககப்பட்டவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
கூரிகண்ட் மலை பகுதியில் சிக்கியிருக்கும் ஒரு பெண்மணி கூறுகையில்; நாங்கள் கடந்த 7 நாட்களாக இங்கே சிக்கி நிற்கிறோம், நாங்கள் 13 பேர் வந்தோம் ஆனால் தற்போது 3 மட்டுமே எஞ்சியிருக்கிறோம். அவர்கள் எங்கே இருக்கின்றனர் என்ன ஆனார்கள் என தெரியவில்லை. எங்களுக்கு சாப்பிடுவதற்கு எதுவுமே கிடைக்கவில்லை. குடிக்க தண்ணீர் கூட கிடைக்கவில்லை என்றார்.
பத்ரிநாத்தில் சிக்கிய ஒரு பெண்மணி கூறுகையில்; எங்களுக்கு யாருமே உதவி செய்யவில்லை. நாங்கள் உதவி அற்று நிர்க்கதியாக நிற்கிறோம். சாப்பிடவும், குடிக்கவும் எதுவுமில்லை. நாங்கள் செத்து போவதற்குள்ளாவது எங்களை இந்த அரசு மீட்டு விடுமா என்று ஆவேசத்துடன் கூறியுள்ளார். இதனை அங்கு முகாமிட்டுள்ள நிருபர்கள் குழுவினர் கேட்டறிந்துள்ளனர்.
விமானம் மூலம் உணவு பொட்டலங்கள்:
மீட்பு மற்றும் நிவாரணப் பணியில் ஈடுபட்டுள்ள தேசிய பேரிடர் மீட்பு படையினர் , ராணுவத்தினர் முழு வீச்சில் விமானம் மூலம் உணவு மற்றும் நிவாரணப் பொருட்களை விநியோகித்து வந்தாலும், ஒரு சில பகுதிகளில் இன்னமும் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் சிக்கியிருக்கும் பகுதிக்கு போக்குவரத்து முழுமையாக தடைபட்டுள்ளது என்கின்றனர், அதிகாரிகள்.
இன்னும் 40 ஆயி்ரம் பேர் தவிக்கின்றனர்:
மத்திய உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே, உத்தர்கண்ட் மாநிலத்திற்கு நேரில் சென்று அங்கு நடைபெறும் மீட்புப் பணி மற்றும் நிவாரணப் பணிகள் குறித்த நிலையை பார்வையிட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது :
உத்தர்கண்ட் நிவாரணப் பணிகளுக்காக ரூ.1000 கோடி நிதியை பிரதமர் மன்மோகன் சிங் அறிவித்துள்ளார்; தேவைப்படும் பட்சத்தில் கூடுதல் நிதி ஒதுக்கப்படும்; வெள்ளம் பாதித்த பகுதிகளில் இன்னும் 30 முதல் 40 ஆயிரம் வரையிலான மக்கள் மீட்கப்படாமல் உள்ளனர்; உயிர் இழந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு வருகின்றன; அவர்களை அடையாளம் காணுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. நெருக்கடி நிலையை சமாளிப்பது தொடர்பாக தொடர்ந்து ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது; இன்று மாலைக்குள் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பாதைகள் சீரமைக்கப்படும்; உத்தர்கண்ட் மாநில நிர்வாகத்தில் சில பிளவுகள் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு ஷிண்டே தெரிவித்துள்ளார்.













0 comments