கமுதி அருகே 'ஸ்டவ்' வெடித்து தீ பிடித்து
4-ம் வகுப்பு மாணவன் பலி: தந்தை படுகாயம்
கமுதி, ஜூன் 10:
கமுதி அருகே உள்ள சின்னஉடப்பன்குளத்தைச் சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 45), வேன் டிரைவராக உள்ளார். கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் இன்று திறக்கப்பட்டதால் இவரது 2-வது மகன் வினோத்குமார் (9), பள்ளிக்கு செல்ல தயாராகி கொண்டு இருந்தான். கடந்த ஆண்டு 3-ம் வகுப்பு தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று இன்று 4-ம் வகுப்புக்கு செல்ல இருந்தான்.
வினோத்குமாரின் தாயார் கடைக்கு பொருட்கள் வாங்குவதற்காக வெளியே சென்று இருந்தார். மாரியப்பன் வீட்டிற்குள் தூங்கி கொண்டு இருந்தார். இதனால் காப்பி போடுவதற்காக வினோத்குமார் “ஸ்டவ்” அடுப்பை பற்ற வைத்துள்ளான். அப்போது எதிர் பாராதவிதமாக அடுப்பில் கசிந்து இருந்த மண்எண்ணை மீது தீ பற்றி குபீரென தீ பிடித்து “ஸ்டவ்” வெடித்தது.
இதனால் வினோத்குமாரின் உடலிலும் தீ பரவியது. வலி தாங்காமல் வினோத்குமார் அலற, தூங்கி கொண்டு இருந்த மாரியப்பன் திடுக்கிட்டு விழித்து மகனை காப்பாற்ற ஓடி வந்தார். அவர் மீதும் தீ பிடித்தது. இதற்குள் தீயணைக்கும் படையினர் விரைந்து வந்து தீயை அணைத்து 2 பேரையும் கமுதி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் வினோத் குமார் பரிதாபமாக இறந்து விட்டான்.
உடல் கருகிய நிலையில் உயிருக்கு போராடிய மாரியப்பனை மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து மண்டலமாணிக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.












0 comments