ராஜிவ் படுகொலை: விடை தெரியாக் கேள்விகள் - பகுதி 6
(மே 20, 1991 ராஜீவ்கொலைக்கு முன் தினம்)
மே 20, 1991 ராஜீவ்கொலைக்கு முன் தினம்
எஸ்.பி.ஜி பாதுகாப்பு விலக்கப்பட்ட பின், சுமார் ஒருவருடம் வரை அதுகுறித்து, அக்கறைகொள்ளாத உளவுத்துறை, ராஜீவ் கொல்லப்படுவதற்கு சரியாக 24 மணிநேரத்திற்கு முன் விழித்துக்கொள்கின்றது.உளவுத்துறையின் இணை இயக்குனர் தாக்கூர், உள்துறை இணைச்செயலாளருக்கு ஒரு அவசர கடிதத்தை எழுதுகின்றார்.
அதில் ராஜீவ்காந்திக்கு உடனடியாக, என்.எஸ்.ஜி பாதுகாப்பு வழங்குங்கள் என கேட்டுக்கொள்கிறார்.தாக்கூர் இந்த கடிதத்தை தற்செயலாக எழுதினாரா? அல்லது மறுநாள் ராஜீவ் கொல்லப்படப்போகிறார் என்பதை அவர் முன்கூட்டியே அறிந்திருந்தாரா?.
இதுபோன்ற கேள்விகள் எழுவது, அந்த கடிதம் எழுதப்பட்ட காலத்தை வைத்து பார்க்கும் போது தவிர்க்க முடியாததாக தோன்றுகின்றது.உண்மை எதுவாக இருந்தாலும்….காலம் கடந்த அந்த வேண்டுகோளை, உள்துறை அமைச்சகம் பரிசீலினை செய்யும்போது ராஜீவ்காந்தி உயிரோடு இருக்கமாட்டார்.
மே 21, 1991, ஸ்ரீபெரம்பத்தூர்
ராஜாவை சூழ்ந்து நிற்கும் சிப்பாய்கள் அனைவரும் வீழ்ந்த பின்பு ஆட்டம் முடிவுக்கு வருவதை தவிர வேறு வழியில்லை.நெருங்கிவரும் ஆபத்தை தடுக்கக்கூடிய எஸ்.பி.ஜி கமாண்டோக்கள் தற்போது ராஜீவின் அருகில் இல்லை.அனைத்துவகையிலும் ஆபத்தை எதிர்நோக்கியிருந்த ராஜீவ்காந்தி, காத்திருந்த கண்ணியில் வசமா சிக்குகின்றார்.பாதுகாப்பு தளர்த்தப்பட்ட இலக்கை மனிதவெடிகுண்டு பெண் எளிதாக தாக்குகின்றாள்.ராஜீவுடன் சேர்த்து 18 பேர் கொல்லப்படுகின்றனர்.
ராஜீவுக்கு வழங்கப்பட்டு வந்த எஸ்.பி.ஜி பாதுகாப்பு விலக்கப்பட்டதற்கு, அரசு கூறும் காரணங்கள் வலுவானதாக இல்லை என வர்மாகமிஷன் கருத்து தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, ஜெயின் கமிஷனிடம் வாக்குமூலம் அளித்த பசாக் என்ற உளவாளி, ஒரு பரபரப்பான தகவலை வெளியிடுகின்றார். எஸ்.பி.ஜி பாதுகாப்பு விலக்கப்பட்டது, ராஜீவை கொலை செய்ய தயாராகலம் என்று, வெளிநாட்டு சக்திகளுக்கு கொடுக்கப்பட்ட சமிக்ஞை என அவர் கூறுகின்றார்.
1997, நவம்பர் 24
1997 ஆம் ஆண்டு நவம்பர் 24 ஆம் தேதி, அவுட்லுக் இதழில் ஒரு அதிர்ச்சியளிக்கும் செய்தி வெளியாகின்றது. 1989க்கும் 1991க்கும் இடைப்பட்ட காலத்தில், ராஜீவ்காந்திக்கு வழங்ககப்பட்டு வந்த பாதுகாப்பு குறித்து, அதிகாரிகள் அளித்த குறிப்புகள் அடங்கிய முக்கிய ஆவணம், பிரதமர் அலுவலகத்திலிருந்து மர்மமான முறையில் காணாமல் போனதை அந்த செய்தி சுட்டிக்காட்டுகின்றது.
காணாமல்போன அந்த ஆவணத்திற்கு பதிலாக, அதேபோன்று, புதிதாக உருவாக்கப்பட்ட ஆவணத்தை ஜெயின் கமிஷனிடம், அரசு தாக்கல் செய்கின்றது. அந்த ஆவணம் திருத்தம் செய்யப்பட்டிருப்பதை கண்டுபிடித்த ஜெயின் கமிஷன், அதுகுறித்து கேள்வி எழுப்பிய பிறகே, அந்த ஆவணம் மறுஉருவாக்கம் செய்யப்பட்ட உண்மையை மத்திய அரசு ஏற்றுக்கொள்கின்றது.
பல்வேறு இடங்களில் தேடிபார்த்த பிறகும், உண்மையான ஆவணத்தை கண்டுபிடிக்க முடியவில்லை எனவும், ஆகவேதான் மறுஉருவாக்கம் செய்யப்பட்ட ஆவணத்தை தாக்கல் செய்ததாகவும், ஜெயின் கமிஷனிடம் மத்திய அரசு தெரிவிக்கின்றது.
ராஜீவுக்கு வழங்கப்பட்டிருந்த,
எஸ்.பி.ஜி பாதுகாப்பு திரும்ப பெறப்பட்டது ஏன்?
அதற்கான காரணம் என்ன?
யார் அதை முன்மொழிந்தது?
என்ற மிக முக்கியமான கேள்விகளுக்கெல்லாம் பதில்சொல்லும் அந்த ஆவணம், உயர்பாதுகாப்பு வளையத்தில் உள்ள, பிரதமர் அலுவலகத்திலிருந்து எவ்வாறு காணாமல் போனது என்பது இன்றளவும் மர்மமாகவே உள்ளது.
0 comments