ஐரோப்பாவில் இனி விமானப் பயணத்தின்போது
லேப்டாப்-டேப்லெட் பயன்படுத்த முடியும்
லண்டன், டிச. 21:
விமானப் பயணங்களில் இதுநாள்வரை பயணத் துவக்கத்திலும், தரையிறங்கும் நேரத்திலும் பயணிகள் தங்களின் மின்னணு சாதனங்களைப் பயன்படுத்துவது தடை செய்யப்பட்டு வந்தது. இத்தகைய பயன்பாடுகள் விமானத்தின் தொழில்நுட்பங்களில் பிரச்சினைகளை ஏற்படுத்தலாம் என்பது தான் இதற்குக் காரணம். தற்போது முதன்முறையாக பிரிட்டிஷ் ஏர்வேஸ் தங்களது ஐரோப்பியப் பயணங்களில் இந்தத் தடைகளை நேற்று முதல் நீக்கியுள்ளதாக அறிவித்துள்ளது.
அமெரிக்காவின் விமானப் போக்குவரத்து கழகத்தைத் தொடர்ந்து, ஐரோப்பிய விமானப் போக்குவரத்து பாதுகாப்பு நிறுவனமும் படிப்படியாகத் தங்களின் பயணிகளுக்கும் மின்னணு கருவிகளின் பயன்பாட்டை அதிகரித்துக் கொள்ளும் வசதியை அளிக்குமாறு தெரிவித்துள்ளது. இருப்பினும் சில ஐரோப்பிய விமான நிறுவனங்கள் இன்னமும் இதுகுறித்து இறுதியான முடிவை எடுக்கவில்லை. இவற்றின் முடிவுகள் இங்கிலாந்தின் விமான போக்குவரத்து துறையால் அங்கீகரிக்கப்பட வேண்டும்.
விமானப் பாதுகாப்பு குறித்த பயமின்றி பயணிகள் தங்களின் லேப்டாப், டேப்லெட், ஸ்மார்ட்போன் போன்ற மின்னணு சாதனங்களை உபயோகிக்கலாம் என்பது வரவேற்கத்தக்க விஷயமாகும் என்று ஐரோப்பிய விமானப் பாதுகாப்பு நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் பேட்ரிக் கை தெரிவித்துள்ளார்.
இந்த புதிய அறிக்கை பயணிகளிடையே பெரிதும் வரவேற்பு பெறும் என்றும் அவர்கள் தங்களின் மின்னணு சாதனங்களை கூடுதல் நேரம் பயன்படுத்தமுடியும் என்றும் பிரிட்டிஷ் ஏர்வேசின் விமான பயிற்சியாளர் கேப்டன் இயான் பிரிங்கில் கருத்து தெரிவித்துள்ளார்.
0 comments