24 December 2013

காங்கிரஸ் ஆதரவுடன் ஆம் ஆத்மி ஆட்சி டெல்லி முதல்வராகிறார் கெஜ்ரிவால்

காங்கிரஸ் ஆதரவுடன் ஆம் ஆத்மி ஆட்சி
டெல்லி முதல்வராகிறார் கெஜ்ரிவால்



புதுடெல்லி : 

                 டெல்லியில் காங்கிரஸ் ஆதரவுடன் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைக்கிறது. ஆட்சியமைக்க உரிமை கோரி, கவர்னர் நஜீப் ஜங்கிடம் கெஜ்ரிவால் கடிதம் கொடுத்தார். அரசு அமைப்பது தொடர்பான பரிந்துரையை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு கவர்னர் நஜீப் ஜங் அனுப்பி வைத்தார்.டெல்லி பேரவைக்கு கடந்த 4ம் தேதி தேர்தல் நடந்து, 8ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டன. மொத்தம் உள்ள 70 தொகுதிகளில் பா.ஜ. கூட்டணி 32 இடங்களிலும் ஆம் ஆத்மி கட்சி 28 இடங்களிலும், காங்கிரஸ் 8 இடங்களிலும், ஐக்கிய ஜனதாதளம் மற்றும் சுயேச்சை தலா ஒரு இடத்திலும் வெற்றி பெற்றது. யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காதநிலையில், தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்றிருந்த பாரதிய ஜனதா கட்சியை ஆட்சி அமைக்குமாறு கவர்னர் நஜீப் ஜங் கேட்டு கொண்டார்.

ஆனால், தங்களுக்கு பெரும்பான்மையில்லை, பெரும்பான்மை பெறுவதற்காக குதிரை பேரத்தில் ஈடுபட விரும்பவில்லை. அதனால், ஆட்சி அமைக்க முடியாது என்று பா.ஜ. எம்எல்ஏக்கள் தலைவர் ஹர்ஷ் வர்தன், கவர்னரிடம் தெரிவித்தார்.இதையடுத்து, 2வது இடத்தை பிடித்துள்ள ஆம் ஆத்மி கட்சி தலைவர் கெஜ்ரிவாலை ஆட்சி அமைக்குமாறு கவர்னர் நஜீப் ஜங் கேட்டு கொண்டார். ஆட்சி அமைக்க முயற்சிக்க மாட்டோம். சிறந்த எதிர்க்கட்சியாக செயல்படுவோம் என்று கெஜ்ரிவால் தொடர்ந்து கூறி வந்தார். ஆனால், ஆம் ஆத்மி கட்சி அமைக்க நிபந்தனையற்ற ஆதரவு தருவதாக கவர்னருக்கு காங்கிரஸ் கடிதம் அனுப்பியது. இதையடுத்து, ஆட்சி அமைப்பது  பற்றி முடிவு செய்ய 10 நாள் கால அவகாசம் தருமாறு கவர்னரிடம் கெஜ்ரிவால் கேட்டார்.

இதற்கிடையில், பேரவையின் காலம் 18ம் தேதியுடன் முடிந்ததையடுத்து, ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த ஜனாதிபதிக்கு கவர்னர் பரிந்துரைத்தார். எனினும், கெஜ்ரிவால் கேட்ட கால அவகாசத்தை வழங்குமாறு கவர்னருக்கு மத்திய உள்துறை அமைச்சகம் பரிந்துரைத்ததால் டெல்லியில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்துவது நிறுத்தி வைக்கப்பட்டது.காங்கிரஸ் அளித்த ஆதரவை ஏற்று ஆட்சி அமைப்பது பற்றி மக்களிடம் கருத்து கேட்கப்படும். மக்கள் விருப்பம் தெரிவித்தால் ஆட்சி அமைப்பது பற்றி முடிவு செய்யப்படும் என்று கெஜ்ரிவால் அறிவித்தார். இதையடுத்து, எல்லா தொகுதிகளிலும் மக்களிடம் காங்கிரஸ் ஆதரவை ஏற்று ஆட்சி அமைப்பது பற்றி ஆம் ஆத்மி கட்சியினர் கருத்து கேட்டனர். இதில் 80 சதவீதம் பேர், ஆட்சி அமைக்க ஆதரவு தெரிவித்துள்ளதாக கெஜ்ரிவால் நேற்று முன்தினம் தெரிவித்தார்.

இந்த நிலையில், ஆம் ஆத்மி கட்சியின் அரசியல் விவகார குழு நேற்று காலை கூடியது. இதில் மக்களின் விருப்பத்தை ஏற்று காங்கிரஸ் ஆதரவுடன் டெல்லியில் ஆட்சி அமைப்பது என்று முடிவு செய்யப்பட்டது. ஆம் ஆத்மி கட்சியின் பேரவை தலைவராக கெஜ்ரிவால் ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். அவரது தலைமையிலேயே ஆட்சி அமைக்கவும் அரசியல் விவகார குழு முடிவு செய்தது.இதையடுத்து, கவர்னர் நஜீப் ஜங்கை நேற்று பிற்பகல் 12.30மணிக்கு கெஜ்ரிவால் சந்தித்தார். அப்போது, அவரிடம் ஆட்சி அமைக்க உரிமை கோரி கடிதம் கொடுத்தார். அதை பெற்று கொண்ட் கவர்னர், ‘அரசு அமைப்பது பற்றிய பரிந்துரையை ஜனாதிபதிக்கு அனுப்புவதாகவும், ஜனாதிபதியிடமிருந்து அனுமதி வந்தவுடன், ஆட்சி அமைக்கலாம் என்றும் கெஜ்ரிவாலிடம் கவர்னர் தெரிவித்தார்.


பின்னர், கவர்னர் மாளிகையிலிருந்து வெளியே வந்த கெஜ்ரிவால், நிருபர்களிடம் கூறியதாவது: காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சி அமைக்க மக்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். மக்களின் கருத்தை கேட்ட டெல்லி முழுவதும் 280 பொது கூட்டங்கள் நடத்தினோம். 257 தெருமனை கூட்டங்கள் நடத்தினோம். இதில் ஆட்சி அமைக்க வேண்டும் என்று மக்கள் தெரிவித்தனர். கட்சியின் அரசியல் விவகார குழுவும் ஆட்சியமைக்க முடிவு செய்தது. இதையேற்று கவர்னரை சந்தித்து ஆட்சிஅமைக்க உரிமை கோரியுள்ளோம். நாங்கள் நடத்தும் ஆட்சி, மக்களின் ஆட்சியாக இருக்கும். கொடுத்த வாக்குறுதிகளை நிச்சயம் நிறைவேற்றுவோம். நாங்கள் யாரிடமும் ஆதரவு கேட்கவில்லை. ஆதரவை வாபஸ் பெற்றால் தேர்தலை சந்திக்க எப்போதும் நாங்கள் தயாராக உள்ளோம். இவ்வாறு கெஜ்ரிவால் கூறினார்.

கெஜ்ரிவால் ஆட்சி அமைக்க ஜனாதிபதி இன்று அனுமதியளிப்பார் என்று தெரிகிறது. இதையடுத்து, 26ம் தேதியன்று முதல்வராக கெஜ்ரிவால் பதவியேற்பார் என்று தெரிகிறது. ராம்லீலா மைதானத்தில் மக்கள் முன்னிலையில் பதவியேற்பு விழாவை நடத்த கெஜ்ரிவால் முடிவு செய்துள்ளார்.
Share this post
  • Share to Facebook
  • Share to Twitter
  • Share to Google+
  • Share to Stumble Upon
  • Share to Evernote
  • Share to Blogger
  • Share to Email
  • Share to Yahoo Messenger
  • More...

0 comments

:) :-) :)) =)) :( :-( :(( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ :-$ (b) (f) x-) (k) (h) (c) cheer

 
© 2011 Ramanathapuram 2Day
Designed by FTech Cooperated with S.S.Karthik
Posts RSSComments RSS
Back to top