3 October 2013

இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா - திரை விமர்சனம்

இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா  -  திரை விமர்சனம்

 


‘ரௌத்திரம்’ படத்தில் ஆக்ஷனில் களமிறங்கிய கோகுல், முழுக்க முழுக்க காமெடியில் தடம் பதித்திருக்கும் படம்தான் ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’.



படத்தின் கதை ஒரேநாளில் நடக்கிறது. சுமார் மூஞ்சி குமாராக வேலை வெட்டி இல்லாமல் எப்போது குடியே கதி என்று இருக்கும் விஜய் சேதுபதி, அவரது எதிர்வீட்டில் குடியிருக்கும் நந்திதாவை ஒருதலையாக காதலிக்கிறார். ஆனால், அவரோ இவரை வேண்டாமென்று ஒதுக்கித் தள்ளுகிறார். ஆனாலும் விஜய்சேதுபதி விடாமல் நந்திதாவை துரத்துகிறார். இவர்களுடைய பஞ்சாயத்து அந்த ஏரியா தாதா பசுபதியிடம் செல்கிறது.

மறுமுனையில் அஸ்வினுக்கும் சுவாதிக்கும் காதல் உண்டாகிறது. அஸ்வின் வேலை செய்யும் வங்கியில் ஏகப்பட்ட பிரச்சினைகள். அதனால் குடித்துவிட்டு வண்டியை ஓட்டிச் செல்லும்போது ஒரு பெண்ணின் மீது மோதிவிடுகிறார். உயிருக்கு போராடும் அந்த பெண்மணியை காப்பாற்ற விஜய் சேதுபதியில் அரியவகை இரத்தம் தேவைப்படுகிறது. இதற்காக விஜய் சேதுபதியை தேடி அஸ்வினும் அவரது நண்பர்களும் வருகிறார்கள்.

அதேவேளையில் அஸ்வின் குடித்த டாஸ்மாக்கில் ஒரு கொலை நடக்கிறது. கொலையாளிகள் விஜய் சேதுபதியின் செல்போனை திருடிவிட்டு தப்பி விடுகின்றனர். கொலை செய்த இடத்தில் இருந்ததால் சந்தேகத்தின் பேரில் அஸ்வின் மோதிய பெண்ணின் கணவரை போலீஸ் கைது செய்கிறது.

இந்த மூன்று கதைகளையும் சேர்த்து முடிச்சு போட்டு நகைச்சுவையுடனும், சஸ்பென்ஸுடனும் முடித்திருக்கிறார்கள்.


படம் முழுக்க விஜய் சேதுபதி ரகளை பண்ணியிருக்கிறார். இவர் திரையில் வரும்போதெல்லாம் திரையரங்கும் சிரிப்பலையில் அதிர்கிறது. கிளைமாக்ஸ் காட்சியில் மருத்துவமனையில் இவர் அடிக்கும் லூட்டி வயிற்றை பதம் பார்க்கிறது. எதிர்வீட்டிலிருக்கும் நந்திதாவை விழுந்து விழுந்து காதலிப்பதில் அசத்தியிருக்கிறார். இவர் பேசும் சென்னை பாஷை தனி அழகுதான். இவருக்காக படத்தை கண்டிப்பாக பார்க்கலாம்.



விஜய்சேதுபதியின் காதலை அறவே வெறுக்கும் கதாபாத்திரத்தில் ‘அட்டக்கத்தி’ நந்திதா. மிகவும் அழகாக இருக்கிறார். இவர் டென்ஷனாகும் காட்சி நம்மை ரசிக்க வைக்கிறது. படத்தில் இன்னொரு ஜோடி அஸ்வின்-ஸ்வாதி. மங்காத்தாவில் பார்த்த அஸ்வினுக்கும் இந்த படத்தில் வரும் அஸ்வினுக்கும் அப்படியே எதிர்மறையாக இருக்கிறது.

அஸ்வின் வேலை பார்க்கும் வங்கி மேனேஜராக வரும் எம்.எஸ்.பாஸ்கர் சம்பந்தப்பட்ட காட்சிகள் எல்லாமே சிரிக்க வைக்கின்றன. ஸ்வாதிக்கு சென்னையில் வாழும் வித்தியாசமான பெண் கதாபாத்திரம். பொம்மைபோல இருக்கிறார். சுகர் பேஷண்ட் தாதாவாக வரும் பசுபதி, விஜய் சேதுபதியின் காதலுக்கு பஞ்சாயத்து செய்யும்போது சிரிக்க வைக்கிறார். அவருடைய அல்லக்கையாக வரும் ரோபோ சங்கர் ஒருசில காட்சிகளே வந்தாலும் ரவுசு பண்ணுகிறார். இவர்கள் மட்டுமல்லாமல் சூரி, ராஜேந்திரன் போன்றோரும் காமெடியில் ரகளை பண்ணியிருக்கிறார்கள்.

மூன்று கதைகள், அவற்றை சரியான விகிதத்தில் கலந்து ஒரு இடத்திற்கு கொண்டு வந்து அழகாக முடித்திருக்கிறார் இயக்குனர் கோகுல். கடைசி அரைமணி நேர காமெடி கலாட்டாக்கள் படத்தை சற்று தூக்கி நிறுத்தியிருக்கிறது. வெறும் காமெடிக்காக மட்டுமே படத்தை எடுக்காமல் குடி குடியைக் கெடுக்கும் என்ற கருத்தை சொல்லி முடித்ததற்காக இயக்குனரை பாராட்டலாம்.

சித்தார்த் விபின் இசையில் ‘என் வீட்டுல அவ இருந்தாளே’ என்ற பாடலும், பிரேயர் சாங்கும் கேட்பதற்கு மட்டுமல்லாமல் பார்ப்பதற்கும் அழகாக படமாக்கியிருக்கிறார்கள். ‘என் வீட்டுல’ பாடலில் விஜய் சேதுபதியுடன் இணைந்து ராஜூசுந்தரம் குரூப் செய்யும் ரகளையான டான்ஸ் ரசிக்க வைக்கிறது. மகேஷ் முத்துச்சாமி ஒளிப்பதிவில் பாடல்களும், காட்சிகளும் ரசிக்க வைக்கின்றன. வடசென்னையை தன் கேமரா கண்களால் அழகாக படமாக்கியிருக்கிறார்.



 மொத்தத்தில் ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ கொண்டாட்டம்தான். 





Share this post
  • Share to Facebook
  • Share to Twitter
  • Share to Google+
  • Share to Stumble Upon
  • Share to Evernote
  • Share to Blogger
  • Share to Email
  • Share to Yahoo Messenger
  • More...

0 comments

:) :-) :)) =)) :( :-( :(( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ :-$ (b) (f) x-) (k) (h) (c) cheer

 
© 2011 Ramanathapuram 2Day
Designed by FTech Cooperated with S.S.Karthik
Posts RSSComments RSS
Back to top