14 September 2013

பா.ஜனதா கூட்டணி வெற்றி பெற்றால் மோடிக்கு பிரதமர் பதவி

பா.ஜனதா கூட்டணி வெற்றி பெற்றால் மோடிக்கு பிரதமர் பதவி




புதுடெல்லி :
பா.ஜ ஆட்சி மன்றக் குழு கூட்டத்தில் பிரதமர் வேட்பாளராக, நரேந்திர மோடி நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார். இதனால் அடுத்த நாடாளுமன்ற தேர்தலில், பா.ஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றால், நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்பார். இரண்டு மக்களவை தேர்தல்களில் தொடர் தோல்வியை சந்தித்த பா.ஜ, அடுத்த மக்களவை தேர்தலில் ஐக்கிய முற்போக்கு கூட்டணியை வீழ்த்தி ஆட்சியை பிடிக்க வேண்டும் என தீர்மானமாக உள்ளது. இதற்கான திட்டங்களை பா.ஜ.வை வழிநடத்தும் அமைப்பான ஆர்.எஸ்.எஸ் வகுத்தது. அத்வானிக்கு மக்களிடம் செல்வாக்கு குறைந்துவிட்டதை உணர்ந்த ஆர்.எஸ்.எஸ், அவருக்கு மாற்றாக வேறு தலைவரை முன்னிலைப்படுத்த முடிவு செய்தது.

கோத்ரா கலவரத்தால் ஏற்பட்ட அவப்பெயரையும் மீறி குஜராத்தை சட்டசபை தேர்தலில் தொடர்ச்சியாக வெற்றி பெற்று நாட்டின் முன்னணி மாநிலமாக குஜராத் உருவாக்கிய நரேந்திரமோடியை முன்னிறுத்துவதுதான் சிறந்தது என ஆர்.எஸ்.எஸ் முடிவு செய்தது. பிரபல நிறுவனங்கள் நடத்திய தேர்தல் கருத்துக் கணிப்பிலும், மோடியை முன்னிறுத்துவதுதான் பா.ஜ.வுக்கு சிறந்தது என கருத்து தெரிவித்தன.   தனது கருத்தை ஆணித்தரமாக பா.ஜ முக்கிய தலைவர்களிடம் கூறிவிட்டது ஆர்எஸ்எஸ். இதையடுத்துதான் பா.ஜ. தேசிய செயற்குழு கூட்டத்தில் தேர்தல் பிரசார குழு தலைவராக மோடி அறிவிக்கப்பட்டார்.

இதில் நாடாளுமன்ற பிரபலங்களாக விளங்கிய பா.ஜ மூத்த தலைவர்கள் சிலருக்கு உடன்பாடில்லை. தேசிய அரசியலில் அனுபவம் இல்லாத ஒரு மாநில முதல்வரை, பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்துவதா என கேள்வி எழுப்பினர். ஆனால், ஆர்.எஸ்.எஸ் தனது முடிவில் பின்வாங்கவில்லை. அதிருப்தியடைந்த மூத்த தலை வர் அத்வானி கட்சி பதவிகளில் இருந்து விலகினார். பின் ஆர்.எஸ்.எஸ் வேண்டுகோளை ஏற்று ராஜினாமா முடிவை வாபஸ் பெற்றார்.

நவம்பர் மாதம் நடைபெறவுள்ள 5 மாநில சட்டசபை தேர்தல், அடுத்த மக்களவை தேர்தலுக்கு அரை இறுதி போட்டியாக கருதப்படுவதால், இப்போதே நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்த ஆர்.எஸ்.எஸ் வலியுறுத்தியது. இதற்காக அத்வானியை சமாதானம் செய்யும் முயற்சியில் கட்கரியை தூதுவராக ஆர்.எஸ்.எஸ் அனுப்பியது. பா.ஜ தலைவர் ராஜ்நாத் சிங்கும் அத்வானியை பலமுறை சந்தித்து சமாதானம் செய்ய முயன்றார். ஆனாலும் பலனில்லை.

ராஜ்நாத் சிங் தனது தனிப்பட்ட அதிகாரத்தை பயன்படுத்தி, மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க முடிவு செய்தார். இதற்காக பா.ஜ ஆட்சி மன்றக் குழு கூட்டம் நேற்று மாலை கூட்டப்பட்டது. இதில் அத்வானி தவிர மற்ற முக்கிய தலைவர்கள் சுஷ்மா சுவராஜ், முரளி மனோகர் ஜோஷி, அருண் ஜேட்லி, நிதின்கட்கரி, மோடி உட்பட பல தலைவர்கள் கலந்து கொண்டனர். இதில் பா.ஜ பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடியை அதிகாரப்பூர்வமாக ராஜ்நாத் சிங் அறிவித்தார். அவருக்கு மற்ற தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

அதன்பின் பேட்டியளித்த ராஜ்நாத் சிங், ‘‘பா.ஜ பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடியை ஆட்சி மன்றக் குழு தேர்ந்தெடுத்துள்ளது. மக்களின் எண்ணத்தையும், எதிர்பார்ப்பையும் கருத்தில் கொண்டு மோடி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கட்சி பாரம்பரியப்படி இந்த முடிவு எடுக்கப்பட்டது’’ என்றார். இதன்மூலம் கடந்த சில மாதங்களாக நீடித்த பா.ஜ பிரதமர் வேட்பாளர் சஸ்பென்ஸ் நேற்று முடிவுக்கு வந்தது. அடுத்த மக்களவை தேர்தலில் பா.ஜ தலைமையிலான தே.ஜ கூட்டணி வெற்றி பெற்றால் நரேந்திர மோடி பிரதமர் ஆவார். மோடி தேர்வு செய்யப்பட்டதை டெல்லியில் பா.ஜ தலைமையகத்தில் பா.ஜ. மற்றும் ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் உற்சாகமாக கொண்டாடினர். 

மோடி அளித்த பேட்டியில், ‘‘என் மீது நம்பிக்கை வைத்த கட்சி தலைவர்களுக்கும், தொண்டர்களுக்கும், தே.ஜ கூட்டணி கட்சிகளுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நாடு சிக்கலில் உள்ளது. இதிலிருந்து நாட்டை மீட்க மக்கள் பா.ஜ.கூட்டணிக்கு ஆதரவு அளிக்க வேண்டும்’’ என்றார். அதன்பின் அத்வானியை சந்தித்து ஆசி பெற, நரேந்திரமோடி புறப்பட்டு சென்றார்.
Share this post
  • Share to Facebook
  • Share to Twitter
  • Share to Google+
  • Share to Stumble Upon
  • Share to Evernote
  • Share to Blogger
  • Share to Email
  • Share to Yahoo Messenger
  • More...

0 comments

:) :-) :)) =)) :( :-( :(( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ :-$ (b) (f) x-) (k) (h) (c) cheer

 
© 2011 Ramanathapuram 2Day
Designed by FTech Cooperated with S.S.Karthik
Posts RSSComments RSS
Back to top