28 September 2013

சினிமா விழாவுக்கு அழைக்காததால் என் தன்மானம் காப்பாற்றப்பட்டது

சினிமா விழாவுக்கு அழைக்காததால் என் தன்மானம் காப்பாற்றப்பட்டது



சென்னை : 

திமுக தலைவர் கருணாநிதி நேற்று வெளியிட்ட அறிக்கை: 

இந்திய சினிமா நூற்றாண்டு நிறைவு விழா தொடர்பாக என்னை பற்றி பலரும் குறிப்பிட்டு பல்வேறு ஏடுகளில் எழுதியிருக்கிறார்கள். செய்தியாளர்கள் பலரும் என்னை சந்தித்த போது அதைப்பற்றி கேட்டார்கள்.

இந்த சினிமா விழா பற்றி நான் எதுவும் பேச விரும்பவில்லை என்றாலும், என் கருத்தை வெளியிடவேண்டுமென்று பலரும் பெரிதும் வலியுறுத்தியதின் பேரில், நான் படித்த, கேள்விப்பட்ட செய்திகளை மட்டும் தொகுத்து வெளியிடுகின்றேன். இது யாரையும் குற்றம் சாட்டுவதற்காகவோ, தவறு காண்பதற் காகவோ அல்ல.

அரசின் சார்பில், ஓர் அமைப்பின் சார்பில் பொதுமக்களின் வரிப் பணத்திலிருந்து அரசு தரும் நிதி உதவியோடு இதுபோன்ற விழாக்களை நடத்தும் போது, மற்றவர்கள் குற்றம் சொல்வதற்கு சிறிதும் வாய்ப்பளிக்காத வகையில் பார்த்து கொள்வது மிகவும் அவசியம். ஏனென்றால் கர்நாடக கலாசாரத் துறை அமைச்சர், இந்த விழாவிற்கு கர்நாடகாவில் இருந்து தமிழ் நாட்டுக்கு வந்த திரைத் துறை கலைஞர்கள் இடவசதி, போக்குவரத்து வசதி உரிய அனுமதி கிடைக்காமல் அலைக்கழிக்கப்பட்டனர்; அதற்கு தமிழக முதல்வர் பொறுப்பேற்று மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும் கண்டனம் தெரிவித்திருப்பதாக செய்தி வந்துள்ளது.

குறிப்பாக 24ம் தேதி நடைபெற்ற நிறைவு விழாவிற்குத் தலைமை ஏற்றவர் யார்? அரசு சார்பிலோ, தனியார் சார்பிலோ இதுபோல விழாக்கள் நடத்தப்படுமேயானால் அதற்கு ஒருவர் தலைமை தாங்கு வதுதான் நீண்ட நெடுங்காலமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வரும் மரபு. ஆனால் இந்த விழாவிற்கான முழுப்பக்க விளம்பரங்களில் தலைமை ஏற்போர் என்று குறிப்பிட்டு, தமிழக ஆளுநர் கே. ரோசய்யா, தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதா, கேரள முதல்வர் உம்மன் சாண்டி பெயர்கள் குறிப்பிடப்பட்டிருந்தன.

எனவே இந்த விழாவிற்கு 3 பேர் தலைமை வகித்துள்ளார்கள். குடியரசுத் தலைவர், ஆளுநர், முதல்வர்கள் இதுபோன்ற விழாவில் கலந்து கொள்கிறார்கள் என்றால், தலைமை விருந்தினராக குடியரசுத் தலைவரும், நிகழ்ச்சிக்குத் தலைவராக ஆளுநரும், முன்னிலை வகிப்பவர்களாக முதல்வர்கள் பெயரும் வெளியிடுவதுதான் ப்ரோட்டாகால்படி சரியான நடைமுறை. ஆனால் இந்த விழாவில் ஆளுநரும், முதல்வர்களும் தலைமை ஏற்போர்களாக வெளியிடுவதற்கு என்ன காரணம் என்பதை நீங்களே புரிந்து கொள்ளுங்கள். ஒரு விழாவிற்கு எத்தனை தலைவர்கள் என்பதை நிகழ்ச்சியை நடத்தியவர்கள்தான் கூற வேண்டும்.

மேலும் 4 நாட்கள் நடைபெற்ற இந்த விழாவில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், இளையராஜா, எஸ்.எஸ்.ஆர். போன்ற மூத்த கலைஞர்களுக்கு முன் வரிசையில் இடம் ஒதுக்கப்படவில்லை என்பது மாத்திரமல்ல, அவர்கள் முன்வரிசையில் சென்று அமர்ந்த பிறகு, அவர்களை இருந்த இடத்திலிருந்து எழுப்பி பின் வரிசையில் அமரச் செய்தது, ஒட்டுமொத்த கலைஞர்களையும் அவமானப்படுத்திய அநாகரிகச் செயலாகும்.

விழாவிற்கான அழைப்பிதழ்கள் ஜனநாயகத்தின் நான்காவது எஸ்டேட் என்று பெருமையோடு சொல்லப்படும் பத்திரிகைத் துறையினரில் பெரும்பாலான பத்திரிகையாளர்களுக்கு அனுப்ப ப்படவில்லை. தொலைக்காட்சி யினர் பலருக்கும் உள்ளே செல்லவே அனுமதி இல்லை.நிகழ்ச்சிக்குக் குறிப்பிட்ட பத்திரிகையாளர்கள், போட்டோகிராபர்களை மட்டுமே அனுமதித்தனர். நடிகர் ரஜினிகாந்த், அவர் மகள் சௌந்தர்யாவுடன் வந்தார். ரசிகர்கள் கைதட்டி, விசில் அடித்து ஆரவாரம் செய்தனர். ரஜினி மேடைக்கு சென்று ரசிகர்களைப் பார்த்து கையசைத்து வணக்கம் தெரிவித்தவுடன் முன்வரிசையில் அமர்ந்தார்.

அவரிடம், புரோட்டோகால்படி உங்களுக்கு 3ம் வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது என்று அரசு அதிகாரிகள் அவரை அங்கு அனுப்பி வைத்தனர். (இது எந்த வகை புரோட்டோகால் என்பதை விழா அமைப்பாளர்கள்தான் விளக்க வேண்டும்) விழா மேடைக்கு கீழே, சசிகலா, அமைச்சர்கள் அனைவரும் அமர்ந்திருந்தனர்.
தமிழக அரசு சார்பாக 10 கோடி நிதி உதவி அளித்ததை வைத்து, நிகழ்ச்சியின் ஒளிபரப்பு உரிமை அப்படியே ஜெயா டி.வி.க்குப் போனது. இதனால் மற்ற சேனல்களுக்கு விழாவில் அனுமதி இல்லை. கடைசி நேரம் வரை பத்திரிகையாளர்களுக்கும், அடையாள அட்டை வழங்கப்படவில்லை. அழைப்பிதழும், அனுமதிச் சீட்டும் இல்லாமலேயே பலரும் அரங்கில் நுழைந்தனர்.

விஜயகாந்த் நடித்த 2 திரைப்படங்களில் சில காட்சிகளைக் காண்பித்தார்களே தவிர, அவரின் முகத்தை தப்பித் தவறியும் காட்டவில்லை. பி. சுசீலா, எஸ். ஜானகி என தமிழ் சினிமாவுக்குப் பெரும் பங்காற்றிய பெரும்பாலானவர்கள் வர வில்லை. இவர்களில் பலர் விழாவுக்கு அழைக்கப்படவே இல்லையாம்.

இந்த விழாவிற்கு என்னை அழைக்கவில்லை என்பது பற்றி வார இதழ்கள் எழுதியதோடு, அங்கே நடைபெற்ற சில சம்பவங்களை எழுதியிருப்பதைப் பார்க்கும் போது அவர்களுக்கெல்லாம் என்ன நேரிடுமோ என்ற கவலைதான் எனக்கு ஏற்படுகிறது. ஆனால் அங்கே அழைக்கப்பட்ட சில பெரிய கலைஞர்கள் நடத்தப்பட்ட விதத்தை இந்த ஏடுகளின் மூலம் படிக்கும் போது, நல்லவேளை நம்மை அழைக்காமல் விட்டார்களே நம் தன்மானம் காப்பாற்றப்பட்டதே என்றுதான் நான் எடுத்துக் கொள்கிறேன். அழைக்காமல் பலரையும், அழைத்து பலரையும் பெருமைப்படுத்தி (?) இருப்பதே இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழா.
Share this post
  • Share to Facebook
  • Share to Twitter
  • Share to Google+
  • Share to Stumble Upon
  • Share to Evernote
  • Share to Blogger
  • Share to Email
  • Share to Yahoo Messenger
  • More...

0 comments

:) :-) :)) =)) :( :-( :(( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ :-$ (b) (f) x-) (k) (h) (c) cheer

 
© 2011 Ramanathapuram 2Day
Designed by FTech Cooperated with S.S.Karthik
Posts RSSComments RSS
Back to top