2 September 2013

பெங்களூர் சிறையில் இருந்து காமக்கொடூரன் தப்பி ஓட்டம்

பெங்களூர் சிறையில் இருந்து காமக்கொடூரன் தப்பி ஓட்டம்



பெங்களூர், செப்.2:-
 

தமிழ்நாட்டில், சேலம் மாவட்டம் இடைப்பாடி அருகே பனங்காட்டூரை சேர்ந்த மாரிமுத்து என்பவரின் மகன் ஜெய்சங்கர் என்ற சங்கர் (வயது 36). இவனுக்கு பரமேஸ்வரி என்ற மனைவியும், 3 மகள்களும் உள்ளனர்.

ஜெய்சங்கர் லாரி டிரைவராக வேலை செய்தான்.

இவனுக்கு போதை பழக்கம், சூதாட்டம் மற்றும் வெவ்வேறு பெண்களுடன் தொடர்பும் இருந்தது. அந்த பழக்கத்தின் மூலம் நாளடைவில் வீட்டில் தனியாக இருக்கும் பெண்களை கற்பழித்து கொலை செய்து, நகைகளை கொள்ளையடிக்கும் சம்பவங்களில் ஜெய்சங்கர் தொடர்ந்து ஈடுபட ஆரம்பித்தான்.

இவன் மீது தமிழ்நாட்டில் சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பூர், ஈரோடு, கோவை, நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் பல பெண்களை கற்பழித்ததாக 8 வழக்குகளும், 3 கொலை, கொள்ளை, வழிப்பறி, கொலை முயற்சி உள்பட 19 வழக்குகளும் உள்ளன.

இந்த நிலையில் கோவை பெருமாநல்லூர் போலீஸ் சரகத்தில் நடந்த கற்பழிப்பு, கொலையில் ஜெய்சங்கர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டான். கடந்த 2011-ம் ஆண்டு மார்ச் 18-ந் தேதி கோவை சிறையில் இருந்து தர்மபுரி கோர்ட்டில் ஆஜர்படுத்துவதற்காக ஜெய்சங்கரை போலீசார் அழைத்து சென்றனர்.

தர்மபுரியில் இருந்து கோவை சிறைக்கு அழைத்து வரும் போது சேலம் பஸ் நிலையத்தில் வைத்து சிறுநீர் கழிப்பதாக போலீசாரிடம் சொல்லி விட்டு ஜெய்சங்கர் தப்பி ஓடிவிட்டான். இதன் காரணமாக பணி இடைநீக்கம் செய்யப்பட்ட கோவை ஆயுதப்படை போலீஸ்காரர் சின்னசாமி, தன்னை தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தலைமறைவான ஜெய்சங்கரை போலீசார் தீவிரமாக தேடிவந்தனர். காமக்கொடூரன் ஜெய்சங்கர் தமிழ்நாடு மட்டும் அல்லாது கர்நாடக மாநிலத்திலும், பெங்களூர் புறநகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் வீட்டில் தனியாக இருக்கும் பெண்களை குறி வைத்து, அவர்களை கற்பழித்து கொலை செய்யும் சம்பவங்களில் ஈடுபட்டு வந்தான்.

கர்நாடக போலீசாரும் ஜெய்சங்கரை பிடிக்க நடவடிக்கை எடுத்து வந்தனர். கடந்த 2011-ம் ஆண்டு மே மாதம் 4-ந் தேதி பிஜாப்பூர் மாவட்டம் ஏளகி கிராமத்தில் ஒரு பெண்ணை ஜெய்சங்கர் கற்பழிக்க முயன்றபோது கிராம மக்கள் அவனை மடக்கிப்பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

போலீசார் அவனை கைது செய்து பெங்களூர் பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் ஜெய்சங்கர் அடைத்தனர். கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக அவன் சிறையில் இருந்து வந்தான். ஜெய்சங்கர், சிறையில் தனி அறையில் அடைக்கப்பட்டு இருந்தான்.

பெங்களூர் குண்டுவெடிப்பில் கைதான அப்துல் நாசர் மதானிக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு போலவே, ஜெய்சங்கருக்கும் போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டு இருந்தது. அவனை தும்கூர் கோர்ட்டில் ஆஜர்படுத்த நேற்று முன்தினம் போலீசார் மிகுந்த பாதுகாப்புடன் அழைத்து சென்றார்கள்.

தும்கூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி விட்டு நேற்று முன்தினம் இரவே ஜெய்சங்கரை பெங்களூர் சிறைக்கு போலீசார் அழைத்து வந்தனர். பின்னர் அவன் சிறையில் உள்ள தனி அறையில் அடைக்கப்பட்டான். இந்த நிலையில், அதிகாலையில் ஜெய்சங்கர் திடீரென்று தப்பி ஓடி மாயமாகி விட்டான்.

தகவல் அறிந்ததும் சிறைத்துறை மற்றும் போலீஸ் உயர் போலீஸ் அதிகாரிகள் அங்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். சிறையில் உள்ள 3 காம்பவுண்டு சுவர்களில் ரத்தக்கறை படிந்திருந்தது. இதனால் அவன் காம்பவுண்டு ஏறி குதித்து தப்பி ஓடி இருக்கலாம் என்று முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது.

பரப்பனஅக்ரஹாரா சிறையில் தரை தளத்தில் ஜெய்சங்கர் அடைக்கப்பட்டு இருந்தான். சிறை அறையின் கதவை கள்ளச்சாவி போட்டு ஜெய்சங்கர் திறந்து இருக்கிறான். அங்கிருந்து சிறையில் முதல் மாடிக்கு வந்த அவன், 300 மீட்டர் தூரத்தில் உள்ள முதல் காம்பவுண்டு சுவர் அருகில் வந்துள்ளான். அந்த காம்பவுண்டு சுவர் 15 அடி உயரம் கொண்டதாகும்.

அந்த காம்பவுண்டு சுவரை ஏறி குதித்த ஜெய்சங்கர், அங்கிருந்து சிறிது தூரத்தில் இருக்கும் மற்றொரு 15 அடி உயரம் கொண்ட காம்பவுண்டு சுவர் மீதும் ஏறி குதித்தான். அதன்பிறகு, சிறையில் உள்ள மெயின் காம்பவுண்டு சுவரில் ஏறி, அங்கிருந்து கீழே குதித்து ஜெய்சங்கர் தப்பி ஓடியது தெரியவந்து உள்ளது.

மெயின் காம்பவுண்டு சுவர் 30 அடி உயரம் கொண்டது. அந்த சுவரில் மின்வேலியும் இருக்கிறது. 3 காம்பவுண்டு சுவர்களிலும், அதன் அருகேயும் ரத்த கரை படிந்து இருந்ததால், அவன் சுவர்களில் ஏறி குதிக்கும் போது கீழே விழுந்ததில், அவனது கை, காலில் பலத்த ரத்த காயம் ஏற்பட்டு இருக்கிறது.
அப்படி இருந்தும் அவன் துணிந்து தப்பிச் சென்று இருக்கிறான்.

நள்ளிரவு 12 மணிக்கு மேல் 4 மணிக்குள் ஜெய்சங்கர் தப்பி ஓடி இருக்கலாம் என்று கருதப்படுகிறது. அந்த நேரத்தில் பலத்த மழையும் பெய்திருக்கிறது. இதனால் மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டு இருந்தது. இதனால் காம்பவுண்டு சுவரில் ஜெய்சங்கர் ஏறி குதிக்கும் போது, அங்கிருந்த மின்சார வேலி செயல்படாமல் இருந்துள்ளது.

மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது ஜெய்சங்கர் தப்பி ஓட சாதகமாக அமைந்துள்ளது. சிறையில் இருந்து ஜெய்சங்கர் தப்பி ஓடுவதற்காக, சிறையில் இருக்கும் ஆஸ்பத்திரியில் உள்ள கையுறைகள், பெல்ட்கள், போர்வையை அவன் பயன்படுத்தி இருக்கிறான். சுவரை தாண்டுவதற்கு பெரிய கம்பை தரையில் ஊன்றி, எம்பிக்குதித்து இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

அது மட்டும் இல்லாமல் போலீஸ் சீருடையை அணிந்து கொண்டும் ஜெய்சங்கர் தப்பி ஓடியதாக தெரியவந்துள்ளது. பல நாட்களாக திட்டமிட்டு, நேற்று முன்தினம் அவன் தப்பி ஓடி இருக்கிறான். ஒரே நாளில் அவனால் தப்பி ஓடவாய்ப்பில்லை. சிறையில் உள்ள 70 ரகசிய கண்காணிப்பு கேமராவில் 7 கேமராக்கள் மட்டுமே செயல்பட்டு வருகிறது.

பலத்த போலீஸ் பாதுகாப்பை மீறி, 3 பெரிய காம்பவுண்டு சுவர்களை அவன் ஏறி குதித்து தப்பி ஓடி இருப்பதால் சிறையில் உள்ள போலீஸ்காரர்கள் அவனுக்கு உதவி செய்து இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இந்த சம்பவத்தை தொடர்ந்து ஒரு உதவி சூப்பிரண்டு, 3 சிறை அதிகாரிகள், வார்டன்கள் உள்பட 11 பேர் பணி இடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.

தப்பி ஓடிய ஜெய்சங்கரை பிடிக்க உயர் போலீஸ் அதிகாரிகள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு இருக்கிறது. சிறையில் இருந்து அரை கிலோ மீட்டர் தூரத்தில் தான் ஓசூர் மெயின் ரோடு உள்ளது. எனவே தப்பி வந்த ஜெய்சங்கர், தமிழ்நாட்டிற்கு ஏதாவது லாரியில் ஏறி தலைமறைவாகி இருக்கலாம் என்றும், மேலும் காம்பவுண்டு சுவர்களில் இருந்து அவன் குதித்ததில் பலத்த காயம் அடைந்திருப்பதால், பெங்களூரில் ஏதாவது ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறலாம் என்றும் கருதப்படுகிறது.

ஜெய்சங்கர் மீது மொத்தம் 24 வழக்குகள் உள்ளன. அவற்றில் 2 வழக்குகளில் தான் அவனுக்கு தண்டனை கிடைத்திருக்கிறது. தமிழ்நாடு, கர்நாடகம், ஆந்திரா மாநிலத்தில் மற்ற வழக்குகள் கோர்ட்டில் விசாரணையில் உள்ளன.

தமிழ்நாட்டில் பதுங்கலா? ஜெய்சங்கர் தமிழ்நாட்டிற்குள் பதுங்க வாய்ப்புகள் உள்ளது என்பதால் மாநில எல்லையில் உள்ள சோதனை சாவடியில் போலீசார் உஷார் நிலையில் இருக்க கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில் குமார் உத்தரவிட்டார்.

அதைத் தொடர்ந்து எல்லையில் உள்ள ஜூஜூவாடி சோதனை சாவடியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் அனைத்து வாகனங்களையும் சோதனை செய்த பிறகே அனுப்புகிறார்கள்.
Share this post
  • Share to Facebook
  • Share to Twitter
  • Share to Google+
  • Share to Stumble Upon
  • Share to Evernote
  • Share to Blogger
  • Share to Email
  • Share to Yahoo Messenger
  • More...

0 comments

:) :-) :)) =)) :( :-( :(( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ :-$ (b) (f) x-) (k) (h) (c) cheer

 
© 2011 Ramanathapuram 2Day
Designed by FTech Cooperated with S.S.Karthik
Posts RSSComments RSS
Back to top