28 August 2013

பெண் கல்விக்காக போராடிய மலாலாவுக்கு சர்வதேச குழந்தைகளின் அமைதிக்கான உயரிய பரிசு

பெண் கல்விக்காக போராடிய மலாலாவுக்கு சர்வதேச குழந்தைகளின் அமைதிக்கான உயரிய பரிசு 


லண்டன், ஆக. 28-

பெண் கல்விக்காக போராடி பாகிஸ்தான் தலிபான்களின் துப்பாக்கி குண்டுகளால் சிதைக்கப்பட்ட மலாலாவுக்கு சர்வதேச குழந்தைகளின் அமைதிக்கான உயரிய பரிசு வழங்கப்படுகிறது.

நெதர்லாந்து நாட்டின் ஆம்ஸ்டர்டாம் நகரில் இயங்கி வரும் 'கிட்ஸ் ரைட்ஸ்' என்ற குழந்தைகளின் உரிமைகளுக்கான அமைப்பு இந்த விருதினை வழங்கி கவுரவிக்கிறது.

பெண் கல்வியை ஊக்குவித்த பாகிஸ்தான் மாணவி மலாலா(15) என்பவரை தலிபான்கள் கடந்த அக்டோபர் மாதம் 9ம் தேதி கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டனர். தலை உள்பட பல இடங்களில் குண்டுபாய்ந்த நிலையில் பாகிஸ்தான் ராணுவ ஆஸ்பத்திரியில் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த அவருக்கு இலவச உயர்சிகிச்சை அளிக்க இங்கிலாந்து அரசு முன்வந்தது.

இதனையடுத்து, தனி விமானம் மூலம் கொண்டுசெல்லபட்டு லண்டனில் உள்ள ராணி எலிசபத் ஆஸ்பத்திரியில் அவர் அனுமதிக்கப்பட்டார். தீவிர  சிகிச்சை பெற்று வந்த மலாலாவுக்கு இதுவரை 3 ஆபரேஷன்கள் நடந்துள்ளன. மேற்கொண்டு சில ஆபரேஷன்கள் செய்ய வேண்டியுள்ளதாகவும் அவற்றை பிறகு செய்து கொள்ளலாம் எனவும் டாக்டர்கள் அறிவுரை வழங்கினர்.

உடல்நலம் தேறிய மலாலா, கடந்த மாதம் ஆஸ்பத்திரியில் இருந்து 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டார்.

கடந்த டிசம்பர் மாதம் தனது மகளுடன் லண்டன் சென்று மலாலாவை ஆஸ்பத்திரியில் சந்தித்து ஆறுதல் கூறிய பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி, அவருக்கு மேல் சிகிச்சை அளிக்க வேண்டியுள்ளதால் குடும்பத்தாருடன் மலாலா லண்டனிலேயே தங்கியிருக்க ஏற்பாடு செய்தார். லண்டனில் உள்ள பள்ளி ஒன்றில் மலாலா தற்போது படித்து வருகிறார். லண்டனில் உள்ள பாகிஸ்தான் தூதரக பள்ளியில் மலாலாவின் தந்தைக்கு வேலை வழங்கவும் சர்தாரி உத்தரவிட்டார்.

அவர்களின் குடும்பம் லண்டனில் உள்ள 'வெஸ்ட் மிட்லேண்ட்ஸ்' என்ற இடத்தில் வசித்து வருகிறது.

இதற்கிடையில், உலகின் உயரிய விருதான நோபல் விருதுக்கு இந்த ஆண்டு பரிந்துரைக்கப்பட்டவர்களின் பெயர்களில் மலாலாவின் பெயரும் இடம் பெற்றுள்ளது.

இந்நிலையில், நெதர்லாந்து நாட்டின் ஆம்ஸ்டர்டாம் நகரில் இயங்கி வரும் 'கிட்ஸ் ரைட்ஸ்' என்ற குழந்தைகளின் உரிமைகளுக்கான அமைப்பு இந்த விருதினை வழங்கி கவுரவிக்கிறது.

'தனது உயிரை பணயம் வைத்து உலகில் உள்ள பெண் குழந்தைகள் கல்வியறிவை பெறும் உரிமைக்காக போராடியவர், மலாலா. 2013ம் ஆண்டுக்கான சர்வதேச குழந்தைகளுக்கான அமைதி பரிசை மலாலாவுக்கு வழங்குவதன் மூலம் குழந்தைகளின் உரிமைக்காக சிறப்பு அர்ப்பணிப்புடன் போராடிய இந்த வீரமும், திறமையும் வாய்ந்த சிறுமியின் மீது கிட்ஸ் ரைட்ஸ் இயக்கம் ஒளி வெள்ளத்தை பாய்ச்சுகிறது' என கிட்ஸ் ரைட்ஸ் இயக்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

டச்சு நாட்டில் துவங்கப்பட்ட கிட்ஸ் ரைட்ஸ் இயக்கத்தின் சார்பில் சர்வதேச அமைதி பரிசு வழங்கும் திட்டத்தை 2005ம் ஆண்டு ரோம் நகரில் நடைபெற்ற நோபல் பரிசாளர்கள் மாநாட்டின் போது ரஷ்ய நாட்டின் முன்னாள் அதிபர் மிக்கய்ல் கோர்பச்சேவ் தொடங்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அனாதையாக தெருவில் திரிந்தபோதும் தன்னைப்போன்று தெருக்களில் தவித்த பிலிப்பைன்ஸ் நாட்டு அனாதை குழந்தைகளின் நல்வாழ்வுக்காக பாடுபட்ட 13 வயது சிறுவனுக்கு கடந்த ஆண்டு இந்த பரிசு வழங்கப்பட்டது நினைவிருக்கலாம்.

ஒரு லட்சம் யூரோ (இந்திய மதிப்புக்கு சுமார் 14 1/2 லட்சம்) ரொக்கம் மற்றும் சான்றிதழ் கொண்ட இந்த பரிசு, தெற்கு ஹாலந்தின் தலைநகர் ஹாக் நகரில் அடுத்த (செப்டம்பர்) மாதம் நடைபெறும் விழாவில் வழங்கப்படுகிறது.

ஏமன் நாட்டின் பெண்ணுரிமை போராளியும், பத்திரிகையாளரும், அரசியல்வாதியும், அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவருமான தவக்கோல் கர்மன் மலாலாவுக்கு சர்வதேச குழந்தைகளுக்கான அமைதி பரிசை வழங்குகிறார்.
Share this post
  • Share to Facebook
  • Share to Twitter
  • Share to Google+
  • Share to Stumble Upon
  • Share to Evernote
  • Share to Blogger
  • Share to Email
  • Share to Yahoo Messenger
  • More...

0 comments

:) :-) :)) =)) :( :-( :(( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ :-$ (b) (f) x-) (k) (h) (c) cheer

 
© 2011 Ramanathapuram 2Day
Designed by FTech Cooperated with S.S.Karthik
Posts RSSComments RSS
Back to top