பிஎஸ்எல்வி ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது
நாட்டின் முதல் 'நேவிகேஷன்' செயற்கை கோள் இஸ்ரோ புது சாதனை
சென்னை: ஐ.ஆர்.என்.எஸ்.எஸ் - 1 ஏ செயற்கை கோளுடன் பி.எஸ்.எல்.வி- சி. 22 ராக்கெட் நேற்று நள்ளிரவு விண்ணில் வெற்றிகரமாக பாய்ந்தது. புறப்பட்ட 1225வது விநாடியில் ராக்கெட்டில் இருந்து செயற்கை கோள் தனியாக பிரிந்தது. இதன் மூலம் புதிய அத்தியாயத்தை இஸ்ரோ விஞ்ஞானிகள் தொடங்கி உள்ளனர். ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து நேற்று இரவு 11.41 மணிக்கு பி.எஸ்.எல்.வி-சி.22 ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது. பி.எஸ்.எல்.வி. - சி.22 ராக்கெட்டில் 1,425 கிலோ எடையுள்ள ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்-1 ஏ (நேவிகேஷன் சேடிலைட்) என்ற செயற்கை கோள் பொருத்தப்பட்டிருந்தது. நீர், நிலம், ஆகாயம் ஆகிய மார்க்கங்களில் செல்லும் பயணங்களுக்கு உதவும் வகையிலும் கப்பல் மற்றும் விமானங்களை கட்டுப்பாட்டறையில் இருந்து கண்காணிக்கவும் இந்த செயற்கை கோள் செலுத்தப்பட்டது. இயற்கை பேரிடர் காலங்களில் இந்த செயற்கை கோள் பெரும் உதவியாக இருக்கும்.
இந்த செயற்கை கோளுடன் கூடிய ராக்கெட்டை செலுத்துவதற்கான கவுன்ட் டவுன் கடந்த 29ம் தேதி காலை 7.11 மணிக்கு தொடங்கி, நேற்று இரவு நிறைவு பெற்றது. இதையடுத்து இரவு 11.41க்கு பி.எஸ்.எல்.வி-சி.22 ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டது. கரும்புகையுடன், பலத்த சத்தத்தோடு, தீப்பிழம்பை கக்கியபடி விண்ணில் ராக்கெட் சீறி பாய்ந்தது. அதை கண்ட விஞ்ஞானிகள் மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்தனர். ராக்கெட் புறப்பட்ட 115வது விநாடியில் முதல் பூஸ்டர் இன்ஜின் ராக்கெட்டில் இருந்து பிரிந்தது. 266.7 விநாடியில் 2வது இன்ஜினும், 521.4வது விநாடியில் 3வது இன்ஜினும் பிரிந்தன. இதையடுத்து 1188.4 விநாடியில் 4வது இன்ஜின் கட் ஆப் நிலை அடைந்தது. தொடர்ந்து 1225.4 விநாடியில் ராக்கெட்டில் பொருத்தப்பட்டிருந்த ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்- 1 ஏ செயற்கை கோள் வெற்றிகரமாக பிரிந்தது. உள் வட்ட பாதையில் நிலை நிறுத்தப்பட்டது. இந்த செயற்கை கோள் 10 ஆண்டுகள் செயல்படும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
செயற்கை கோள் பிரிந்ததை கண்ட விஞ்ஞானிகள் ஒருவருக்கொருவர் கட்டித் தழுவி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். நேவிகேஷன் செயற்கை கோளை ஏவியதன் மூலம் புதிய அத்தியாயத்தை இஸ்ரோ படைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
முதல் முறையாக இரவில்..
ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பெரும்பாலும் பகல் நேரங்களில் மட்டுமே ராக்கெட் ஏவப்படும். பி.எஸ்.எல்.வி- சி 22 ராக்கெட் முதல் முறையாக இரவில் செலுத்தப்பட்டது. இரவு நேரத்திலும் சதீஷ் தவான் விண்வெளி மைய ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் வீடுகளின் மொட்டை மாடிகளில் நின்று ராக்கெட் ஏவப்படுவதை பார்த்தனர். அதே போல ராக்கெட் செல்வது குறித்து ஆடிட்டோரியத்தில் அமைக்கப்பட்டிருந்த பெரிய திரையில் விளக்கப்பட்டது. அதில் ஒவ்வொரு இன்ஜினும் பிரிவது, ஒவ்வொரு நிலைகளை ராக்கெட் கடப்பது போன்றவை தெளிவாக காட்டப்பட்டன. இதை அரங்கில் இருந்து பார்த்த விஞ்ஞானிகள் மற்றும் ஊழியர்கள் கை தட்டி ஆரவாரம் செய்தனர். ராக்கெட்டில் இருந்து செயற்கை கோள் பிரிந்த போது ஒட்டுமொத்தமாக எல்லோரும் எழுந்து நின்று கைத்தட்டினர்.













0 comments