11 July 2013

ரமலான் நோன்பு தெரிந்து கொள்ள வேண்டிய சில கடமைகள் 3

 3. நோன்பு வைத்துக் கொண்டு குளித்தல்


நோன்பு நோற்றவர் நோன்பு துறக்கும் முன் குளிக்கக் கூடாது என்று சிலர் எண்ணுகின்றனர். இதற்கு எந்த ஆதாரமும் இல்லை. நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நோன்பு நோற்றிருக்கும் போது வெப்பத்தின் காரணமாகத் தமது தலையில் தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்ததை நான் பார்த்துள்ளேன் என்று நபித்தோழர் ஒருவர் அறிவிக்கிறார்.

(நூல்கள்: அஹ்மத் 22107, அபூதாவூத் 2018)

நோன்பாளி உச்சி வெயில் நேரத்து வறட்சியைக் குறைத்துக் கொள்வதற்காகக் குளிப்பதும், தலையில் தண்ணீர் ஊற்றிக் கொள்வதும் கூடும் என்பதை இதிலிருந்து அறியலாம். சில பகுதிகளில் ஆறு, குளம், ஏரிகளில் குளிக்கும் வழக்கம் உள்ளது. அவ்வாறு குளிக்கும் போது காதுகளையும், மூக்கையும் விரல்களால் அடைத்துக் கொண்டு குளிக்க வேண்டுமென்று நினைக்கின்றனர். காதுகள் வழியாகவோ, மூக்கின் வழியாகவோ தண்ணீர் உள்ளே செல்லக் கூடாது என்பதற்காக இவ்வாறு செய்கின்றனர். இதற்கும் ஆதாரம் இல்லை. காதுகளுக்குள்ளேயும் மூக்குக்கு உள்ளேயும் தண்ணீர் செல்வது நோன்பை முறிக்கும் என்று அல்லாஹ்வோ, அவனது தூதரோ கூறவில்லை.

காதுகளையும், மூக்கையும் அடைக்காமலே தண்ணீரில் மூழ்கிக் குளிக்கலாம். நறுமணம் பயன்படுத்துதல் நோன்பு நோற்றவர்கள் குளிக்கும் போது வாசனை சோப்புகள் போடக் கூடாது என்றும், உடம்பிலோ ஆடையிலோ நறுமணம் பூசிக் கொள்ளக் கூடாது என்றும் பலர் நினைக்கின்றனர். ஹஜ்ஜுக்காக இஹ்ராம் அணிந்தவர்கள் நறுமணம் பூசுவதைத் தடை செய்த நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நோன்பாளிக்கு இத்தகைய தடை எதனையும் பிறப்பிக்கவில்லை. நோன்பாளி நறுமணம் பூசக் கூடாது என்றிருந்தால் அல்லாஹ்வோ அவனது தூதரோ சொல்லாமல் விட்டிருக்க மாட்டார்கள். எனவே சோப், பவுடர், இதர நறுமணப் பொருட்களை நோன்பாளிகள் தாராளமாகப் பயன்படுத்தலாம். இதனால் நோன்புக்கு எந்தப் பாதகமும் ஏற்படாது.

நோன்பு நோற்றவர் பல் துலக்குதல் நோன்பு நோற்றவர் நோன்பு துறந்த பிறகு தான் பல் துலக்க வேண்டும். அதற்கு முன் பல் துலக்கக் கூடாது என்று சில அறிஞர்கள் கருதுகின்றனர். நோன்பாளியின் வாயிலிருந்து வெளிவரும் வாடை அல்லாஹ்வுக்கு கஸ்தூரியை விட விருப்பமானது என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியிருப்பதை இதற்கு ஆதாரமாகக் காட்டுகின்றனர். இதைத் தவிர இவர்களுக்கு வேறு ஆதாரம் இல்லை. இந்த வாதம் ஏற்க முடியாத வாதமாகும். நோன்பாளியின் வாயிலிருந்து வெளியாகும் வாடை வாயில் உற்பத்தியாவதில்லை. காலியான வயிற்றிலிருந்து தான் அந்த வாடை உற்பத்தியாகின்றது. பல் துலக்குவதால் நோன்பாளியின் வாயிலிருந்து வெளிவரும் வாடை நீங்கிவிடப் போவதில்லை. எனவே இவர்களின் கருத்தை நாம் ஏற்க வேண்டியதில்லை.

ஒவ்வொரு உளூவின் போதும் பல் துலக்குவதை வலியுறுத்தி நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளதால் நோன்பாளி பல் துலக்கலாம்.

நோன்பாளி பல் துலக்கலாம் என்பதை ஒப்புக் கொள்ளும் சிலர் கை விரலாலோ, பல் துலக்கும் குச்சியாலோ தான் பல் துலக்க வேண்டும் என்றும் பல்பொடி, பற்பசை பயன்படுத்தக் கூடாது என்றும் கூறுகின்றனர். இவற்றுக்கு சுவை இருக்கிறது என்று காரணம் கூறுகின்றனர். பற்பசைக்குரிய சுவை பற்பசையில் உள்ளது போலவே சாதாரண குச்சியிலும் அதற்குரிய சுவை இருக்கத் தான் செய்கிறது. எனவே சுவையைக் காரணம் காட்டி இதைத் தடுக்க முகாந்திரம் இல்லை.

தண்ணீரில் வாய் கொப்பளிக்கும் போது கூட தண்ணீரின் சுவையை நாக்கு உணரத் தான் செய்யும். இவ்வாறு உணர்வதற்குத் தடையேதும் இல்லை. உண்பதும், பருகுவதும் தான் தடுக்கப்பட்டுள்ளது. பல் துலக்கியவர் பல் துலக்கிவிட்டு விழுங்க மாட்டார். எனவே இதைத் தடை செய்ய சரியான காரணம் இருப்பதாக நமக்குத் தெரியவில்லை. உணவுகளை ருசி பார்த்தல் உணவு சமைக்கும் போது, போதுமான அளவு உப்பு மற்றும் காரம் உள்ளதா என்பதை அறிய நாக்கில் வைத்துப் பார்ப்பது பெண்களின் வழக்கமாக உள்ளது. நோன்பு நோற்றவர் இவ்வாறு ருசி பார்ப்பதில் தவறேதும் இல்லை. உள்ளே விழுங்கி விடாமல் ருசி பார்க்கலாம்.

மேலே நாம் சொன்ன அதே காரணங்களால் இதையும் தடுக்க முடியாது. எச்சிலை விழுங்குதல் நோன்பு நோற்றவர்கள் வாயிலிருந்து ஊறும் எச்சிலை அடிக்கடி உமிழ்ந்து கொண்டே இருப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். நோன்பினால் ஏற்பட்ட வறட்சியை இதன் மூலம் இவர்கள் மேலும் அதிகமாக்கிக் கொள்கின்றனர். எச்சிலை விழுங்கக் கூடாது என்றோ, அடிக்கடி காரி உமிழ்ந்து கொண்டே இருக்க வேண்டும் என்றோ அல்லாஹ்வும், அவனது தூதரும் நமக்குக் கட்டளையிடவில்லை.

Share this post
  • Share to Facebook
  • Share to Twitter
  • Share to Google+
  • Share to Stumble Upon
  • Share to Evernote
  • Share to Blogger
  • Share to Email
  • Share to Yahoo Messenger
  • More...

0 comments

:) :-) :)) =)) :( :-( :(( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ :-$ (b) (f) x-) (k) (h) (c) cheer

 
© 2011 Ramanathapuram 2Day
Designed by FTech Cooperated with S.S.Karthik
Posts RSSComments RSS
Back to top