3 June 2013

குட்டிப் புலி - திரை விமர்சனம்

குட்டிப் புலி - திரை  விமர்சனம்


நடிப்பு: சசிகுமார், லட்சுமி மேனன், சரண்யா, ரமேஷ் பிரபா, முருகதாஸ் 

ஒளிப்பதிவு: மகேஷ் முத்துசாமி 

இசை: ஜிப்ரான் 

மக்கள் தொடர்பு: நிகில் 

தயாரிப்பு: வில்லேத் தியேட்டர்ஸ் முருகானந்தம் 

வெளியீடு: ரெட்ஜெயன்ட் 

எழுத்து - இயக்கம்: முத்தையா 


                                இந்த சமூகமே பெண்ணால் ஆனது... காவல் தெய்வங்களாக இருந்து இந்த சமூகத்தை காத்து நின்றவர்கள் பெண்களே... என்பதை ரத்தம் தெறிக்கச் சொல்லியிருக்கிறார்கள், குட்டிப்புலியில். தன் தெருப் பெண்ணின் மானங்கெடுத்தவனை கூட்டாளிகளுடன் வீடு தேடிப் போய் வெட்டிவிட்டு திரும்பும்போது மாட்டிக் கொள்கிறார் புலி (லால்). உயிரே போனாலும் பரவாயில்லை, எதிரியிடம் மாட்டிக் கொண்டால் தெருப் பெயர் கெட்டுவிடும் எனக் கூறி தன் தலையை வெட்டச் சொல்லி உயிர் விடுகிறார். அவருக்கு மகனாகப் பிறக்கும் குட்டிப்புலி (சசிகுமார்), தன் மேட்டுத் தெருவுக்காக எதையும் செய்பவராகத் திரிகிறார்.
                                              அம்மா (சரண்யா) மீது மட்டும் அப்படியொரு பாசம். மகனுக்கு எப்படியாவது திருமணம் செய்து பார்க்க துடிக்கிறார் சரண்யா. ஆனால் ஊர் முழுக்க பகை வளர்த்து வைத்திருக்கிறோம். யார் எப்போது தீர்த்துக் கட்டுவார்களோ என்ற நிலையில் இருக்கும் தனக்கு திருமணம் வேண்டாம் என்று கூறி, வருகிற பெண்களையெல்லாம் தட்டிக் கழிக்கிறார் சசிகுமார். அப்போதுதான், மேட்டுத்தெருவுக்கு குடிவருகிறார் லட்சுமி மேனன். பெண்களைப் பார்த்தாலே குனிந்த தலை நிமிராமல் போகும் சசிகுமாரை அவருக்குப் பிடித்துப் போகிறது. ஆரம்பத்தில் ஒதுங்கிப் போகும் சசி, பின்னர் கட்டினால் லட்சுமிதான் என்ற முடிவுக்கு வர, அம்மா சரண்யா மகிழ்ச்சியில் ஆத்தாளுக்கு பொங்கலே வைக்கிறார். சசிகுமாரால் ஏற்கெனவே அவமானப்படுத்தப்பட்டு, தீராப் பகையுடன் திரியும் ராஜசிம்மன் சசிகுமாரை தீர்த்துக் கட்ட நேரம் பார்க்கிறார். இதைத் தெரிந்து கொண்ட சரண்யாவும் சசிகுமாரைப் பெறாத இன்னொரு அம்மாவும், திருமணம் செய்து கொண்டு புதுவாழ்க்கை வாழப் போகும் தங்கள் மகனுக்கு விரோதமே இருக்கக் கூடாது என்று முடிவெடுத்து, சசிகுமாரின் விரோதிகளைத் தேடிப் போய் மன்னிப்பு கேட்க ஆரம்பிக்கிறார்கள். ஆனால் அந்த மன்னிப்பை ஏற்க மறுத்து கொலைவாளுடன் நிற்கிறார் ராஜசிம்மன். அந்தப் பகையை எப்படி முடிக்கிறார்கள் என்பது க்ளைமாக்ஸ். 

                                  முறுக்கிய மீசை, மூன்று மாத தாடி, கீழுதட்டை மடித்துக் கடித்து பகை முடிக்கும் பாணி, தூக்கிக் கட்டிய லுங்கி... இதுதான் இந்தப் படத்தில் சசிகுமார். தெற்கத்திய பாசக்கார, கோவக்கார, இளகிய மனசுக்கு சொந்தக்கார இளைஞராக ஈர்க்கிறார். அந்த பஸ் ஸ்டான்ட் சண்டைக் காட்சி செம விறுவிறுப்பு. லட்சுமி மேனனைக் காதலிக்க ஆரம்பித்த பிறகு அவருக்குள்ளும் வெளியிலும் ஏற்படும் மாற்றங்கள் கலகல. ஆனால் சுப்பிரமணியபுரத்திலிருந்து குட்டிப் புலி வரை வசன உச்சரிப்பில், உடல் மொழியில் எந்த மாறுதலும் இல்லை. கவனத்தில் வச்சுக்கங்க சசி! லட்சுமி மேனன் இன்னும் அம்சமாக இருக்கிறார். அவருக்கு கொடுக்கப்பட்ட அதிகபட்ச வேலை நடந்துகொண்டே சசிகுமாரைப் பார்த்து காதல் லுக் விடுவது. தியேட்டரே சொக்கிப் போகிறது அந்த லுக்கில்! பிரதான காமெடியன் இல்லை. அதைச் சரிகட்ட, லட்சுமியைக் காதலிக்கத் துரத்தும் அந்தத் தெரு விடலைகளை வைத்து அவ்வப்போது கிச்சு கிச்சு மூட்டப் பார்க்கிறார்கள்.

                                      சரண்யாவும், அவருடனே எப்போதும் இருக்கும் ரமேஷ் பிரபாவும் தங்கள் பாத்திரங்களில் வாழ்ந்திருக்கிறார்கள். மகன் அடிப்பட்டு மருத்துவமனையில் சாகப் பிழைக்க கிடக்க, பணத்துக்கு அலையும் சரண்யாவைப் பார்க்கும்போது, பல கிராமத்து அம்மாக்கள் கண்முன் வந்து போகிறார்கள்! இடைவேளைக்குப் பின் வரும் பகுதியில் சசிகுமார் - லட்சுமிமேனன் காதல் காட்சிகள், 'படமே இப்போதுதான் ஆரம்பிக்கிறதா' என்ற உணர்வை ஏற்படுத்திவிடுகிறது. மகன் நிம்மதியாக வாழ வேண்டுமே என்பதற்காக அவனது விரோதிகளைத் தேடிப்போய் மன்னிப்புக் கேட்கும் படலம் புதுசுதான்! மகேஷ் முத்துசாமியின் காமிராவே, இந்தப் படத்தின் தன்மை என்ன என்பதைக் காட்டி விடுகிறது. அந்த பஸ்டான்ட் சண்டைக் காட்சியிலும், கோயில் பூஜையின் போது சசிகுமாரை சேஸ் செய்யும் காட்சியிலும் அபாரம்! படத்துக்கு இசை ஜிப்ரான் என டைட்டிலில் போடுகிறார்கள். ஆனால் பெரும்பகுதி காட்சிகளில் இளையராஜாவின் பாடல்களும் இசையும்தான் ஆதிக்கம் செலுத்துகிறது. 

                                            ஒரு டூயட் பாடலுக்கு, ரஜினி நடித்த கழுகு படத்தில் இடம்பெற்ற ராஜாவின் 'பொன்னோவியம் கண்டேனம்மா எங்கெங்கும்...' பாடலை முழுமையாக அப்படியே பயன்படுத்தியிருக்கிறார்கள். பொதுவாக பாடல் காட்சிகளில் தம்முக்கு ஒதுங்கும் கூட்டம் கூட அப்படியே கிறங்கிப் போய் பார்த்து ரசித்தது இந்தப் பாடலை. சசிகுமாரின் உதவியாளராக இருந்த முத்தையாவுக்கு இது முதல் படம். சுந்தரபாண்டியனில் சசிகுமாருக்கு கிடைத்த பாக்ஸ் ஆபீஸ் ரெஸ்பான்ஸைப் பார்த்து அதே பாணியில்  இந்தப் படத்தையும் உருவாக்கி விட்டார் போலிருக்கிறது! படத்தில் குறைகள் இருந்தாலும், அந்த இறுதிக் காட்சி தரும் அதிர்ச்சியில் ஒரு கணம் அவற்றை மறந்து போகிறார்கள் பார்வையாளர்கள். க்ளைமேக்ஸ் கொடூரமா இல்லையா, இப்படியெல்லாம் நடந்ததா என்ற விவாதத்துக்கப்பால், ஒரு தாயின் பாசத்துக்கு முன் எதுவுமே நிற்க முடியாது என்ற உண்மைதான் கண்களைத் தளும்ப வைக்கிறது. 


குட்டிப் புலி ஓட்டத்தில் பழுதில்லை!

Share this post
  • Share to Facebook
  • Share to Twitter
  • Share to Google+
  • Share to Stumble Upon
  • Share to Evernote
  • Share to Blogger
  • Share to Email
  • Share to Yahoo Messenger
  • More...

0 comments

:) :-) :)) =)) :( :-( :(( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ :-$ (b) (f) x-) (k) (h) (c) cheer

 
© 2011 Ramanathapuram 2Day
Designed by FTech Cooperated with S.S.Karthik
Posts RSSComments RSS
Back to top