7 June 2013

தர்மபுரி கலவரத்துக்கு காரணமான காதல் திருமண ஜோடி பிரிந்தது : தாயுடன் செல்ல ஐகோர்ட் அனுமதி

தர்மபுரி கலவரத்துக்கு காரணமான காதல் திருமண ஜோடி பிரிந்தது : 

தாயுடன் செல்ல ஐகோர்ட் அனுமதி


சென்னை : 
                       தர்மபுரியில் கலப்பு திருமணம் செய்து கலவரத்துக்கு காரணமாக இருந்த காதல் ஜோடி பிரிந்தது. தாயுடன் செல்வதற்கு பெண்ணுக்கு உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியது. வழக்கு விசாரணையின்போது நீதிபதிகள் முன் அந்த பெண் கதறி அழுதது உருக்கத்தை ஏற்படுத்தியது. தர்மபுரி மாவட்டம் செல்லன் கொட்டாயை சேர்ந்தவர் திவ்யா. இவரும் நாயக்கன் கொட்டாய் நத்தம் காலனியை சேர்ந்த இளவரசனும் காதலித்துள்ளனர். இருவரும் வேறு வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் கடந்தாண்டு ஆகஸ்டு 8ம் தேதி இளவரசன், திவ்யா இருவரும் ஓடி சென்று திருமணம் செய்து கொண்டனர். பெண்ணின் தரப்பில் கடத்தல் என்று புகார் செய்யப்பட்டது. போலீசார் இருவரையும் சேர்ந்து வாழும்படி கூறி அனுப்பினர். இதையடுத்து திவ்யாவின் தந்தை நாகராஜ் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதைதொடர்ந்து தர்மபுரியில் சாதி கலவரம் மூண்டு வடமாவட்டம் முழுவதும் பற்றி எரிந்தது. 10 மாதங்கள் கடந்த நிலையில் நேற்று முன்தினம் இளவரசன் வீட்டில் இருந்து திவ்யா, மருத்துவமனையில் இருக்கும் உறவினரை பார்த்துவிட்டு வருவதாக கூறி சென்றவர் திரும்பவில்லை. மனைவியை காணவில்லை என்று போலீசில்  இளவரசன் புகார் கொடுத்தார்.

இதற்கிடையில் திவ்யாவின் தாய் தேன்மொழி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த ஆட்கொணர்வு மனுவின்படி கடந்த மார்ச் மாதம் இளவரசனும், திவ்யாவும் நீதிபதிகள் முன் ஆஜராயினர். அப்போது கணவனுடன் செல்வதாக கூறி திவ்யா சென்றார். இந்நிலையில் நேற்று அந்த மனு மீண்டும் விசாரணைக்கு வந்தது.   

நீதிபதிகள் ஜெயசந்திரன், எம்.எம்.சுந்தரேசன் ஆகியோர் விசாரித்தனர். அப்போது நீதிபதிகள் முன் திவ்யா ஆஜரானார். அவரிடம் நீதிபதிகள் ரகசியமாக விசாரித்தனர். இளவரசனும் தனது தாயாருடன் ஆஜராகியிருந்தார். தமிழகத்தையே கலக்கிய இந்த காதல் ஜோடியை பார்க்க நீதிமன்றத்தில் கூட்டம் அலைமோதியது. நீதிபதிகளை பார்த்து திவ்யா கதறி அழுதார். என் தந்தை இறந்துவிட்டார், தாய் தனியாக இருக்கிறார். அதனால் நான் அவருடன் செல்லவே விரும்புகிறேன் என்று அழுதபடியே கூறினார்.

அதன்பின்னர் கோர்ட்டில் நடந்த விவாதம்:  இளவரசன் வக்கீல் சங்கரசுப்பு: கணவனுடன் செல்ல திவ்யாவை அனுமதிக்க வேண்டும். அவர் விருப்பபட்டு தான் இளவரசனை திருமணம் செய்து கொண்டார். திவ்யாவை தாயார் கடத்தி சென்று விட்டார். இளவரசனுடன் பேச திவ்யாவுக்கு அனுமதி தர வேண்டும்.

நீதிபதிகள்: திவ்யாவுடன் பேசினோம். அவரது கருத்தை கேட்டோம். அவர், தனது கணவன் இளவரசனுடன் பேச விரும்பவில்லை என்று கூறி விட்டார். திவ்யாவை எங்கிருந்து கூட்டி வந்தனர் என்று எங்களுக்கு தெரியும். அவரை அவரது தாயார் கடத்தவில்லை. தற்போது மனதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. எனவே தாயாருடன் செல்கிறேன் என்று திவ்யா கூறியுள்ளார். இதை நாங்கள் ஏற்கிறோம்.

வக்கீல் சங்கரசுப்பு: திவ்யாவை கடத்தி விட்டனர் என்று உள்ளூர் போலீசில் புகார் கொடுத்தோம். போலீசாரும் எப்ஐஆர் பதிவு செய்துள்ளனர். இதுபற்றி விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட வேண்டும். நீதிபதிகள்: இதுகுறித்து விசாரிக்க நாங்கள் உத்தரவிட முடியாது. இதற்காக உள்ள உரிய நீதிமன்றத்தில் தான் வழக்கு தாக்கல் செய்து நிவாரணம் பெற முடியும். திவ்யாவை யாரும் கடத்தவில்லை. அவர் தான் தாயாருடன் விருப்பப் படி சென்றுள்ளார்.

திவ்யாவின் தாயார் தேன்மொழி தரப்பு வக்கீல் ரூபட் பர்னபாஸ்: திவ்யா விருப்பப்படி தான் தாயாருடன் சென்றுள்ளார். இதுதான் உண்மை. வக்கீல் சங்கரசுப்பு கூறுவது தவறானது. திவ்யாவை கடத்தியதாக பதிவு செய்த எப்ஐஆரை நீதிமன்றம் ரத்து செய்ய வேண்டும். இளவரசன் குடும்பத்தில் திவ்யா விருப்பம் இல்லாமல் இருந்துள்ளார். இளவரசன் சட்டப்படி மைனர். அவருடன் திருமணம் செய்தது செல்லாது.

சங்கரசுப்பு: திவ்யா கணவர் வீட்டில் இருக்கும்போது அவரது தாயார், இளவரசன் வீட்டிற்கு வந்து மருமகனுடன் பேசியுள்ளார். மகளையும் சந்தித்து பேசியுள்ளார். அதன்பிறகு திவ்யா மனதை மாற்றியுள்ளனர். பர்னபாஸ்: இளவரசனுக்கு வயது 19 தான். அவர் திருமண வயதை அடையவில்லை. திவ்யா திருமணம் சட்டப்படி செல்லாது என்று நீதிமன்றம் அறிவிக்கவேண்டும். இளவரசன் படிப்பு சான்றிதழை பார்த்தால் உண்மை வெளியே வரும். இந்த திருமணத்தினால் தான் திவ்யாவின் தந்தை தற்கொலை செய்து கொண்டார். இதை தொடர்ந்து சாதி கலவரம் ஏற்பட்டது. திருமணம் செல்லாது. எனவே இளவரசனை மருமகனாக ஏற்க முடியாது. தற்போது மனுதாரர் தேன்மொழிக்கும் அவரது மகளுக்கும் போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும்.

நீதிபதிகள்: போலீஸ் பாதுகாப்பு கேட்டு இரு தரப்பினரும் உரிய வகையில் மனு தாக்கல் செய்து உரிய உத்தரவு பெற்றுக்கொள்ளலாம்.  பர்னபாஸ்: போலீசார் ஒரு தலை பட்சமாக நடந்து வருகிறார்கள். அவர்களின் விசாரணை நியாயமாக நடக்கவில்லை. நேர்மையாக நடக்கவில்லை. திவ்யாவின் திருமணம் நடந்ததும் அவரது தந்தை போலீசாரிடம் புகார் கொடுத்தார். இந்த புகாரை போலீசார் சரியாக விசாரிக்கவில்லை. அப்போது உள்ள எஸ்.ஐ. திவ்யாவின் தந்தையை அவமானப்படுத்தியுள்ளார். அவரது முகத்தில் எஸ்.ஐ. காறி துப்பினார். இதனால் அவர் தற்கொலை செய்து கொண்டார்.

வக்கீல் ரஜினி: நான் இளவரசன் தரப்பில் ஆஜராகி வருகிறேன். திவ்யாவின் தந்தை தற்கொலை செய்யவில்லை. அவரை கொலை செய்துள்ளனர். சங்கரசுப்பு: திவ்யா வீடு திரும்பியவுடன் அவரை அரசியல் வாதிகள் சந்திக்க கூடாது என்று உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.

நீதிபதிகள்: இதில் நாங்கள் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது. திவ்யா தாயுடன் செல்ல விரும்புவதால் அவருடன் திவ்யா  செல்ல அனுமதிக்கிறோம். வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை அடுத்த மாதம் 1ம் தேதிக்கு ஒத்தி வைக்கிறோம். இவ்வாறு நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது. அதன்பின், திவ்யா தனது தாயாருடன் புறப்பட்டுச் சென்றார்.
Share this post
  • Share to Facebook
  • Share to Twitter
  • Share to Google+
  • Share to Stumble Upon
  • Share to Evernote
  • Share to Blogger
  • Share to Email
  • Share to Yahoo Messenger
  • More...

0 comments

:) :-) :)) =)) :( :-( :(( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ :-$ (b) (f) x-) (k) (h) (c) cheer

 
© 2011 Ramanathapuram 2Day
Designed by FTech Cooperated with S.S.Karthik
Posts RSSComments RSS
Back to top