ராஜிவ் படுகொலை: விடை தெரியாக் கேள்விகள் - பகுதி 8
(மே 22, 1991, ரகசியம்)
மே 22, 1991, ரகசியம்
கொலைநடந்த மறுநாள் பிரதமர் சந்திரசேகருக்கு, அப்போதையை உளவுத்துறை இயக்குனரும் தற்போதைய மேற்குவங்க மாநிலத்தின் ஆளுநருமான, எம்.கே.நாராயணன் ஒரு கடித்தை எழுதுகின்றார். அதில், கொலைநடந்த பொதுக்கூட்டத்தை பதிவுசெய்த வீடியோகேசட் ஒன்றை உளவுத்துறை கைப்பற்றியுள்ளதாக கூறுகின்றார். அந்த வீடியோகேசட் மூலம் கொலையாளி, ராஜீவ்காந்தியை எவ்வாறு நெருங்கினார் என்பதை ஆராய்ந்துவருவதாகவும் கூறுகின்றார்.
ஆனால், இன்றுவரை அந்த வீடியோகேசட் எங்குள்ளது என்பது யாருக்கும் தெரியாது.ராஜீவ்கொலை குறித்து உலகத்தின் பல்வேறு நாடுகளுக்கும் பயணம் செய்து விசாரணை நடத்திய சி.பி.ஐ, இந்தியாவில் இருக்கும், எம்.கே.நாராயணனிடம், அந்த கேசட் குறித்து இதுவரை விசாரணை நடத்தியதாக தகவல் இல்லை.
கொலைநடந்த இரவில் பதிவுசெய்யப்பட்ட மற்றொரு வீடியோ கேசட்டை வர்மா கமிஷனிடம் சி.பி.ஐ வழங்கியது. பொதுவிசாரணையின்போது அந்த வீடியோ கேசட் அனைவரின் முன்பாகவும் திரையிடப்பட்டது. முக்கியத்துவம் வாய்ந்த அந்த வீடியோவில், சில முக்கியமான காட்சிகள் மங்கலாக்கப்பட்டிருப்பதும், சில காட்சிகள் அழிக்கப்பட்டிருப்பதும் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றது.
எம்.கே.நாராயணன் தன்னிடம் உள்ளதாக கூறிய வீடியோவும், சி.பி.ஐ வர்மா கமிஷனிடம் சமர்ப்பித்த வீடியோவும் ஒன்றுதானா? அவை இரண்டும் ஒன்றே என்றால், அதில் உள்ள முக்கிய காட்சிகளை அழித்தது யார்? அந்த காட்சிகளுக்குள் ஒழிந்துள்ள ரகசியம் என்ன? யாரைக்காப்பாற்ற அவை அழிக்கப்பட்டன????
ஜீன் 12 1992
வர்மா கமிஷன் தனது அறிக்கையை மத்திய அரசிடம் சமர்ப்பிக்கின்றது, அதில், எம்.கே.நாராயணன் உட்பட நான்கு அரசு அதிகாரிகளை விசாரிக்க வேண்டும் என்ற முக்கியமான பரிந்துரையை வழங்குகின்றது. ஆனால் அந்த பரிந்துரை கிடப்பில் போடப்படுகின்றது.
வர்மா கமிஷன் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு நான்கு வருடம் கழிந்தபின்பும் அதன் பரிந்துரைகள் மீது அரசு நடவடிக்கை எடுக்காததால், பல்வேறுதரப்பிலிருந்தும் அரசுக்கு நெருக்கடி முற்றுகின்றது.இறுதியில், உளவுத்துறை தலைவராக பணியாற்றிய, எம்.கே நாராயணன் உட்பட நான்கு முக்கிய அதிகாரிகளிடம், காலம் கடந்து விளக்கம் கேட்கப்படுகின்றது. ஆனால், சட்டத்தில் உள்ள தங்களுக்கு சாதகமான அம்சங்களை பயன்படுத்தி அந்த நாள்வரும் விசாரணையிலிருந்தே தப்புகின்றனர்.
நாட்டின் மிக முக்கியமான தலைவர் படுகொலை செய்யப்பட்டுள்ள நிலையில், தனக்கு தெரிந்த உண்மையை தானே முன்வந்து தெரிவிக்க வேண்டியது, நல்ல அரசு அதிகாரியின் கடமை.பல்வேறு அரசு உயர்பொறுப்புகளை வகித்து வந்துள்ள எம்.கே.நாராயணனோ இன்றுவரை வாய்திறக்க மறுப்பது ஏன் என கேள்வி எழுப்புகின்றார் முன்னாள் சி.பி.ஐ விசாரணை அதிகாரி ரகோத்தமன்.
தற்போதும் கூட எம்.கே.நாராயணன், “மேற்குவங்க மாநிலத்தின் ஆளுநர்” என்ற மிக முக்கிய பொறுப்பை வகித்துவருகின்றார்.உளவுத்துறையின் செயல்பாடுகுறித்து கருத்துதெரிவித்துள்ள நீதிபதி வர்மா, “அரசியல் தலையீட்டின் காரணமாக.இந்திய உளவு நிறுவனங்கள்.மோசமாக உள்ளன” என்று குற்றம்சாட்டுகின்றார். மேலும் “அரசியல் சார்பில்லாமல்…..புதிய அமைப்பாக (உளவுநிறுவனங்கள்) உருவாக்கப்பட வேண்டும் எனவும் அவர் கூறுகின்றார்.
பல்வேறு இயக்கங்களின் கூட்டுத்திட்டம்.அவற்றை இயக்கிய வெளிநாட்டு உளவு நிறுவனங்கள், விசாரிக்கப்படாத கருப்பு பக்கங்கள்,விசாரணைக்கு ஒத்துழைக்காத அரசு அதிகாரிகள்.என ராஜீவ் படுகொலைக்குப் பின்னால், இன்றளவும், மறைந்திருக்கும் மர்மங்கள் ஏராளம்.
ஒருபுறம், உயர்ந்த இடத்தில் இருந்துகொண்டு, உண்மைகள் பல அறிந்திருந்தும் இன்றளவும் வாய்திறக்க மறுக்கின்றனர் பலர்.மறுபுறம் சி.பி.ஐ கட்டுப்பாட்டில் இருக்கும்போது அவர்களே முன்வந்து வழங்கியதாக கூறப்படும் வாக்குமூலத்தின் அடிப்படையில் தூக்குதண்டனையை எதிர்நோக்கி காத்துக்கொண்டிருக்கின்றனர் சிலர்
0 comments