ஸ்பாட் பிக்சிங் சர்ச்சையால் நடுவர் ஆசாத் ராவுப், பில்லி பவுடன்
ஐசிசி சிறப்பு நடுவர் குழுவில் இருந்து நீக்கம்
லண்டன் : பிரபல நடுவர்கள் ஆசாத் ராவுப் (பாகிஸ்தான்), பில்லி பவுடன் (நியூசிலாந்து) இருவரையும் சிறப்பு நடுவர்கள் குழுவில் இருந்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) அதிரடியாக நீக்கியுள்ளது. சிறப்பு நடுவர்கள் குழுவில் இடம்பெற்றுள்ளவர்களின் ஓராண்டு செயல்பாட்டை மதிப்பீடு செய்த ஐசிசி, இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது.
ஸ்பாட் பிக்சிங் சர்ச்சையில் நடுவர் ஆசார் ராவுப் மீதும் குற்றச்சாட்டு எழுந்தது. சூதாட்ட தரகர்களில் இருந்து விலை உயர்ந்த பரிசுப் பொருட்களை அவர் பெற்றுக் கொண்டதாகவும், அவரிடம் மும்பை போலீசார் விசாரணை நடத்தியதாகவும் தகவல் வெளியானதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2003ல் இருந்து ஐசிசி சிறப்பு நடுவராக செயல்பட்டு வந்த பில்லி பவுடன் 75 டெஸ்ட், 181 ஒருநாள், 19 சர்வதேச டி20ல் பணியாற்றி உள்ளார். 2006ல் ஒப்பந்தமான ராவுப் 47 டெஸ்ட், 98 ஒருநாள், 23 டி20ல் நடுவராக இருந்துள்ளார். ராவுப், பில்லிக்கு பதிலாக ரிச்சர்டு இல்லிங்வொர்த், பால் ரீபல் இருவரும் சிறப்பு நடுவர் குழுவில் சேர்க்கப்பட்டுள்ளதாக ஐசிசி தெரிவித்துள்ளது.
2013 , 2014 சீசனுக்கான சிறப்பு நடுவர்கள் குழு விவரம் (ஜூலை 1 முதல் அமல்): அலீம் தார், குமார் தர்மசேனா, ஸ்டீவ் டேவிஸ், மாரைஸ் எராஸ்மஸ், இயான் கவுல்டு, டோனி ஹில், நிகெல் லாங், புரூஸ் ஆக்ஸன்போர்டு, ராட் டக்கர், ரிச்சர்ட் இல்லிங்வொர்த், பால் ரீபல்.
0 comments