கழிவறை வழியாக துளை போட்டு
ஓடும் ரயிலில் பல கோடி சரக்கு நூதன கொள்ளை
சென்னையில் வடமாநிலத்தை சேர்ந்த 8 பேர் பிடிபட்டனர்
சென்னை :
ஓடும் ரயிலில் கழிவறை வழியாக சரக்கு பகுதிக்கு ஓட்டை போட்டு ஏலக்காய் உட்பட விலை உயர்ந்த பொருட்களை திருடிய உபி, பீகார் மாநிலத்தை சேர்ந்த 8 பேரை ரயில்வே பாதுகாப்பு படையினர் கைது செய்தனர். சென்னை சென்ட்ரல் 11வது நடைமேடையில் போடப்பட்டிருந்த ஆட்டோமேடிக் இன்வெர்ட்டர் வெல்டிங் மெஷின் பார்சல்களை தூக்கும் வேலையில் சிலர் நேற்று முன்தினம் ஈடுபட்டிருந்தனர்.
ரயில்வே பாதுகாப்பு படை சப் இன்ஸ்பெக்டர்கள் ஜெகதீசன், சகாயராஜ் அவர்களை பிடித்து விசாரித்தனர். முன்னுக்குப்பின் முரணாக பேசவே, இன்ஸ்பெக்டர்கள் விஜயகுமார், அழகர்சாமியிடம் ஒப்படைத்தனர்.
விசாரணையில் வெளிவந்த தகவல்கள் வருமாறு:
உத்தரபிரதேச மாநிலம் மொகல்சரய் பகுதியை சேர்ந்த அலிஜான் (25), ஷான்கான்(25), சிக்கந்தர்(21), அஷாத் சவுகான்(25), கல்லூ(65), பீகாரை சேர்ந்த அன்வர்அலி(21), கமாலுதீன்(45), சங்கர் (25) ஆகியோர் நாடு முழுவதும் ஓடும் ரயிலில் விலை உயர்ந்த பார்சல்களை திருடியுள்ளனர்.
அதற்காக ரயில் புறப்படுவதற்கு முன் நடைமேடைக்கு வந்து நிற்பார்கள். ரயில்களில் இன்ஜினுக்கு அடுத்த பெட்டியிலும், கடைசி பெட்டியிலும் பார்சல்கள் ஏற்றப்படும். இந்த பெட்டிகளில் கார்டுக்கான அறை, பயணிகளுக்கான பகுதி, பார்சல்களை ஏற்றுவதற்கான அறை என 3 பகுதிகள் இருக்கும். பெரும்பாலும் கடைசியில் இருக்கும் பெட்டியில் உள்ள பயணிகள் பகுதி பெண்களுக்காக ஒதுக்கப்பட்டிருக்கும். ஆனால் வட மாநிலங்களில் அந்த கட்டுப்பாடு கிடையாது.
அதனால் இந்த கும்பல், விலை உயர்ந்த பொருட்கள் ஏற்றப்படும் பெட்டியில் உரிய டிக்கெட்டுடன் பயணிப்பார்கள். அனைவரும் அசந்து தூங்கும் இரவு நேரத்தில் முதலில் ஒருவர் கழிவறைக்குள் போவார். சில நிமிடங்களில் ஒல்லியான உடல்வாகு கொண்ட இன்னொருவரும் கழிவறைக்குள் செல்வார். மற்றவர்கள் அடுத்து செல்ல இருப்பவர்கள் போல வெளியே காத்திருப்பார்கள். கும்பலிடம் ஸ்குரூ டிரைவர், வாகனங்களில் சக்கரங்களை கழற்ற உதவும் ஜாக்கி, கத்தி, சுத்தி என சகலமும் இருக்கும்.
அவற்றின் உதவியுடன் பார்சல் பகுதி அருகே இருக்கும் கழிவறையின் மரத்தடுப்புகளை கழற்றுவார்கள். பின்னர் மேலிருக்கும் பகுதி கீழே விழுந்து விடாமல் இருக்க ஜாக்கி வைத்து முட்டு கொடுப்பார்கள். பின்னர் ஒரு ஆள் நுழைய வழி ஏற்படுத்தி ஒல்லியானவர் பார்சல் பகுதிக்கு சென்று பொருட்களை எடுத்து துளை வழியாக கழிவறையில் இருப்பவரிடம் கொடுப்பார். இப்படியே பைகள் நிரம்பும். பின்னர் சரக்கு பகுதியில் இருக்கும் ஒல்லியான ஆள் பார்சல்களை பழைய மாதிரியே அடுக்கி வைப்பான்.
பின்னர் துளை வழியாக வெளியேறியதும் மீண்டும் மரத்தடுப்புகளை பொருத்தி பழைய நிலைமைக்கு கொண்டு வருவார்கள். யாரும் எளிதில் கண்டுபிடிக்க முடியாது. அதன் பிறகு வழக்கமான பயணிகள் போல் பயணத்தை தொடருவார்கள். தங்கள் ஊர் வந்ததும் பைகளை எடுத்துக் கொண்டு இறங்கிச் சென்று விடுவார்கள். இப்படி ஏலக்காய், துணிமணிகள், எலக்ட்ரானிக் பொருட்கள், உதிரிபாகங்கள், லேப்டாப் என பல கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்களை கொள்ளையடித்துள்ளனர்.
பார்சல் பெட்டி புறப்படும் இடத்தில் பூட்டி சீல் வைக்கப்படும். பின்னர், கடைசியாக ரயில் சேரும் இடத்தில்தான் பெரும்பாலும் பார்சல் பகுதி திறக்கப்படும். அப்படி திறப்பவர்கள் உள்ளே இருக்கும் பொருட்கள் குறைந்திருப்பது குறித்து புகார் எழுப்புவார்கள். இதனால் பொருட்களை அனுப்பியவர்களுக்கும், வாங்குபவர்களுக்கும் தகராறு ஏற்படும். இந்த திருட்டுகளின் காரணமாக கடந்த 2 ஆண்டுகளில் ரயில்வே பல கோடி ரூபாயை தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்கியது. ஆனால் பொருட்கள் காணாமல் போகும் மர்மம் மட்டும் விளங்கவில்லை.
இப்போது சென்ட்ரல் ரயில்வே பாதுகாப்பு படையினர் அந்த திருட்டுக்கும்பலை கைது செய்ததின் மூலம் இந்த திருட்டு தற்காலிகமாக முடிவுக்கு வந்துள்ளது. மேலும் இந்த 8 பேரில் 2 பேர் ஏற்கனவே மதுரையில் பார்சல் திருடியதற்காக கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. கைது செய்யப்பட்ட 8 பேரும் ஜார்ஜ்டவுன் நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். திருட்டுக் கும்பலை கைது செய்த ரயில்வே பாதுகாப்பு படையினரை தெற்கு ரயில்வே தலைமை கண்காணிப்பு ஆணையர் வி.கே.தாகா, கோட்ட முதுநிலை கண்காணிப்பு ஆணையர் எஸ்.ஆர்.காந்தி பாராட்டினர்.
0 comments