நாடாளுமன்ற மேலவை தேர்தலில் இன்று காலை வாக்குப்பதிவு
கருத்துகள்
சென்னை :
நாடாளுமன்ற மேலவை எம்பிக்களை தேர்ந்தெடுப்பதற்கான வாக்குப்பதிவு இன்று காலை 9 மணிக்கு துவங்குகிறது. தமிழகத்தில் காலியாக உள்ள 6 இடங்களுக்கு 7 பேர் போட்டியிடுகிறார்கள். இன்று மாலை 5 மணிக்கு வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் தெரியவரும்.
தமிழகத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மைத்ரேயன், இளவரசன் (அதிமுக), திருச்சி சிவா, கனிமொழி (திமுக), ஞானதேசிகன் (காங்கிரஸ்), டி.ராஜா (இந்திய கம்யூனிஸ்ட்) ஆகிய 6 நாடாளுமன்ற மேலவை எம்பிக்களின் பதவிக்காலம் அடுத்த மாதம் 24ம் தேதியுடன் முடிவடைகிறது. இதையொட்டி காலியாக உள்ள 6 மேலவை எம்பிக்களுக்கான தேர்தல் இன்று நடைபெறுகிறது.
இந்த தேர்தலில் அதிமுக சார்பில் மைத்ரேயன், ரத்தினவேல், லட்சுமணன், அர்ஜுனன் ஆகிய 4 பேரும், திமுக சார்பில் கனிமொழி, தேமுதிக சார்பில் இளங்கோவன், இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் டி.ராஜா ஆகிய 7 பேர் போட்டியிடுகிறார்கள். தமிழகத்தில் உள்ள 234 எம்எல்ஏக்கள் வாக்களித்து 6 பேரை தேர்ந்தெடுக்க உள்ளனர். மேலவை தேர்தலை பாமக புறக்கணிக்கும் என்று அறிவித்துள்ளதால், 231 எம்எல்ஏக்கள் வாக்களிப்பார்கள். அதன்படி ஒரு வேட்பாளர் வெற்றிபெற அதிகபட்சமாக 34 எம்எல்ஏக்கள் ஓட்டு போட்டு தேர்ந்தெடுக்க வேண்டும். தற்போதைய நிலவரப்படி அதிமுக வேட்பாளர் 4 பேரும், இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் டி.ராஜாவும் வெற்றி பெறுவது உறுதியாகியுள்ளது.
6வது வேட்பாளராக திமுகவை சேர்ந்த கனிமொழி வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் தற்போது அதிகரித்துள்ளது. காரணம் திமுகவில் 23 எம்எல்ஏக்கள் உள்ளனர். மேலும், திமுகவுக்கு புதிய தமிழகத்தை சேர்ந்த 2 எம்எல்ஏக்கள், மனிதநேய மக்கள் கட்சியை சேர்ந்த 2 எம்எல்ஏக்களும் வாக்களிப்பதாக கடந்தவாரம் அறிவித்தனர்.
இந்நிலையில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 5 பேரும் திமுக வேட்பாளர் கனிமொழிக்கு ஆதரவாக வாக்களிப்பார்கள் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் நேற்று முன்தினம் இரவு அறிவித்தார். இதையடுத்து திமுகவின் பலம் 32ஆக உயர்ந்துள்ளது.
ஆனால் தேமுதிக வேட்பாளர் இளங்கோவனுக்கு தற்போது 22 எம்எல்ஏக்கள் ஆதரவு மட்டுமே உள்ளது. மீதமுள்ள 7 அதிருப்தி எம்எல்ஏக்களும் அதிமுகவுக்கு ஆதரவாக வாக்களிக்கப்போவதாக அறிவித்துள்ளனர்.
நாடாளுமன்ற மேலவை தேர்தலுக்கான ஏற்பாடுகள் அனைத்தும் முடிந்து தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இன்று காலை 9 மணிக்கு வாக்குப்பதிவு துவங்குகிறது. சென்னை தலைமை செயலக, பிரதான கட்டிடத்தின் தரைதளத்தில் அமைந்துள்ள சட்டமன்ற பேரவை குழுக்கள் கூடும் அறையில் தேர்தல் நடைபெறும். அப்போது முதல்வர் ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி, மு.க.ஸ்டாலின், தேமுதிக தலைவர் விஜயகாந்த் உள்ளிட்ட 231 எம்எல்ஏக்களும் வாக்களிப்பார்கள். மாலை 4 மணிக்கு வாக்குப்பதிவு முடிந்து, வாக்குப்பெட்டிக்கு சீல் வைக்கப்படும்.
பின்னர் இன்று மாலை 5 மணிக்கு வாக்குப்பெட்டியின் சீல் திறக்கப்பட்டு போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் ஏஜென்ட் முன்னிலையில் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இன்று மாலை 6 மணியில் இருந்து இரவு 8 மணிக்குள் முடிவுகள் தெரியவரும். இன்று வாக்குப்பதிவு நடைபெறுவதையொட்டி தலைமை செயலகத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற மேலவை தேர்தல் முழுவதும் வீடியோ மூலம் பதிவு செய்ய தேர்தல் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
0 comments