ஐபிஎல் 6வது சீசன் சாம்பியன் யார்?
சூப்பர் கிங்ஸ் , மும்பை இந்தியன்ஸ் கொல்கத்தாவில் இன்று மோதல்
கொல்கத்தா : ஐபிஎல் டி20 தொடர் 6வது சீசனின் சாம்பியன் யார் என்பதைத் தீர்மானிக்கும் இறுதிப் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் , மும்பை இந்தியன்ஸ் அணிகள் இன்று மோதுகின்றன. கொலகத்தா, ஈடன் கார்டன் மைதானத்தில் நடக்கவுள்ள இப்போட்டி, இரவு 8.00 மணிக்கு தொடங்குகிறது. நடப்பு ஐபிஎல் தொடர் கடந்த மாதம் 3ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. மொத்தம் 9 அணிகள் தங்களுக்குள் தலா 2 முறை லீக் சுற்றில் மோதின. இதன் முடிவில் முதல் 4 இடங்களைப் பிடித்த சென்னை, மும்பை, ராஜஸ்தான், ஐதாராபாத் அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றன.
சென்னை , மும்பை அணிகளிடையே நடந்த குவாலிபயர் 1 ஆட்டத்தில் வென்ற சென்னை அணி பைனலுக்கு முன்னேறியது. அடுத்து நடந்த எலிமினேட்டர் ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி ஐதராபாத்தை வென்று அரை இறுதிக்கு தகுதி பெற்றது. கொல்கத்தாவில் நேற்று முன்தினம் இரவு நடந்த அரை இறுதியில் (குவாலிபயர் 2) ராஜஸ்தான் ராயல்ஸ் , மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட் செய்த ராயல்ஸ் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 165 ரன் குவித்தது. கேப்டன் டிராவிட் அதிகபட்சமாக 43 ரன் எடுத்தார். அடுத்து களமிறங்கிய மும்பை அணி 19.5 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 169 ரன் எடுத்து வென்று பைனலுக்கு முன்னேறியது. ஸ்மித் 62, தாரே 35, கார்த்திக் 22 ரன் விளாசினர்.
இந்த நிலையில், ஐபிஎல் 6வது சீசனின் சாம்பியன் யார் என்பதை தீர்மானிக்கும் இறுதிப் போட்டியில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் ரோகித் ஷர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் இன்று மோதுகிறது. மும்பை அணி முதல் முறையாக சாம்பியன் பட்டம் வெல்லும் முனைப்புடன் களமிறங்கும் நிலையில், சென்னை அணி 5வது முறையாக இறுதிப் போட்டிக்கு (தொடர்ச்சியாக 4 முறை) முன்னேறியுள்ளதுடன் ஏற்கனவே 2 முறை கோப்பை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஸ்பாட் பிக்சிங் சர்ச்சை சிஎஸ்கே அணிக்கு சற்று பின்னடைவை ஏற்படுத்தி இருந்தாலும், வலுவான பேட்டிங் வரிசை தெம்பளிப்பதாக உள்ளது. மும்பை அணியில் சச்சின் காயம் காரணமாக அவதிப்பட்டு வரும் நிலையில், அவருக்கு பதிலாக விளையாடி வரும் தொடக்க வீரர் ஆதித்யா தாரே அமர்க்களமாக விளையாடி வருகிறார்.
ஸ்மித்தின் அதிரடி ஆட்டம் மிரட்டலாக உள்ளது. கார்த்திக், கேப்டன் ரோகித், போலார்டு என்ற மும்பை பேட்டிங் வரிசையும் ஈடுகொடுப்பதால், பைனலில் அனல் பறக்கும் என எதிர்பார்க்கலாம்.சென்னை சூப்பர் கிங்ஸ்: டோனி (கேப்டன்), மைக்கேல் ஹஸி, முரளி விஜய், ரெய்னா, ஜடேஜா, பத்ரிநாத், அல்பி மார்க்கெல், அஷ்வின், வேய்ன் பிராவோ, ஜேசன் ஹோல்டர், கிறிஸ் மோரிஸ், விருத்திமான் சாஹா, மோஹித் ஷர்மா, பாபா அபராஜித், தனஞ்ஜெயா, ஹில்பென்ஹாஸ், கார்த்திகேயன், லாஹ்ப்லின், அங்கித் ராஜ்புத், விஜய் ஷங்கர், அனிருதா ஸ்ரீகாந்த், டுபிளெஸ்சிஸ், இம்தியாஸ் அகமது, ஷதாப் ஜகாதி, குலசேகரா, ரோனித் மோரே.
மும்பை இந்தியன்ஸ்: ரோகித் ஷர்மா (கேப்டன்), வேய்ன் ஸ்மித், ஆதித்யா தாரே, சச்சின், தினேஷ் கார்த்திக் (கீப்பர்), போலார்டு, அம்பாதி ராயுடு, ரிஷி தவான், ஹர்பஜன், மிட்செல் ஜான்சன், லசித் மலிங்கா, தவால் குல்கர்னி, சுஷாந்த் மராதே, பிரக்யான் ஓஜா, அக்ஷர் பட்டேல், ஜலஜ் சக்சேனா, சூரியகுமார் யாதவ், அபு நேச்சிம், அய்டன் பிளிஸார்டு, கோல்ட்டர் நைல், ஜேம்ஸ் பிராங்க்ளின், பிலிப் ஹியூஸ், கிளென் மேக்ஸ்வெல், ஜேக்கப் ஓரம், முனாப் பட்டேல், அமிடோஸ் சிங், யஜ்வேந்திர சாகல், பவான் சுயல், ரிக்கி பான்டிங்.
0 comments