திருமண நிகழ்ச்சியில் மின் தடை காதலனுடன் மணப்பெண் ஓட்டம்
மைசூர் : திருமண விழாவில் திடீரென மின்சாரம் தடைபட்ட சந்தர்ப்பத்தை பயன்படுத்தி காதலனுடன் மணப்பெண் ஓட்டம் பிடித்தார். கர்நாடகாவில் மைசூர் மாவட்டம், உண்சூர் தாலுகா, தட்டிகெரே கிராமத்தில் வசிக்கும் ராமய்யா என்பவரின் மகன் சிவராஜிக்கும், அதே பகுதியை சேர்ந்த அம்பேத்கர் காலனியில் வசிக்கும் மகாதேவா என்பவரின் மகள் அஞ்சலிக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு, நாளை திருமணம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
இரு குடும்பத்தினரும் உறவினர்களுக்கு அழைப்பிதழ் கொடுத்தனர். நெருங்கிய உறவினர்கள் திருமணத்திற்கு வந்திருந்தனர். நேற்று அதிகாலை 5 மணியளவில் திருமணத்திற்கான பந்தக்கால் நடும் விழா, அம்பேத்கர் காலனியில் உள்ள அஞ்சலி வீட்டில் நடந்தது. அப்போது திடீரென மின்சாரம் தடைபட்டது. 10 நிமிடம் கழித்து மின்சாரம் வந்துபோது, மணப்பெண் அஞ்சலி மாயமாகி இருந்தார். இதனால், குடும்பத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பல இடங்களில் தேடியும் அஞ்சலி கிடைக்கவில்லை.
இதுகுறித்து போலீ சில் அஞ்சலியின் தந்தை மகாதேவா புகார் கொடுத்தார். அஞ்சலியை போலீசார் தேடி கொண்டிருந்தபோது, நேற்று பகல் 2 மணியளவில் அம்பேத்கர் காலனியில் வசிக்கும் தாசய்யாவின் மகன் ராமுவை திருமணம் செய்து கொண்டு, கணவருடன் போலீஸ் நிலையத்திற்கு அஞ்சலி வந்தார். இது குறித்து மகாதேவப்பாவுக்கு போலீசார் தகவல் கொடுத்தனர்.
அவருடன் குடும்பத்தினர் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ராமுவை 4 ஆண்டுகளாக காதலித்து வருவதாகவும், அவருடன் மட்டுமே வாழ்வேன் என்று அஞ்சலி உறுதியாக கூறிவிட்டார். இதை ஏற்று கொண்ட மணமகன், ‘விருப்பமில்லாத பெண்ணுடன் வாழ விரும்பவில்லை’ என்று கூறிவிட்டார். வேறு வழியில்லாமல் ராமுவுடன், அஞ்சலியை போலீசார் அனுப்பி வைத்தனர்.
0 comments