கடல் கொந்தளிப்பு - சூறாவளி காற்றால் பாம்பன் பாலத்தில் ரெயில்கள் ஊர்ந்து சென்றன
ராமேசுவரம், மே 25:
ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் மற்றும் தனுஷ்கோடி பகுதிகளில் கடந்த 2 நாட்களாக காற்றின் வேகம் அதிகமாக உள்ளது. சூழன்று அடிக்கும் சூறாவளி காற்றின் காரணமாக கடல் அலைகளும் கடும் கொந்தளிப்பாக காணப்பட்டன. சுமார் 6 அடி உயரத்தில் கடல் அலைகள் எழுந்தன. இதில் சிக்கிதான் நேற்று 2 பேர் தனுஷ்கோடியில் உயிர் இழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சூறாவளி காற்றின் காரணமாக சாலைகளில் வாகனங்களில் செல்வோரும் பாதிக்கப்பட்டனர். சாலையோரம் கிடந்த மணல் கண்களில் விழுந்ததில் இருசக்கர வாகனத்தில் சென்றவர்கள் அவதிக்குள்ளானார்கள்.
நேற்று மாலை காற்றின் வேகம் 50 கிலோ மீட்டர் அளவில் இருந்ததால் ரெயில் சேவையும் பாதிக்கப்பட்டது. ராமேசுவரத்தில் இருந்து சென்னை புறப்பட்ட ரெயில், மதுரை பாசஞ்சர் ரெயில் போன்றவை பாதுகாப்பு காரணமாக பாம்பன் ரெயில் நிலையத்திலேயே நிறுத்தப்பட்டன.
சுமார் ஒரு மணி நேரம் நிறுத்தப்பட்ட ரெயில்கள் காற்றின் வேகம் குறைந்த பின்பு பாம்பன் பாலம் வழியே செல்ல அனுமதிக்கப்பட்டது. இருப்பினும் ரெயில்கள் ஊர்ந்த நிலைலேயே சென்றன. பாலத்தில் ரெயில்கள் சென்றபோது, பயணிகள் ஒருவித அச்ச உணர்வுடனேயே பயணித்தனர்.
சூறைக்காற்று காரணமாக ரெயில்கள் தாமதமாக இயக்கப்படுவது இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது.
0 comments