8 December 2013

ராஜஸ்தானில் பாரதீய ஜனதா ஆட்சியை கைப்பற்றியது வசுந்தரா ராஜே சிந்தியா முதல்–மந்திரி ஆகிறார்

ராஜஸ்தானில் பாரதீய ஜனதா ஆட்சியை கைப்பற்றியது
 வசுந்தரா ராஜே சிந்தியா முதல்–மந்திரி ஆகிறார்




ஜெய்ப்பூர்:

ராஜஸ்தானில் காங்கிரசிடம் இருந்து பாரதீய ஜனதா ஆட்சியை கைப்பற்றியது. வசுந்தரா ராஜே சிந்தியா முதல்–மந்திரி ஆகிறார்.

ஓட்டு எண்ணிக்கை

200 இடங்களை கொண்ட ராஜஸ்தான் சட்டசபையில் 199 தொகுதிகளுக்கு கடந்த 1–ந் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. சுரு தொகுதியில் மட்டும் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் மரணம் அடைந்ததால் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. 199 தொகுதிகளில் 2,086 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். 75 சதவீத ஓட்டுகள் பதிவாகின.

ஓட்டு எண்ணிக்கை நேற்று காலை 8 மணிக்கு தொடங்கியது. ஓட்டு எண்ணிக்கை தொடங்கிய சிறிது நேரத்திலேயே முன்னணி நிலவரம் தெரிய தொடங்கியது. அங்கு தொடக்கத்தில் இருந்தே பாரதீய ஜனதா வேட்பாளர்கள் பெரும்பாலான தொகுதிகளில் முன்னிலை பெற்றனர்.

மூன்றில் இரு பங்கு மெஜாரிட்டி

முடிவில் அக்கட்சி முதன் முதலாக மூன்றில் இரு பங்கு இடங்களை கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது. இதன்மூலம் 5 ஆண்டுகளுக்கு பின்னர் பாரதீய ஜனதா ஆட்சி அமைக்கிறது. வசுந்தரா ராஜே சிந்தியா முதல்–மந்திரி பதவி ஏற்கிறார்.ராஜஸ்தானில் 1988, 2003, 2008, 2013 என ஒவ்வொரு தேர்தலிலும் அசோக் கெலாட்டும், வசுந்தரா ராஜே சிந்தியாவும் மாறி மாறி ஆட்சி அமைத்து வருவது குறிப்பிடத்தக்கது.

வசுந்தரா– அசோக் கெலாட் வெற்றி


ராஜஸ்தான் மாநில பாரதீய ஜனதா தலைவரும், முதல்–மந்திரி வேட்பாளருமான வசுந்தரா ராஜே சிந்தியா ஜாலர்பட்டன் தொகுதியில் அமோக வெற்றி பெற்றிருக்கிறார். இவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி சந்திரவத்தை 60 ஆயிரத்து 896 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.ராஜஸ்தான் முதல்–மந்திரியும், காங்கிரஸ் தலைவருமான அசோக் கெலாட் சர்தார்புரா தொகுதியில் இருந்து மாநில சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் தனக்கு அடுத்தபடியாக வந்த பாரதீய ஜனதா வேட்பாளர் ஷம்புசிங் கேட்டாசரை விட 18 ஆயிரத்து 478 ஓட்டுகள் அதிகம் வாங்கி வெற்றி பெற்றார்.

முக்கிய வெற்றி தோல்விகள்

சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் குலாப் சந்த் கட்டாரியா (பாரதீய ஜனதா) உதய்பூர் தொகுதியில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளரை 24 ஆயிரத்து 600 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி கண்டார்.எதிர்க்கட்சி துணைத்தலைவர் கன்சியாம் திவாரி (பாரதீய ஜனதா) சங்கனர் தொகுதியில் 62 ஆயிரம் வாக்குகளுக்கும் அதிகமான வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். முன்னாள் மத்திய மந்திரி நட்வர் சிங்கின் மகன் ஜகத் சிங், பாரதீய ஜனதா சார்பில் போட்டியிட்டு கமான் தொகுதியில் வெற்றி பெற்றார்.

சபாநாயகர், மந்திரிகள் தோல்வி

சட்டசபை சபாநாயகர் தீபேந்திர சிங் செகாவத், துணை சபாநாயகர் ராம் நாராயண் மீனா, மாநில மந்திரிகள் சாந்தி குமார் தாரிவால், ராஜேந்திர பரீக், ஏ.ஏ.கான் துர்ரு மியான் தோல்வி அடைந்தனர்.அதே நேரத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மகேந்திரசிங் ஜீத் மாளவியா, நாராயண் சிங், விஷ்வேந்திரா சிங், சகுந்தலா ராவத், ராமேஷ்வர் லால் துடி, பிரத்யும் சிங், பன்வர்லால் ஆகியோர் வெற்றி பெற்றிருக்கிறார்கள்.

புதிய அரசு பதவி ஏற்பு

ராஜஸ்தான் முதல்–மந்திரியாக (சட்டசபை பாரதீய ஜனதா தலைவராக) வசுந்தரா ராஜே சிந்தியா தேர்ந்தெடுக்கப்படுகிறார். அவர் தலைமையில் புதிய அரசு 13–ந் தேதி பதவி ஏற்கும் என தகவல்கள் கூறுகின்றன.

இந்த தேர்தலில் காங்கிரஸ் தோல்வியை அடுத்து முதல்–மந்திரி அசோக் கெலாட் ஜெய்ப்பூரில் உள்ள கவர்னர் மாளிகைக்கு  மாலை 7 மணிக்கு சென்றார். கவர்னர் மார்க்கரெட் ஆல்வாவை அவர் சந்தித்து தனது மந்திரிசபையின் ராஜினாமா கடிதத்தை அளித்தார்.இதே போன்று ராஜஸ்தான் சட்டசபை தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று மாநில காங்கிரஸ் தலைவர் சந்திராபன் தன் பதவியை ராஜினாமா செய்துள்ளார். அதற்கான கடிதத்தை கட்சித்தலைவர் சோனியா காந்திக்கு அனுப்பிவைத்தார்.

இறுதி நிலவரம்

மொத்த இடங்கள் – 200

தேர்தல் நடந்தது– 199


பாரதீய ஜனதா – 162

காங்கிரஸ் – 21

பகுஜன் சமாஜ் – 3

தேசியவாத மக்கள் கட்சி – 4

சுயேச்சைகள் – 7

உதிரிக்கட்சிகள் – 2

Share this post
  • Share to Facebook
  • Share to Twitter
  • Share to Google+
  • Share to Stumble Upon
  • Share to Evernote
  • Share to Blogger
  • Share to Email
  • Share to Yahoo Messenger
  • More...

0 comments

:) :-) :)) =)) :( :-( :(( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ :-$ (b) (f) x-) (k) (h) (c) cheer

 
© 2011 Ramanathapuram 2Day
Designed by FTech Cooperated with S.S.Karthik
Posts RSSComments RSS
Back to top