மத்தாப்பூ - திரை விமர்சனம்
கல்லூரி ஒன்றில் படிக்கும் கதாநாயகி காயத்திரி கலாட்டா பேர்வழி. கல்லூரியில் ஒரு பையனுடன் நட்பு ஏற்படுகிறது. ஒருநாள் பிறந்தநாள் பார்ட்டிக்கு போகும்போது அங்கு ஒரு சிக்கலில் மாட்டிக் கொள்கிறார் காயத்திரி, இதனால் போலீஸ் நிலையம் செல்லும் நிலை உண்டாகிறது. வீட்டிற்கு வரும் காயத்திரியை அவளுடைய அம்மா தகாத வார்த்தைகளால் திட்டித் தீர்க்கிறாள்.
இதனால் அம்மா மீது வெறுப்படைந்த காயத்திரி அன்றுமுதல் அம்மா என அழைப்பதை தவிர்க்கிறார். ஒரே வீட்டில் இருந்தாலும் அம்மாவும் இவரும் பேசிக் கொள்வதேயில்லை. தன்னுடைய சுட்டித் தனங்களை எல்லாம் மூட்டைக் கட்டி போட்டுவிட்டு ஏதோ தொலைத்தது போன்று முகத்தை வைத்துக் கொள்கிறார். ஆண்களைப் பார்த்தாலே இவளுக்கு பிடிக்காமல் போய்விடுகிறது.
அநியாயத்துக்கு எதிராக குரல் கொடுப்பவராக ஜெயன் வருகிறார். திருச்சியில் அப்படி ஒரு சம்பவத்தை தட்டிக் கேட்கும் இவரை போலீஸ் பிடித்துப் போகிறது. பிறகு வெளியே வரும் ஜெயன் சென்னையில் இருக்கும் சித்தி சித்தாரா வீட்டுக்கு வந்து சேர்கிறார்.
வந்த இடத்தில் காபி ஷாப்பில் பர்சை தொலைத்து விட்டு நிற்கிறார். அப்போது காணாமல் போன பர்சை எடுத்துக் கொண்டு அவரிடம் வந்து கொடுக்கிறார் காயத்திரி. முதல் சந்திப்பிலேயே காயத்திரி மீது ஜெயனுக்கு காதல் வந்துவிடுகிறது. ஆனால், அதை சொல்வதற்குள் அவள் மறைந்து போகிறாள்.
அவர் யாரென்று தெரியாமல் ஜெயன் தவிக்க, ஒருநாள் இவரது வீட்டு காலிங் பெல் அடிக்கிறது. கதவை திறந்து பார்த்தால் வாசலில் காயத்திரி நிற்கிறாள். அவளிடம் தன் காதலை சொல்ல ஜெயன் பல முயற்சிகள் மேற்கொண்டும் எதுவும் பலனளிக்காமல் போய்விடுகிறது. அவள் ஏன் மௌனமாகவே இருக்கிறாள் என்பதை தன்னுடைய சித்தி மூலம் ஜெயன் தெரிந்து கொள்கிறார்.
அவளைப் பற்றிய முழு விபரம் தெரிந்தபிறகு அவளை சிரிக்க வைக்க பலமுயற்சிகள் எடுக்கிறார் ஜெயன். அவளிடம் நேரடியாக தன் காதலை சொல்கிறார். அதை அவளும் மறுத்து விடுகிறாள். கடைசியில் ஜெயன்-காயத்திரி இணைந்தார்களா? என்பதே மீதிக்கதை.
‘மத்தாப்பூ’ படத்தின் பெயரில் ஒரு புன்னகையை வைத்திருக்கிற இயக்குனர் பட கிளைமாக்ஸ்வரை ஹீரோயின் முகத்தில் சிரிப்பையே காட்டாமல் வைத்திருக்கிறார். அந்த ‘உம்’ முகத்திற்கு ரொம்ப பொருந்துகிறார் காயத்திரி.
புதுமுகம் ஜெயன். புதுமுகம் என சொல்ல முடியாதபடி நக்கல் நையாண்டியிலும், அதிரடி ஆக்ஷனிலும், காதல் தோல்வி சோகத்திலும் விதவிதமான வித்தியாச முகபாவனைகளை ரொம்ப அனாயசமாக காட்டி சினிமாவில் தனக்கென ஒரு இடம் இருப்பதை உறுதி படுத்திக் கொள்கிறார்.
புதுமுகம் ஜெயன். புதுமுகம் என சொல்ல முடியாதபடி நக்கல் நையாண்டியிலும், அதிரடி ஆக்ஷனிலும், காதல் தோல்வி சோகத்திலும் விதவிதமான வித்தியாச முகபாவனைகளை ரொம்ப அனாயசமாக காட்டி சினிமாவில் தனக்கென ஒரு இடம் இருப்பதை உறுதி படுத்திக் கொள்கிறார்.
ஹீரோவின் அம்மா ரேணுகா, சித்தி சித்தாரா, சித்தப்பா இளவரசு, ஹீரோயின் அம்மா கீதா என மூத்த கலைஞர்கள் ஜாலியாக வந்து போகிறார்கள். இப்போது வரும் வழக்கமான கதையில் இருந்து கொஞ்சம் வருடங்கள் பின்னால் போய் பார்த்தால் இந்த கதை புதுசாக தெரியும். இரண்டாம் பாதியில் படத்தை இழு இழுவென இழுத்தடித்திருக்கிறார். பின்பாதியில் கொஞ்சம் இயக்குனர் நாகராஜ் கத்திரி போட்டிருந்தால் ரசிக்க வைத்திருக்கும். பாடல்களில் பழைய சாயல் இருக்கிறது. பின்னணி இசையில் சபேஷ் முரளியின் அதிரடிகள் பல இடங்களில் சபாஷ் போட வைக்கிறது.
மொத்தத்தில் ‘மத்தாப்பூ’ பழைய பட்டாசு.
0 comments