ஐபிஎல் சூதாட்டம்: உண்மையை ஒப்புக் கொண்டாரா குருநாத்?

கிரிக்கெட் சூதாட்டம் தொடர்பாக, மும்பை காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் கவுரவ உறுப்பினர் குருநாத் மெய்யப்பன், நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை வரும் 29 ந் தேதி வரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிபதிகள் அனுமதி வழங்கினர்.
முன்னதாக, மெய்யப்பனிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், இந்தி நடிகர் வின்டு தாராசிங்குடன் இணைந்து கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டதை அவர் ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது.
எனினும், கிரிக்கெட் சூதாட்டம் தொடர்பான பெரும்பாலான கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் மெய்யப்பன் மவுனம் காத்ததாக கூறப்படுகிறது. விசாரணைக்கு போதிய ஒத்துழைப்பு வழங்காததால், மெய்யப்பனையும், அவர் சிக்குவதற்கு காரணமாக இருந்த, இந்தி நடிகர் வின்டு தாராசிங்கையும் ஒரே இடத்தில் வைத்து விசாரிக்க காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர்.
விசாரணைக்கு ஒத்துழைக்க மெய்யப்பன் மறுப்பதால், விசாரணை முறையில் மாற்றம் செய்யவும் காவல்துறையினர் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனிடையே, குருநாத் மெய்யப்பன் காவல்துறையிடம் சிக்கிய விவகாரம், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளர் சீனிவாசனின் பதவிக்கு நெருக்கடியை உருவாக்கியுள்ளது. அவர் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வரும் நிலையில், அதனை நிராகரித்துள்ளார் சீனிவாசன்.
இதுதவிர, கொல்கத்தாவில் இன்றைய இறுதிப் போட்டியில் வெற்றிபெறும் அணிக்கு தமது கையால் வெற்றிக்கோப்பை வழங்க வேண்டும் என்பதிலும் ஸ்ரீநிவாசன் பிடிவாதமாக இருப்பதாக கூறப்படுகிறது.
ஆனால், கிரிக்கெட் வாரிய நிர்வாகக் குழுவில் இடம்பெற்றுள்ள மூன்றில் இரு பங்கு உறுப்பினர்கள் ஸ்ரீநிவாசனை நீக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளனர். நம்பகத்தன்மையை இழந்துவிட்ட ஸ்ரீநிவாசன், உடனடியாக பதவி விலக வேண்டும் என அரசியல் மட்டத்தில் இருந்தும் அவரை நோக்கி, கண்டனக் கணைகள் பறந்தவண்ணம் உள்ளன.
வலுக்கும் எதிர்ப்பு காரணமாக, இன்றைய இறுதிப் போட்டி முடிந்த பின்னர், பிசிசிஐ தலைவர் பதவியில் இருந்து ஸ்ரீநிவாசனை நீக்குவது குறித்து முடிவு எடுக்கப்படலாம் என தெரிகிறது. ஒருவேளை ஸ்ரீநிவாசன் நீக்கப்பட்டால், அவருக்குப் பதிலாக பிசிசிஐ முன்னாள் தலைவர் சஷாங்க் மனோகர் இடைக்கால தலைவராக பொறுப்பேற்பார் என்றும் கூறப்படுகிறது.
ஐபிஎல் சூதாட்டம் காரணமாக, கடந்த சில தினங்களாக தொடரும் திடீர் திருப்பங்கள், அடுத்தடுத்த தினங்களிலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
0 comments