இந்திய அரசு கேட்டுக்கொண்டதற்காக இலங்கையில் இருந்து இந்தியா வந்த தமிழர்கள் சிலர், இன்று வாழ வழியின்றி தவித்து நிற்கின்றனர். வாழ்வாதாரத்திற்காக வழங்கப்பட்ட நிலத்தையும் தற்போது சிலர் பறித்துக் கொண்டதாக எழுந்த புகாரை அடுத்து என்ன செய்யப் போகிறோம் என்ற கேள்விகளோடு வாழ்கின்றனர் இவர்கள்.
கேள்விக்குறியாகும் வாழ்க்கை:
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் திராங்கிபிடியில் அரசுக்கு சொந்தமான 180 ஏக்கர் நிலத்தில் கடந்த 1973ஆம் ஆண்டு அரசு விதைப்பண்ணை ஆரம்பிக்கப்பட்டது. இந்த பண்ணையில் இலங்கையிலிருந்து திரும்பிய இந்திய வம்சாவளித் தமிழர்களின் 50 குடும்பங்களும், மதகம், ஏம்பல் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட மக்களும் பணியாற்றி வந்துள்ளனர். ஆனால் 1979ஆம் ஆண்டு இந்த விதைப்பண்ணை பல்வேறு காரணங்களால் மூடப்பட்டது. இதன் பிறகு இங்கு பணியாற்றிய இந்திய வம்சாவளித் தமிழர்களின் வாழ்க்கை கேள்விக்குறியானது.
நிலத்தை ஆக்கிரமிக்கும் கிராமத்தினர்:
50 குடும்பங்களாக இங்கு வந்து பணியாற்றிய இவர்களில் தற்போது, 13 குடும்பங்கள் மட்டுமே விதைப்பண்ணை அருகில் வசித்து வருகின்றனர். மற்றவர்கள் மாற்றுத் தொழில் தேடி வேறு இடங்களுக்கு சென்றுவிட்டனர். விதைப்பண்ணை மூடிய பிறகு, பண்ணை இயங்கிய நிலத்தில் குடும்பத்திற்கு 2 ஏக்கர் நிலங்களை பயன்படுத்தி கொள்ளுமாறு அரசு தரப்பில் கூறப்பட்டதாகத் தெரிகிறது. இந்த 2 ஏக்கர் நிலத்தில் விவசாய பணிகளை மேற்கொள்ள இவர்கள் முயற்சி செய்த போது உள்ளூர் மக்கள் அந்த நிலங்களை ஆகரமிப்பு செய்து அவர்களை தொழில் செய்ய அனுமதிக்கவில்லை என்கின்றனர் இவர்கள்.
மறுக்கப்படும் அடிப்படை வசதிகள்:
இந்திய அரசின் வேண்டுகோளின்படி இலங்கையில் இருந்து திரும்பிய இந்திய வம்சாவளித் தமிழர்களுக்கு , இந்தியக் குடிமக்களுக்கான அனைத்து உரிமைகளும் வழங்கப்பட்டிருக்கிறது. என்றாலும் தங்களுக்கான அடிப்படை வசதிகள் அனைத்தும் மறுக்கப்படுவதாக கூறுகின்றனர் இவர்கள்.
இந்திய - இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்தியா திரும்பிய தங்களுக்கு எதிர்காலமே கேள்விக்குறியாகி உள்ளதாகக் கூறும் இவர்கள், தங்களது குழந்தைகளின் எதிர்காலத்தை பாதுகாக்க அரசு ஆவண செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்கின்றனர்.
0 comments