இசையமைப்பாளர் ஜீ.வி.பிரகாஷ்-சைந்தவி திருமணம்
சென்னை:
இசையமைப்பாளர் ஜீ.வி.பிரகாஷ்-பின்னணி பாடகி சைந்தவி திருமணம் இன்று சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள மேயர் ராமநாதன் செட்டியார் சென்டரில் நடந்தது. சரியாக காலை 10.23 மணிக்கு மணமகன் ஜீ.வி.பிரகாஷ், மணமகள் சைந்தவிக்கு மேள-தாளங்கள் முழங்க முறைப்படி தாலி கட்டினார். மணவிழாவுக்கு வந்திருந்த அனைவரும் மணமக்களுக்கு அட்சதை தூவி ஆசி வழங்கினர்.
இத்திருமண விழாவில் இயக்குனர்கள் பாலுமகேந்திரா, மணிரத்னம், பாலா, விஜய், காயத்ரி, கதிர் மற்றும் நடிகர்கள் சூர்யா, சாந்தனு, நடிகைகள் சுஹாசினி, பூர்ணிமா பாக்கியராஜ், பழம்பெரும் பின்னணி பாடகி எல்.ஆர்.ஈஸ்வரி, இசையமைப்பாளர் தேவா, தயாரிப்பாளர்கள் தனஞ்செயன், எடிட்டர் மோகன், பாடலாசிரியர் சினேகன், நடிகர் கிரேசி மோகன், நடிகர் விஜய்-யின் தாயார் ஷோபா சந்திரசேகர், மனைவி சங்கீதா உள்ளிட்ட திரைப்பட கலைஞர்கள் மற்றும் பல்வேறு துறையினரும் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
இன்று மாலை 6.30 மணிக்கு திருமணம் நடந்த மேயர் ராமநாதன் செட்டியார் சென்டரிலேயே திருமண வரவேற்பும் நடக்கிறது. இதிலும் திரையுலகம் மற்றும் பல்வேறு துறையைச் சேர்ந்தவர்களும் கலந்துகொள்கிறார்கள்.
ஜீ.வி.பிரகாஷ் ‘மதராச பட்டினம்’, ‘தாண்டவம்’, ‘குசேலன்’, ‘பரதேசி’, ‘தலைவா’ உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்துள்ளார். சைந்தவி ‘அந்நியன்’ படத்தில் இடம்பெற்ற 'அண்டங்காக்கா கொண்டைக்காரி' என்ற பாடல் மூலம் திரைஇசையில் பின்னணி பாடகியாக அறிமுகமானார். தொடர்ந்து பல பாடல்கள் பாடி திரை இசையின் முன்னணி பாடகியாகவும் வலம் வருகிறார். ஜீ.வி.பிரகாஷும், சைந்தவியும் இணைந்து பாடிய பல பாடல்கள் இசை ரசிகர்களிடையே பலத்த வரவேற்பை பெற்றவை.
இன்று மணவிழாவில் ஒன்று சேரும் ஜீ.வி.பிரகாஷ்-சைந்தவி தம்பதியர் எல்லா வளங்களும் நிரம்ப பெற்று வாழ்க்கையில் மேலும் பல வெற்றிகள் பெற Ramanathapuram2Day இணையதளம் மனதார வாழ்த்துகிறது. வாழ்க மணமக்கள்.
0 comments