பிரதமரை மாற்றும் எண்ணம் இல்லை: காங்கிரஸ் திட்டவட்டம்
புதுடெல்லி, மே 18:
நிலக்கரி சுரங்க ஊழல், ரெயில்வே முறைகேடு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளால் காங்கிரஸ் கட்சிக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. பிரதமர் மன்மோகன் சிங் பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. இந்த சூழ்நிலையில் பிரதமர் மன்மோகன் சிங்கை முன்னிறுத்தி மக்களவைத் தேர்தலை சந்தித்தால் கட்சிக்கு பின்னடைவு ஏற்படும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சிலர் கருதுகின்றனர்.
எனவே, குளிர்கால கூட்டத்தொடருக்கு முன்னதாக பிரதமர் மாற்றப்படுவார் என்றும், முன்கூட்டியே மக்களவைத் தேர்தல் நடக்க வாய்ப்பு உள்ளது என்றும் தகவல்கள் வெளியாகின.
இதுபற்றி காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பி.சி.சாக்கோவிடம் நிருபர்கள் கேட்டனர். இதற்கு பதில் அளித்த சாக்கோ, “பிரதமரை மாற்றுவது பற்றி யாரும் நினைக்க வேண்டாம். திறமையான பிரதமரை நாம் பெற்றிருக்கிறோம். தலைமை பொறுப்பு பற்றிய கேள்வி எங்களிடம் இல்லை. அரசு சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. எனவே, முன்கூட்டியே தேர்தல் நடத்தும் திட்டம் இல்லை” என்றார்.
வரும் தேர்தலில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி வெற்றி பெற்றால், மீண்டும் மன்மோகன் சிங் பிரதமராகும் வாய்ப்பு உள்ளதா? என்று கேட்டபோது, ‘தேர்தலுக்கு இன்னும் நீண்ட காலம் இருக்கிறது’ என்று கூறினார்.
“உணவு பாதுகாப்பு மசோதா மற்றும், நிலம் கையகப்படுத்துதல் மசோதாவை நிறைவேற்றுவது தொடர்பாக காங்கிரஸ் கட்சி விவாதித்து வருகிறது. பாராளுமன்ற சிறப்பு கூட்டத்தொடருக்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. இது பற்றி ஒருமனதாக எடுக்க வேண்டும். அவர்கள் தயார் என்றால், விவாதத்திற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம்.” என்றும் சாக்கோ கூறினார்.
0 comments