இத்தாலி ஓபன் டென்னிஸ்: செரீனா இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்
ரோம், மே 18:
இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியில் அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ், இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். உலகின் நம்பர்-1 வீராங்கனையான செரீனா, இன்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் அரையிறுதி ஆட்டத்தில், ருமேனியாவின் சிமோனா ஹாலெப்பை 6-3, 6-0 என்ற நேர்செட்களில் வென்றார். அத்துடன் தொடர்ந்து 23 ஆட்டங்களில் வென்று, புதிய வாழ்நாள் சாதனையை எட்டியுள்ளார்.
நாளை நடைபெற உள்ள இறுதிப் போட்டியில் செரீனா வில்லியம்ஸ், 3-ம் தரநிலை வீராங்கனை விக்டோரியா அசரென்கா அல்லது 7-ம் தரநிலை வீராங்கனை சாரா எரானியுடன் மோதுவார்.
மியாமி, சார்லஸ்டன், தென் கரோலினா மற்றும் மேட்ரிட் நகரில் நடைபெற்ற போட்டிகளில் செரீனா தொடர்ச்சியாக பட்டம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆண்டில் தொடர்ச்சியாக 4-வது சாம்பியன் பட்டத்தை வெல்ல, முனைப்புடன் ஆடிவரும் செரீனா, அடுத்த வாரம் தொடங்க உள்ள பிரெஞ்சு ஓபனிலும் முன்னணி வீராங்கனைகளுக்கு கடும் சவாலாக விளங்குவார்.
0 comments