உடலில் ஆசிட், பெட்ரோல் ஏற்றி சித்ரவதை: கைதி சாவு - 4 போலீசார் சஸ்பெண்ட்
லக்னோ, மே 18:
விசாரணைக்காக போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்ற கைதியின் உடலில் ஊசியின் மூலம் ஆசிட் மற்றும் பெட்ரோலை ஏற்றி போலீசார் கொடுமைப்படுத்தி கொன்ற சம்பவம் உத்தரபிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம், எட்டா மாவட்டத்தில் கடந்த மாதம் நடந்த கொலை தொடர்பாக பல்பீர் என்பவரை போலீசார் விசாரணைக்காக அழைத்து சென்றனர்.
எட்டா சிறையில் விசாரணை கைதியாக அடைக்கப்பட்டிருந்த அவரது உடல்நிலை மோசமடைந்ததால் எட்டா மாவட்ட ஆஸ்பத்திரியில் அவர் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் அவர் உடல்நலம் தேறாததால், ஆக்ரா ஆஸ்பத்திரிக்கும், பின்னர் லக்னோவில் உள்ள மன்னர் ஜார்ஜ் ஆஸ்பத்திரியிலும் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
எனினும், சிகிச்சை பலனின்றி அவர் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.
மரணப்படுக்கையில் மாஜிஸ்திரேட்டிடம் அவர் அளித்த வாக்குமூலம் வீடியோவில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தாங்கள் எதிர்பார்த்தபடி வாக்குமூலம் அளிக்கவில்லை என்ற ஆத்திரத்தில் ஊசி மூலம் தனது உடலில் ஆசிட் மற்றும் பெட்ரோல் ஆகியவற்றை செலுத்தி போலீசார் விசாரணையின் போது கொடுமைப்படுத்தியதால் தனது உடல்நலம் பாதிக்கப்பட்டது என மாஜிஸ்திரேட்டிடம் அளித்த வாக்குமூலத்தில் பல்பீர் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, எட்டா போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் 3 போலீசார் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
0 comments