நாயகியின் வாழ்க்கை
ஒரு கவர்ச்சி நடிகையின் சோகமான வாழ்க்கையை சொல்லும் படம். மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த ஸ்மிதா (சனா கான்) வீட்டு வேலை செய்து வாழ்க்கிறார். அவரின் அழகு நடிகையாக்குகிறது. அந்த அழகே ஆபத்தாகவும் இருக்கிறது. நடிகையாக வளர்ந்த பிறகு அவரது வாழ்க்கைக்குள் நுழைகிறார் தொழிலதிபர் சுரேஷ் கிருஷ்ணா. அவருடன் தாலி கட்டாமல் குடும்பம் நடத்துகிறார் ஸ்மிதா. சுரேஷ் கிருஷ்ணாவின் மகன் சுபினுக்கும் ஸ்மிதா மீது காதல். அவளோடுதான் வாழ்வேன் என்கிறார். தந்தைக்கும் மகனுக்கும் நடுவில் தவிக்கும் ஸ்மிதா எடுக்கும் முடிவு என்ன? அவர் என்ன ஆகிறார் என்பது கிளைமாக்ஸ்.
சனா கான் ஸ்மிதாவாக நடித்திருக்கிறார் என்று சொல்வது குறைவான வாக்கியம். வாழ்ந்திருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும். வேலைக்காரியாக இருக்கும்போது கன்னத்தில் அறைந்து வெளியேற்றிய நடிகையை, ஒரு சினிமா காட்சியில் திருப்பி அறைந்து படும் சந்தோஷம், அன்புக்காக ஏங்கி முன்பின் தெரியாத நபரிடம் தன் வாழ்க்கையை ஒப்படைக்கும் அப்பாவித்தனம், முதன் முதலாக மது பழகும் குழந்தைத்தனம், தந்தையுடன் வாழும்போதே அவரது மகனும் தன்னை விரும்புவது கண்டு துடிப்பது என்று சனா கானின் நடிப்பில் அப்படியொரு முதிர்ச்சி.
ஸ்மிதாவின் தாடிக்கார நண்பராக வரும் சுரேஷ் கிருஷ்ணாவின் நடிப்பும் பிரமாதம். கொஞ்சமும் அலட்டிக் கொள்ளாமல் அதிகம் பேசாமல் அமைதியாக ஸ்மிதாவின் வாழ்க்கைக்குள் நுழைந்து அன்பாலேயே அவரை அடைந்து ஆக்கிரமிப்பது வரை கச்சிதமான நடிப்பை தந்திருக்கிறார். அவரது மகனான வரும் சுபினும் தன் பங்கை சிறப்பாக செய்திருக்கிறார். ஒளிப்பதிவும், இசையும் படத்துக்கு வண்ணம் சேர்த்திருக்கிறது. ஸ்மிதாவின் கதையை நேரடியாகச் சொல்லாமல் அதை படமாக எடுக்க விரும்பும் தயாரிப்பாளருக்கு, ஒரு இயக்குனர் கதை சொல்வது போன்று திரைக்கதை அமைத்திருக்கும் பாணி அற்புதம்.
நாயகியின் பெயர் ஸ்மிதா, அவரது தாடிக்கார நண்பர், அவர் சினிமாவில் அறிமுகமான விதம் இப்படி சில விஷயங்கள் சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கையை நினைவூட்டுகிறதே தவிர, இது முழுமையான சில்க் ஸ்மிதாவின் கதையல்ல. படம் முழுக்க மலையாள முகங்கள் நிறைந்திருப்பதால் படத்தில் நேட்டிவிட்டி மிஸ்சிங். என்றாலும் எளிய வசனங்களால் அதை சமாளிக்கிறார்கள்.
0 comments