பைனலில் நுழைந்தது மும்பை
கொல்கத்தா: மும்பை இந்தியன்ஸ் அணியுடனான அரை இறுதியில் (குவாலிபயர் 2) ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அணி பைனலில் நுழைந்தது. ஐபிஎல் டி20 தொடர் 6வது சீசனின் பிளே ஆப் சுற்றில், சென்னை சூப்பர் கிங்ஸ் , மும்பை இந்தியன்ஸ் அணிகளிடையே நடந்த குவாலிபயர் 1 ஆட்டத்தில் அபாரமாக வென்ற சென்னை அணி நேரடியாக பைனலுக்கு முன்னேறியது.
அடுத்து ராஜஸ்தான் , ஐதராபாத் அணிகள் மோதிய எலிமினேட்டர் ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்று அரை இறுதிக்கு (குவாலிபயர் 2) தகுதி பெற்றது. இந்த நிலையில், மும்பை இந்தியன்ஸ் , ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதிய குவாலிபயர் 2 ஆட்டம், கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று இரவு நடந்தது. மாலையில் திடீரென மழை கொட்டியதால் மைதானம் ஈரமானதை அடுத்து, போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. சுமார் ஒரு மணி நேரம் தாமதமாகத் தொடங்கிய இப்போட்டியில், டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பேட் செய்தது. அந்த அணியில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை. மும்பை இந்தியன்ஸ் அணியில் முனாப் பட்டேலுக்கு பதிலாக ரிஷி தவான் சேர்க்கப்பட்டார். காயம் காரணமாக சச்சின் இந்த போட்டியிலும் விளையாடவில்லை. வேகப் பந்துவீச்சாளர் தவால் குல்கர்னியும் காயம் காரணமாக விளையாடவில்லை. ராஜஸ்தான் தொடக்க வீரர்களாக கேப்டன் ராகுல் டிராவிட், அஜிங்க்யா ரகானே களமிறங்கினர். பொறுப்புடன் விளையாடிய இந்த ஜோடி சிறப்பான தொடக்கத்தை கொடுத்தது. இவர்களைப் பிரிக்க முடியாமல் மும்பை இந்தியன்ஸ் பந்துவீச்சாளர்கள் திணறினர். இருவரும் முதல் விக்கெட்டுக்கு 44 ரன் சேர்த்தனர். 21 ரன் எடுத்திருந்த நிலையில், ஹர்பஜன் பந்தில் ரகானே போல்டானார். ஆனால், வாட்சன் 6 ரன்னிலும், சாம்சன் ரன் எதுவும் எடுக்காமலும் அவுட் ஆனார்கள். நன்றாக விளையாடிக் கொண்டிருந்த டிராவிட் 43 ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தார். பின்வரிசை வீரர்களில் யாக்னிக் சிறப்பாக விளையாடி 31 ரன் எடுத்தார். இறுதியில் இந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 165 ரன் எடுத்தது. இதைத் தொடர்ந்து 166 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் அணி களம் இறங்கியது. தொடக்க வீரர்கள் ஸ்மித், தாரே சிறப்பாக விளையாடி முதல் விக்கெட்டுக்கு 70 ரன்னை சேர்த்தனர். தாரே 35 ரன்னில் வெளியேற, அடுத்து களம் இறங்கிய கார்த்திக் 27 ரன் சேர்த்து வெளியேறினார். சர்மா வெறும் 2 ரன்னில் திரிவேதி பந்தில் போல்டானார். ஸ்மித் 62 ரன் சேர்த்திருந்த நிலையில், பின்னியின் பந்தை, சாம்சன்னிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். பின்னால் வந்த வீரர்கள் பந்துகளை வீணடிக்காமல் சில ரன்களை அடித்ததும் அணிக்கு உதவியாக இருந்தது. இறுதியில் 19.5 ஓவரிலேயே மும்பை அணி 6 விக்கெட் இழப்புக்கு 169 ரன் எடுத்து வெற்றி பெற்றது. நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன், மும்பை இந்தியன்ஸ் அணி மோத உள்ளது.
0 comments