ஈழப் போராட்டத்தைச் சொல்லும் 'செங்கடல்' படம் தமிழகத்தில் வெளியாக முடியாத நிலையில் அமெரிக்கா முழுவதும் இன்று ரிலீஸ்
டல்லாஸ் (யு.எஸ்): லீனா மணிமேகலை இயக்கிய செங்கடல் திரைப்படம் அமெரிக்கா முழுவதும் தமிழர் அமைப்புகளால் திரையிடப்படுகிறது.
தமிழகத்தில் உருவான செங்கடல் திரைப்படம், தணிக்கைக் குழுவின் தடையை தாண்டி உச்ச நீதிமன்றத்தில் அனுமதி பெற்று வெளிவந்தது. ஆனாலும் தமிழகத்தில் திரையிடப்படவில்லை. செய்தியாளர் காட்சி மட்டுமே திரையிடப்பட்டது.
இப்போது உலகம் முழுவதும் வெவ்வேறு அமைப்புக்களின் உதவியுடன் செங்கடல் திரையிடப்பட்டு வருகிறது.
ஜப்பான் டூ அமெரிக்கா
ஜப்பானிய, கொரிய, சீன, ஃப்ரெஞ்ச் உட்பட 6 மொழிகளில் சப் டைட்டில்களுடன் ஆஃப்ரிக்கா, ஐரோப்பா, ஆசிய நாடுகளில் பல திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டது இந்தப் படம்.
இதுவரையிலும் 30 நாடுகளில் பல்வேறு நகரங்களில், பல்வேறு மொழியை சார்ந்தவர்கள் பார்த்துள்ளனர். மார்ச மாதம் முதல் சுவிட்சர்லாந்து, சுவீடன், டென்மார்க் மற்றும் பிரான்ஸ் உட்பட பல ஐரோப்பிய நகரங்களில் இந்தப் படத்தை திரையிட்டுள்ளனர்.
தற்போது வட அமெரிக்காவில் பல ஊர்களில் செங்கடல் திரையிடப்பட்டு வருகிறது. இன்று சனிக்கிழமை டல்லாஸில, ப்ளேனோ பார்கர் ரோட்டில் உள்ள Tom Muehlenbeck சென்டரில் பிற்பகல் 3 மணிக்கு திரையிடப்பட உள்ளது. இயக்குனர் லீனா மணிமேகலை நேரில் வந்து பார்வையாளர்களுடன் கலந்துரையாடுகிறார்.
டல்லாஸில் இலவச டிக்கெட்டுகள்
டல்லாஸில் AHCRL அமைப்பு சார்பில் வழங்கப்படும் இலவச டிக்கெட்டுகளுக்கு 972-821-1474 / 9725109214 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம். AHCRL (Association for Human Rights and Civil Liberties) அமைப்பு, உலகம் முழுவதும் நடைபெறும் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக குரல் கொடுத்து வரும் ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனமாகும். டல்லாஸ் கிளை சார்பில் செங்கடல் திரைப்படம் வெளியிடப்படுகிறது.
ஞாயிற்றுக்கிழமை ஹூஸ்டனிலும், தொடர்ந்து அடுத்தடுத்த வாரங்களில் சின்சினாட்டி, டெட்ராய்ட், சான் ஃபிரான்சிஸ்கோ, சான் ஓசே, டொரோண்டோ நகரங்களில் செங்கடல் வெளியாகிறது. அனைத்து ஊர்களிலும் லீனா மணிமேகலை பார்வையாளர்களைச் சந்திக்கிறார்.
பல்கலைக்கழகங்களில்...
முன்னதாக லீனா மணிமேகலைக்கு சிகாகோ பல்கலைக்கழகம் அழைப்பு விடுத்திருந்தது. பல்கலைகழக வளாகத்தில் செங்கடல் திரையிடவும் செய்தார்கள். மேலும் நியூயார்க் இன்டெர்னேஷனல் சென்டர் மற்றும் கொலம்பியா பல்கலைக் கழகமும் லீனாவை கௌரவித்து, படத்தையும் திரையிட்டார்கள். இங்கு வந்திருந்த பார்வையாளர்கள் அனைவரும் அமெரிக்கர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்த்திரைப்பட வரலாற்றில் முதன்முறையாக, பார்வையாளர்கள் பங்கேற்பு திட்ட்த்தின் (Crowd Funding) மூலம் http://www.indiegogo.com இணையதளத்திலும் செங்கடல் வெளியாகியுள்ளது என்பதுவும் குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் ஈழ மக்கள் அகதிகளாகப் படும் அவதிகளை ஆவணப் படமாக்கச் செல்லும் ஒரு ஊடகவியலாளரின் பார்வையில் ஈழப் போராட்டத்தைச் சொல்லும் படம்தான் இந்த செங்கடல். தோல்பாவை தியேட்டர்ஸ் சார்பில் தயாரிக்கப்பட்ட இந்தப் படம்தான் லீனா மணிமேகலையின் முதல் திரைப்படம்.
0 comments