சென்னை அணி நீக்கம்? பிசிசிஐ தலைவர் சீனிவாசன் ராஜினாமா?
சென்னை/மும்பை: நாட்டை அதிரவைத்திருக்கும் ஐபிஎல் பிக்ஸிங் விவகாரத்தில் குருநாத்துக்கு தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்கள் வெளியானால் ஐபிஎல் போட்டிகளில் இருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நீக்கப்படக் கூடும். மேலும் குருநாத் மருமகன் என்பதால் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் (பிசிசிஐ) பதவியில் இருந்து சீனிவாசனும் ராஜினாமா செய்யக் கூடும் எனக் கூறப்படுகிறது.
3 கிரிக்கெட் வீரர்கள் கைதுடன் தொடங்கிய பிக்ஸிங் புயல் நாளுக்கு நாள் வலுத்துக் கொண்டே வருகிறது. எப்பொழுது கரையைக் கடக்குமோ தெரியவில்லை.. ஆனால் ஏராளமான பெருந்தலைகளை உருட்டி விளையாடி வருகிறது. புக்கிகள், பாலிவுட் நடிகர் என விரிந்த இந்த புயல் இப்போது சென்னை, மும்பை, டெல்லி, ஹைதராபாத் என பல நகரங்களைத் தாக்கி வருகிறது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை செயல் அதிகாரியும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவர் சீனிவாசனின் மருமகனுமான குருநாத் மெய்யப்பனுக்கும் மும்பையில் கைது செய்யப்பட்ட பாலிவுட் நடிகர் வின்துவுக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. ஐபிஎல் பெட்டிங்கில் ரூ1 கோடியை குருநாத் இழந்திருப்பதாக வின்து வாக்குமூலம் கொடுத்ததாகவும் செய்திகள் வெளியாகின. இதனால் மும்பை போலீசார் சென்னை வந்து குருநாத்தை தேடினர். ஆனால் அவர் கொடைக்கானலுக்குப் போய்விட்டார். இதனால் அவர் இன்று ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பப்பட்டது.
ஆனால் குருநாத்தோ கால அவகாசம் கோரினார். இதை மும்பை போலீசார் நிராகரிக்க ஆடிப்போய் மும்பைக்கு பயணப்பட்டுவிட்டார் குருநாத். இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய மூத்த அதிகாரிகள் இன்று மும்பையில் கூடி ஆலோசனை நடத்தி இருக்கின்றனர். ஒருவேளை குருநாத்துக்கு இந்த விவகாரத்தில் தொடர்பு இருப்பது உறுதியானால் 2 நடவடிக்கைகளை இந்திய கட்டுப்பாட்டு வாரியம் மேற்கொள்ளக் கூடும். குருநாத், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை செயல் அதிகாரி என்பதால் ஐபிஎல் போட்டிகளில் இருந்தே அந்த அணியை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் நீக்கலாம். அதேபோல் மருமகன் குருநாத் என்பதால் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் பொறுப்பில் இருந்து சீனிவாசனையும் ராஜினாமா செய்யக் கோரலாம் என்கிறது மும்பை வட்டாரங்கள்.. சீனிவாசன் பதவியில் இருந்து விலக வேண்டும் என்று ஏற்கெனவே அரசியல் தலைவர்கள் கோரி வருகின்றனர்.
ஆனால் பி.சி.சி.ஐ. தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்யப் போவதில்லை என்று சீனிவாசன் தெரிவித்துள்ளார். தமது மருமகன் மீது குற்றம்சாட்டப்படும் பிக்ஸிங் நடவடிக்கைகள் பற்றி எனக்கு எதுவும் தெரியாது என்பதுதான் சீனிவாசனின் நிலைப்பாடு. இது பற்றி மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் ஜிதேந்திர சிங்கிடம் கேட்டபோது, அவை தார்மீக பிரச்சினைகள். இதனால் அவர் பதவி விலகுவது பற்றி தனிப்பட்ட முறையில் அவர்களாகவே சிந்திக்க வேண்டும் என்றார்.
0 comments