தொலைதூர பஸ்களில் செல்லும் டிரைவர்களுக்கு ஹெல்மெட்
தொலை தூர பஸ்களில் செல்லும் டிரைவர்களுக்கு கல்வீச்சு சம்பவத்தால் பாதிப்பு ஏற்படக்கூடாது என்று அரசு போக்குவரத்துக் கழகம் ஹெல்மெட் வழங்கி வருகிறது.
கல்வீச்சு சம்பவம்
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக நடந்து வரும் கல்வீச்சு சம்பவத்தால் அரசு பஸ் டிரைவர்கள் பாதிக்கப்பட்டு காயமடைந்து வருகின்றனர். இதனால் அந்த பஸ்களில் பயணம் செய்து வரும் பயணிகள் மிகுந்த பாதிப்படைவதால் இந்த நிலையை போக்கி விபத்தை தவிர்க்கும் விதமாக தொலை தூர பஸ்களை ஓட்டிச்செல்லும் டிரைவர்களுக்கு ஹெல்மெட் வழங்குவது என முடிவு செய்யப்பட்டது. தமிழகம் முழுவதும் குறிப்பாக பிரச்சினைக்குரிய கும்பகோணம், விழுப்புரம், சேலம் ஆகிய கோட்டங்களைச்சேர்ந்த பஸ்களை ஓட்டும் டிரைவர்களுக்கு ஹெல்மெட்டுகளை வழங்க முடிவு செய்யப்பட்டதாக தெரிகிறது.
ஹெல்மெட் வழங்கும் நிகழ்ச்சி
அதன்படி கும்பகோணம் பஸ்நிலையத்தில் நேற்று தொலைதூரம் செல்லும் பஸ்களின் டிரைவர்களுக்கு ஹெல்மெட் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கும்பகோணம் பஸ் நிலையத்தில் போக்குவரத்து துணை மேலாளர்(வணிகம்) ராஜேந்திரன் மறறும் போக்குவரத்து விபத்து ஆய்வாளர் சிதம்பரநாதன் உள்ளிட்டோர் டிரைவர்களுக்கு ஹெல்மெட் வழங்கினர். தொலைதூரம் செல்லும் பஸ்களின் டிரைவர்கள் 200 பேருக்கு ஹெல்மெட் வழங்கப்பட உள்ளதாக அந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.
0 comments