டீசல் விலை கிர்ர்... லிட்டருக்கு ரூ 1.10 உயர்வு!
டீசல் விலை லிட்டருக்கு ரூ.1.10 உயர்த்தப்பட்டுள்ளது. இந்த ஆண்டில் டீசலுக்கு விலை உயர்த்தப்படுவது இது 4-வது முறையாகும். நேற்று நள்ளிரவிலிருந்து இந்த விலை உயர்வு அமலுக்கு வந்தது. இப்போதுள்ள உயர்வின்படி சென்னையில் ஒரு லிட்டர் ரூ 52.92 ஆக விற்பனை செய்யப்படும். தலைநகர் டெல்லியில் ரூ.1.02 உயர்த்தப்பட்டு ரூ.49.69 ஆகவும், மும்பையில் ரூ.1.12 உயர்த்தப்பட்டு ரூ.56.04 ஆகவும், கொல்கத்தாவில் ரூ.1.06 உயர்த்தப்பட்டு ரூ.53.97 ஆகவும் டீசல் விற்பனை செய்யப்படும். உள்ளூர் வரிகள் காரணமாக ஊருக்கு ஊர் இந்த விலை மாறுகிறது. டீசல் விற்பனையில் ஏற்படும் நஷ்டத்தை ஈடுகட்ட மாதம்தோறும் 50 காசுகள் உயர்த்த திட்டமிட்டிருப்பதாக எண்ணெய் நிறுவனங்கள் கடந்த ஜனவரி மாதம் அறிவித்தன. கடந்த மார்ச் மாதம் லிட்டருக்கு 45 காசு உயர்த்தப்பட்டது. ஜனவரி, பிப்ரவரியிலும் இதே அளவு விலை உயர்வு இருந்தது. ஆனால் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்ற ஏப்ரல் மாதத்தில் விலை உயர்த்தப்படவில்லை. நாடாளுமன்ற கூட்டத் தொடர் முடிந்தவுடன், இப்போது மீண்டும் விலை உயர்த்தப்பட்டுள்ளது. ஏப்ரலில் விலை உயர்த்தப்படாததற்கு கர்நாடக சட்டமன்றத் தேர்தலும் ஒரு காரணமாகும்.
0 comments