உயிருக்கு போராடிய பக்தர்களிடமும்
சாமியார் போர்வையில் கொள்ளையடித்தவர்கள் மீட்பு பணி ஹெலிகாப்டரில் வர முயன்றபோது பிடிபட்டனர்
ரூ.1 கோடி ரொக்கம்-நகைகள் மீட்பு
புதுடெல்லி, ஜூன் 26:-
கேதார்நாத் மழை - வெள்ள சேத துயரங்களுக்கு இடையே, உயிருக்கு போராடிய பக்தர்களிடம் கொள்ளையடித்தவர்கள் பிடிபட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து ரூ.1 கோடிக்கும் அதிகமான ரொக்கப்பணம் மற்றும் தங்க நகைகள் மீட்கப்பட்டு உள்ளன.
வரலாறு காணாத மழை-வெள்ளத்தினால், ‘இமாலய சுனாமி’ என்று அழைக்கும் அளவுக்கு உத்தரகாண்ட் மாநிலத்தில் மிகப்பெரிய உயிர்ச்சேதம் ஏற்பட்டுள்ளது. புனித தலமான கேதார்நாத் மிகவும் அதிக அளவுக்கு இந்த வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு உள்ளது. அந்த கோவிலுக்கு வந்த ஏராளமான பக்தர்கள் பலியானார்கள்.
அவர்களுடைய உடல்கள் அனைத்தும் அகற்றப்பட்டு, கேதார்நாத் கோவிலில் வழிபாடு தொடங்கியது. இந்த நிலையில், கடந்த ஒரு வாரமாக வெள்ளத்தின் பிடியில் சிக்கித்தவித்த கேதார்நாத்தில் பலியானவர்களிடமும், உயிருக்கு போராடிய பக்தர்களிடமும் சாமியார் போர்வையில் சிலர் கொள்ளையடித்து இருப்பது நெஞ்சை பதைபதைக்க வைக்கிறது.
அப்படி கொள்ளையில் ஈடுபட்ட சிலர், மீட்பு பணியில் ஈடுபட்டுள்ள இந்தோ-திபெத்திய எல்லை பாதுகாப்பு படை போலீசார் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படையினரால் கைது செய்யப்பட்டு உள்ளனர். வெள்ளப்பகுதியில் இருந்து மீட்கப்பட்டவர்களுடன் அந்த கொள்ளையர்களும் ஹெலிகாப்டரில் வர முயன்றபோது பிடிபட்டனர்.
அவர்களில் சிலர் சுமக்க முடியாத அளவுக்கு கனமான பைகளை வைத்திருந்தனர். அந்த பைகளுடன்தான் ஹெலிகாப்டரில் ஏறுவோம் என்று அவர்கள் அடம் பிடித்ததால் மீட்பு படையினருக்கு சந்தேகம் ஏற்பட்டது. உடனே அவர்களுடைய உடமைகளை சோதனையிட்டபோது, அந்த பைகளில் பக்தர்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட நகைகளும், கட்டுக்கட்டாக கரன்சி நோட்டுகளும் இருந்ததைப் பார்த்து அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
உடனடியாக அந்த கொள்ளையர்களை பிடித்த அதிகாரிகள், மாவட்ட கலெக்டர்களிடம் ஒப்படைத்தனர். அவர்களிடம் இருந்து ரூ.1 கோடியே 14 லட்சத்து 83 ஆயிரம் மதிப்புள்ள ரொக்கப்பணம் மற்றும் தங்க நகைகள் மீட்கப்பட்டன. அவர்களில் ஒருவன் வைத்திருந்த டோலக்கில் (டிரம்) ரூ.62 ஆயிரம் இருந்தது. மற்றொருவன் வைத்திருந்த பிரசாத பொட்டலத்தில் ரூ.10 ஆயிரமும், இன்னொருவனின் ஆடைகளுக்குள் ரூ.1.2 லட்சமும் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது.
ஹெலிகாப்டரில் ஏறுவதற்காக வரிசையில் காத்து நின்ற சில கயவர்களிடம், பயன்படுத்தப்படாத புத்தம் புது கரன்சி நோட்டுகள் தொடர் நம்பர் வரிசையுடன் வைத்திருந்ததும் தெரிய வந்தது. அவை கேதார்நாத்தில் உள்ள ஒரே வங்கியில் இருந்து கொள்ளையடிக்கப்பட்டு இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
குப்தகாசியில் நேற்று ராணுவத்தினரால் கைது செய்யப்பட்ட ஒருவனிடம் பெண் பக்தர்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட ரூ.3 லட்சம் நகைகள் கைப்பற்றப்பட்டன. வெள்ளத்தில் பலியான பக்தர்களின் உடலில் உள்ள நகைகளை மட்டுமின்றி, உயிருக்கு போராடிய பக்தர்களிடம் இருந்தும் அவர்கள் கொள்ளையடித்தது தெரிய வந்துள்ளது. சில உடல்களின் கை விரல்களை வெட்டி எடுத்தும் நகைகளை எடுத்து இருப்பதும் தெரிய வந்துள்ளது.
கேதார்நாத்தில் உள்ள பிரதான கோவிலில் உள்ள உண்டியல்கள் பாதுகாப்பாக உள்ளன. அதே நேரத்தில் மற்ற சிறு கோவில்களில் இருந்த உண்டியல்களும் உடைக்கப்பட்டு பணம் கொள்ளையடிக்கப்பட்டு உள்ளது.
0 comments