உத்தர்கண்டில் மீட்பு பணியில் ஈடுபட்ட ஹெலிகாப்டர் விபத்து
19 பேர் பலி ?
டேராடூன்: உத்தர்கண்டில் மீட்பு பணியில் ஈடுபட்ட ஹெலிகாப்டர் விபத்திற்குள்ளானதில் 19 பேர் பலியானதாக அஞ்சப்படுகிறது. இதுவரை 8 பேரது உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
உத்தர்கண்ட்டில் கவுரிகுந்த் பகுதியில் மீட்பு பணியில் ஈடுபட்டிருந்த இந்திய விமானப்படைக்கு சொந்தமான எம்.ஐ., 17 வி 5 ரக ஹெலிகாப்டர் விபத்திற்குள்ளானது. கேதர்நாத் பகுதியிலிருந்து ஹெலிகாப்டர் திரும்பும் போது இந்த விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் 19 பேர் பலியாகியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இதுவரை 8 பேரது உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
இது குறித்து தேசிய பேரிடர் நிவாரண மைய துணைத்தலைவர் எம் சசிதர் ரெட்டி கூறுகையில், விபத்திற்குள்ளான ஹெலிகாப்டரில் 19 பேர் இருந்தனர். இதுவரை 8 பேரது உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. எஞ்சியுள்ளவர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது என கூறினார். மேலும் அவர், விபத்திற்குள்ளான ஹெலிகாப்டரில், இந்திய விமானப்படை மற்றும் துணை ராணுவப்படை வீரர்கள் இருந்தனர் என கூறினர்.
இந்திய விமானப்படை செய்தித்தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், எம்.ஐ., 17 வி 5 ரக ஹெலிகாப்டர் கவுசார் பகுதியிலிருந்து குப்த்காசி மற்றும் கேதர்நாத் சென்றது. பின்னர் கேதர்நாத் பகுதியிலிருந்து திரும்பும் வழியில் ஹெலிகாப்டர் கவுரிகுந்த் பகுதியில் விபத்திற்குள்ளானது. இந்த சம்பவத்தில் மூன்று விமானப்படை வீரர்கள் பலியானார்கள் என கூறினார்.
ருத்ரபிரயாக் எஸ்.பி., வரிந்தெர்ஜீட் கூறுகையில், சம்பவத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை குறித்து இதுவரை தெரியவில்லை. ஆனால் பலி எண்ணிக்கை அதிகமாக இருக்கும். மோசமான வானிலை காரணமாக விபத்து ஏற்பட்டது என கூறினார்.
விபத்திற்க்குள்ளான ஹெலிகாப்டர், கேதர்நாத்திற்கு இரண்டு முறை சென்று மீட்பு பணியில் ஈடுபட்டது. மூன்றாவது முறையாக மீட்பு பணிக்கு சென்ற போது விபத்து ஏற்பட்டது. மழை மற்றும் பனிப்பொழிவு காரணமாக ஏற்பட்ட மோசமான வானிலை காரணமாக விபத்து ஏற்பட்டது. இந்த ஹெலிகாப்டர், கிழக்கு விமானப்படைக்கு சொந்தமான பாரக்போர் விமான படை தளத்திலிருந்து மீட்பு பணிக்காக வரவழைக்கப்பட்டது. விபத்து குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த விபத்து காரணமாக மீட்பு பணிகள் நிறுத்தப்படவில்லை எனவும், தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் இந்திய விமானப்படை கூறியுள்ளது.
இந்த வாரத்தில் நடைபெறும் இரண்டாவது ஹெலிகாப்டர் விபத்து இது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த வாரம் நிவாரண பொருட்களை ஏற்றிக்கொண்டு சென்ற விமானம் கவுரிகுந்த் பகுதியில் விபத்திற்குள்ளானது. இதில் விமானி படுகாயமடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ரஷ்யாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட எம்.ஐ., 17 வி5 ரக ஹெலிகாப்டர் கடந்த வருடம் இந்திய விமானப்படையில் சேர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
0 comments