கேபிள் டி.வி.க்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கக்கூடாது: மேலாண்மை இயக்குனர் எச்சரிக்கை
தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனம் கேபிள் டி.வி. சேவையினை குறைந்த கட்டணத்தில் வழங்கும் பொருட்டு இலவச சேனல்கள், கட்டண சேனல்கள், உள்ளூர் சேனல்கள் உள்பட 90 முதல் 100 சேனல்கள் ரூ.70 என்ற கட்டணத்தில் அளித்து வருகிறது.
ஆனால் இதற்கு மாறாக சில கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் அரசு நிர்ணயித்த மாத சந்தாவை விட பொதுமக்களிடம் இருந்து கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக இன்னமும் புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. எனவே அரசு நிர்ணயித்த மாத சந்தா தொகை ரூ.70ஐ விட பொதுமக்களிடம் இருந்து கூடுதல் கட்டணம் வசூலிக்கக் கூடாது என தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. சிக்னலை பயன்படுத்தும் அனைத்து கேபிள் டி.வி. ஆபரேட்டர்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அவ்வாறு கூடுதல் கட்ட ணம் வசூலிக்கும் கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கூடுதல் சந்தா கோரும் கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் பற்றி பொதுமக்கள் மாவட்ட கேபிள் டி.வி. துணை மேலா ளரிடம் 94980 02583 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்.
மேலும் கேபிள் டி.வி. சேவைக்கான மாத சந்தா தொகை ரூ.70-ஐ கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் மூலமாக மட்டுமின்றி தமிழ் நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்துக்கு ஆன்லைன் மூலம் அல்லது இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர் சீஸ் வங்கி போன்ற வங்கிகள் மூலமாகவோ சந்தாதாரர்களே நேரடியாக மாத சந்தா தொகையினை செலுத்தலாம்.
மேலும் ஆன்லைன் மற்றும் சலான் மூலம் நேரடியாக தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்துக்கு மாத சந்தா செலுத்தும் சந்தாதாரர்களுக்கு வழக்கம்போல கேபிள் சேவை அளித்து எவ்வித புகாருக்கும் இடமின்றி செயல்பட வேண்டும் என்று கேபிள் டி.வி. ஆபரேட்டர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த தகவலை அரசு கேபிள் டி.வி. மேலாண்மை இயக்குனர் தெரிவித்தார்.
0 comments