கால் இல்லாத நிலையிலும் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி இந்திய வீராங்கனை அருணிமா சாதனை
காத்மண்டு, மே 21:
உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தின் மீது ஏறுவது என்பது மிகப்பெரிய சாதனையாக கருதப்படுகிறது. அதுவும் ஒரு காலை இழந்த நிலையில் நடைபயணம் மேற்கொண்டு சிகரத்தை எட்டுவது சாமானிய மனிதர்களால் முடியாது. ஆனால் அந்த சாதனையை நிகழ்த்தி காட்டியிருக்கிறார் அருணிமா சின்கா.
அருணிமா சின்கா (வயது 25), உத்தர பிரதேச மாநிலம் அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர். வாலிபால் வீராங்கனையான அருணிமா, கடந்த 2011ம் ஆண்டு ஏப்ரல் 12-ம் தேதி லக்னோவில் இருந்து டெல்லிக்கு ரெயிலில் பயணம் செய்தபோது, நகை பறிக்கும் கும்பல் அவரை கடுமையாகத் தாக்கி ஓடும் ரெயிலில் இருந்து தள்ளிவிட்டது. இதில் அவர் தனது இடது காலை இழந்தார்.
ஒரு காலுடன் தத்தித் தத்தி நடந்த அவர் மீது அவரது குடும்பத்தார் மிகவும் இரக்கம் காட்டினர். இதனால் கூனிக் குறுகிப்போன அவர், தன் வாழ்நாளில் எதாவது சாதனை ஏற்படுத்த வேண்டும் என முடிவு செய்தார்.
எவரெஸ்ட் மலையேற்றம் தொடர்பான தகவல்கள், சாதனை வீரர்களைப்பற்றி படித்து தெரிந்துகொண்ட அவர் தானும் எவரெஸ்ட் சிகரத்தில் ஏற வேண்டும் என்று விரும்பினார். குடும்பத்தில் உள்ளவர்கள் எதிர்ப்பு தெரிவித்தபோதிலும், அவரது முயற்சிக்கு மூத்த சகோதரரும், பயிற்சியாளரும் ஊக்கம் அளித்தனர். அத்துடன் உத்தரகாசியில் உள்ள டாடா ஸ்டீல் அட்வென்ச்சர் பவுண்டேசனில் இணைந்து மலையேற்ற பயிற்சி பெற்றார்.
அதன்பின்னர் எவரெஸ்ட் சிகரத்தை நோக்கி பயணம் மேற்கொண்ட அருணிமா, இன்று காலை 10.55 மணிக்கு சிகரத்தை எட்டினார். இதன்மூலம் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல் மாற்றுத்திறனாளி இந்தியர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
0 comments