கட்சியை பலப்படுத்த போராட தயாராகும் தே.மு.தி.க
கட்சியை பலப்படுத்தும் வகையில், மாநிலம் முழுவதும், முக்கிய பிரச்னைகளை மையப்படுத்தி, போராட்டம் நடத்த, தே.மு.தி.க., தலைமை தயாராகி வருகிறது. கடந்தாண்டு, ஆகஸ்ட் மாதம், தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து, பொதுக்கூட்டங்களில் பேசினார். இதில், அரசையும், முதல்வரையும் கடுமையாக விமர்சனம் செய்து பேசியதாக கூறி, பல்வேறு மாவட்ட கோர்ட்டுகளில், அவர் மீது, அரசு தரப்பில், அவதூறு வழக்குகள் தொடரப்பட்டன. இவ்வழக்குகளுக்கு பின், பொதுக்கூட்டம், கட்சி நிகழ்ச்சிகள், பத்திரிகையாளர்கள் சந்திப்பு போன்றவற்றை விஜயகாந்த் தவிர்த்து வந்தார். சட்டசபை நிகழ்ச்சிகளுக்கு செல்லாமல், கட்சி அலுவலகத்தில் இருந்தபடி, எம்.எல்.ஏ.,க்களுக்கு அவ்வப்போது ஆலோசனை மட்டும் வழங்கி வந்தார்.
அ.தி.மு.க., - தி.மு.க., உள்ளிட்ட கட்சியினர், மிகுந்த பரபரப்பாக இயங்கும் நிலையில், இது கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் சோர்வை ஏற்படுத்தியது. இதே நிலை தொடர்ந்தால், லோக்சபா தேர்தல் நேரத்தில், தொண்டர்கள் துவண்டு விடுவார்கள் என, மாநில நிர்வாகிகள் சிலர் விஜயகாந்திற்கு ஆலோசனை கூறினர்.
இதையடுத்து, மின்வெட்டு மற்றும் பின்னலாடை தொழிற்பாதிப்பை கண்டித்து, திருப்பூரில், கண்டன பேரணி மற்றும் பொதுக்கூட்டம் அறிவிக்கப்பட்டது. விஜயகாந்த் தலைமையில் பொதுக்கூட்டம் நடந்தது. இதில், தே.மு.தி.க., தலைமை, எதிர்பாராத அளவிற்கு கூட்டம் சேர்ந்தது. இதனால், திருப்பூர் பொதுக்கூட்டம், திருப்புமுனையாக அமைந்ததாக கூறி, விஜயகாந்த் உள்ளிட்ட நிர்வாகிகள் மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது பேசிய விஜயகாந்த், தொண்டர்களை உற்சாகப்படுத்தும் வகையில், "தே.மு.தி.க., தலைமையில் கூட்டணி அமைக்கும் காலம் வரும்' என, தெரிவித்தார்.
மேலும், மற்ற திட்டங்களை போல, டாஸ்மாக் மதுக்கடைகளுக்கும் முதல்வர் பெயர் வைக்கும் போராட்டம் நடத்தப்படும் எனவும் அறிவிப்பு வெளியிடப்பட்டது. கடந்த ஆட்சிக் காலத்தில், எதிர்க்கட்சியாக இருந்த அ.தி.மு.க., மாவட்ட வாரியாக பொதுக்கூட்டங்களை நடத்தியது. இது, அக்கட்சி தொண்டர்களை தேர்தலுக்கு தயார்படுத்தும் வகையில், அமைந்தது. தேர்தலில், அக்கட்சி மிகப்பெரிய வெற்றியையும் பெற்றது. அதே பார்முலாவைதான் இப்போது, தே.மு.தி.க., கையில் எடுக்க முடிவு செய்துள்ளது. சமீபத்தில், சென்னையில் நடந்த தே.மு.தி.க., எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தில், இது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. "இதுபோன்ற ஆர்ப்பாட்டம், பொதுக்கூட்ட செலவுகளை, மாவட்ட நிர்வாகிகள் மீது, கட்சி தலைமை சுமத்துகிறது. ஏற்கனவே, செலவு செய்து, வருமானம் ஏதும் இல்லாமல், நொந்து போயுள்ள மாவட்ட நிர்வாகிகளால், இந்த சுமையை தாங்கிக்கொள்ள முடியாது. எனவே, அவர்களோடு, கட்சி தலைமையும், இந்த செலவுகளை பகிர்ந்து கொள்ளவேண்டும்' என, எம்.எல்.ஏ.,க்கள் கூறியுள்ளனர். இதை பரிசீலிப்பதாக, கட்சி தலைமை தெரிவித்துள்ளது.
இதையடுத்து, எந்தெந்த மாவட்டங்களில், என்னென்ன பிரச்னைகள் உள்ளன என்ற பட்டியலை தரும்படி, மாவட்ட செயலர்களிடம், தே.மு.தி.க., தலைமை, விவரம் கேட்டுள்ளது. இதனால், தே.மு.தி.க., தரப்பில், மாவட்ட வாரியாக, விரைவில், போராட்டங்கள் நடத்தப்படும் என, தெரிகிறது.-
0 comments