சவுதி அரேபியாவில் இருந்து 56,700 இந்தியர்கள் நாடு திரும்ப முடிவு : அமைச்சர் சல்மான் குர்ஷித்
புதுடெல்லி: சவுதி அரேபியாவில் இருந்து 56 ஆயிரத்து 700 இந்தியர்கள் தாயகம் திரும்ப விருப்பம் தெரிவித்து அங்குள்ள இந்திய தூதரகத்தில் பெயர் பதிவு செய்துள்ளனர். இந்த தகவலை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் தெரிவித்துள்ளார். சவுதி அரேபியா உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் இந்தியர்கள் உள்பட ஏராளமான வெளிநாட்டினர் பணியாற்றி வருகின்றனர். வேலை வாய்ப்புகளில் 10 சதவீதத்தை சவுதி இளைஞர்களுக்கு ஒதுக்க வேண்டும் என அந்நாட்டு அரசு அண்மையில் உத்தரவிட்டது.
இதைத் தொடர்ந்து முறையான ஆவணங்கள் இல்லாமல் சவுதியில் தங்கியிருக்கும் வெளிநாட்டினர் உடனடியாக வெளியேற வேண்டும் என உத்தரவிடப்பட்டது. இந்தியர்கள் வெளியேற அவகாசம் அளிக்க வேண்டும் என இந்திய தரப்பில் கோரிக்கை விடப்பட்டது. அதை ஏற்று, ஜூன் மாதம் வரை அவகாசம் அளிக்கப்பட்டது. ஆவணங்கள் இல்லாமல் சவுதியில் தங்கியிருக்கும் இந்தியர்கள் தங்களது பெயரை அங்குள்ள இந்திய தூதரகத்தில் பதிவு செய்து கொண்டு நாட்டை விட்டு வெளியேறுவதற்கான எக்ஸிட் பாஸ் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, இந்தியர்கள் தங்கள் பெயரை பதிவு செய்து வருகின்றனர்.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித், டெல்லியில் உருது பத்திரிகை ஒன்றுக்கு நேற்று பேட்டி அளித்தார். அப்போது, சவுதி அரேபியாவில் இருந்து வெளியேற 56 ஆயிரத்து 700 இந்தியர்கள் தங்கள் பெயரை பதிவு செய்திருப்பதாக தெரிவித்தார். அடுத்த ஒன்றரை மாதத்தில் இவர்கள் அனைவரும் தாயகம் திரும்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குர்ஷித் கூறினார். சவுதியில் உள்ள தூதரக அதிகாரிகளுக்கு உதவி செய்வதற்காக இந்தியாவில் இருந்து 10 அதிகாரிகள் அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாகவும், இந்தியர்கள் நாடு திரும்பும் விஷயத்தில் எந்த பிரச்னையும் ஏற்படாமல் இருக்க சவுதி இளவரசரை சந்தித்து பேச இருப்பதாகவும் சல்மான் குர்ஷித் தெரிவித்தார்.
0 comments