தனுஷ்கோடி கடலில் மூழ்கி 2 பேர் பலி
ராமேசுவரம், மே. 24:
திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டை சேர்ந்தவர் ரமேஷ், கோழிக்கடை அதிபர். இவரது தந்தை இறந்துவிட்டார். இதனை தொடர்ந்து தந்தைக்கு திதி கொடுக்க ரமேஷ் ஒரு காரில் ராமேசுவரம் சென்றார். அவருடன் நாகேந்திரன் உள்பட 4 பேர் சென்றனர். இன்று காலை அவர்கள் தனுஷ்கோடி கடல் அருகே உள்ள அரிச்சமுனைக்கு சென்றனர்.
அங்கு ரமேஷ் தனது தந்தைக்கு திதி கொடுத்தார். பின்னர் ரமேஷ், நாகேந்திரன் ஆகியோர் கடலுக்கு குளிக்க சென்றனர். அவர்கள் கடலில் குளித்து கொண்டு இருந்தபோது `திடீர்' என்று பேரலை வந்தது. இதில் ரமேஷ், நாகேந்திரன் சிக்கினர். அவர்களை கடல் அலை உள்ளே இழுத்து சென்றது.
இதை கரையில் இருந்து பார்த்த நண்பர்கள் கூச்சல் போட்டு அலறினர். சிறிது நேரத்தில் கடல் அலையில் சிக்கி ரமேஷ், நாகேந்திரன் ஆகியோர் பரிதாபமாக இறந்தனர். இது குறித்து ராமேசுவரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே சம்பவ இடத்திற்கு போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று கடலில் மூழ்கி இறந்த 2 பேரின் உடல்களை மீட்டனர்.
பின்னர் உடல்கள் ராமேசுவரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கடல் அலையில் சிக்கி 2 பேர் இறந்த சம்பவம் தனுஷ்கோடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
0 comments