இந்திய மாணவர்கள் அசத்தல் 20 விநாடியில் செல்போனுக்கு சார்ஜ் அளிக்கும் கெபாசிட்டர்
வாஷிங்டன் : அமெரிக்காவில் மாணவர்களுக்கான இன்டெல் அறிவியல் போட்டிகள் சமீபத்தில் நடத்தப்பட்டது. இந்த போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான விருது வழங்கும் விழா, வாஷிங்டனில் உள்ள போனிக்ஸ் திரையரங்கில் நடந்தது. இதில் இளம் விஞ்ஞானி விருது, சரடோகாவில் வசிக்கும் அமெரிக்கா வாழ் இந்திய சிறுமியான இஷா கரேவுக்கு (18) கிடைத்துள்ளது. இவரது கண்டுபிடிப்பு குறித்து செல்போன் நிறுவனங்கள் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அதாவது இவர் கண்டுபிடித்துள்ள சூப்பர் கெபாசிட்டர் கருவி அதிவேகத்தில் செல்போன்களுக்கு சார்ஜ் அளிக்கும். அதாவது வெறும் 20 முதல் 30 விநாடிகளுக்குள் செல்போனில் முழுமையாக சார்ஜ் செய்துவிடலாம். இதை மற்ற எலக்ட்ரானிக் பொருட்களுக்கும், கார் பேட்டரிகளுக்கும் கூட பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து இஷா கரே கூறுகையில், ‘‘என் செல்போனில் அடிக்கடி சார்ஜ் குறைந்து விடும். அதனால், விரைவில் சார்ஜ் அளிக்கக்கூடிய கருவியை கண்டுபிடிக்க வேண்டும் என்று விரும்பினேன். அதன் விளைவுதான் இந்த சூப்பர் கெபாசிட்டர் கருவி. நானோ வேதியியலில் மேலும் ஆராய்ச்சி செய்வதற்காக ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் படிக்க உள்ளேன்’’ என்றார்.
மிகப்பெரிய கண்டுபிடிப்பாக கருதப்படும் இந்த சூப்பர் கெபாசிட்டர் கருவி பற்றிய முழு விவரங்களை இஷா கரேவும், இன்டெல் அறக்கட்டளையும் வெளியிடவில்லை. இந்த தொழில்நுட்பம் சிறப்பாக செயல்பட்டால், அது உலகம் முழுவதும் உள்ள பல கோடி பேருக்கு உபயோகப்படும் என்பதால், அது குறித்து மேல் ஆராய்ச்சிக்கு முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அதனால் மவுனம் காக்கப்படுவதாகவும் தெரிகிறது.
இந்த கண்டுபிடிப்புக்காக இஷா கரேவுக்கு, இன்டெல் அறக்கட்டளை ரூ.27,50,000 பரிசு வழங்கி உள்ளது. இது தவிர கணித அறிவியல் பிரிவில், அமெரிக்கா வாழ் இந்திய மாணவரான வினய் அய்யங் காருக்கும், சுற்றுச்சூழல் அறிவியல் பிரிவில் நவோ ஷாவுக்கும் முதல் பரிசு கிடைத்துள்ளது. இவர்கள் இருவரும் அமெரிக்காவின் ஒரேகானில் உள்ள போர்ட்லாண்டில் வசித்து வருகின்றனர்.
0 comments